சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கக் கூடாது, நமது தேசிய முறையில் விவசாயத்தைப் பாதுக்காக்க வேண்டும், கறுப்புப் பணத்தை மீட்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி சுதேசி விழிப்புணர்வு யாத்திரை கடந்த மார்ச் 5 - ஆம் தேதி முதல் ஏப்ரல் 5 -ஆம் தேதி வரை நடைபெற்றது. தமிழகத்தின் தொழில் தலைநகரமான கோயம்புத்தூரில் இருந்து துவங்கி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம் ஆகிய நகரங்களைக் கடந்து ஏப்ரல் 2 - ஆம் தேதி மாநிலத் தலைநகரமான சென்னைக்கு வந்தடைந்தது. சென்னையில் பல இடங்களில் நடந்த தெருமுனைக் கூட்டங்களுக்கு பிறகு ஏப்ரல் 5 - ஆம் தேதி கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரியில் நிறைவு விழா நடந்தது.
யாத்திரையின் ஒருங்கிணைப்பாளர் இளங்குமார் சம்பத் வரவேற்றார். சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் மாநகர அமைப்பாளர் வானமாமலை தொகுத்து வழங்கினார். பாத யாத்திரைக்கு தலைமைத் தாங்கிய சுதேசி விழிப்புணர்வு இயக்க மாநில அமைப்புச் செயலாளர் இராம.நம்பி நாராயணன் யாத்திரை பற்றி விளக்கினார். அவருடன் யாத்திரையில் பங்குகொண்ட 5 பேரை அறிமுகம் செய்து வைத்தார். மேலும் அவர் பேசுகையில், "சென்னையில் ஒரு நிகழ்ச்சி முடிந்து சுதேசி செயல் வீரர்கள் பேசிக் கொண்டிரும் போது இந்த யாத்திரை பற்றி யோசனை வந்தது. பிறகு எங்களது மாநிலக் குழுவில் இதுகுறித்து பேசி முடிவெடுத்தோம். யாத்திரை குறித்து குருமூர்த்திஜி யோசனை கூறும் போது யாத்திரை என்பது மக்களுக்கு நாம் எதாவது சொல்வது அல்ல, மாறாக அவர்களிடம் இருந்து நாம் கற்றுக்கொள்வதே முக்கியம் என்றார். அந்த யோசனையை நாங்கள் கடைப்பிடித்தோம். 11 ஊர்களில் மக்களோடு ஒன்றாக உட்கார்ந்து அவர்களோடு உரையாடினோம். பெரும்பாலான வணிகர்கள் ஆதரவு தெரிவித்தார்கள். அவர்களோடு விவசாயிகள், வழக்கறிஞர்கள் என்று பவேறு பிரிவினர்களும் பங்கேற்றார்கள். இந்தியாவில் தறி நெய்பவர்கள் அதிகமாக உள்ள சோமனூரில் ஆண்களை தறியில் உட்கார வைத்தார்கள்; பெண்கள் படித்தால் குடும்பத்துக்கு நல்லது என்று அவர்களை பட்டபடிப்பு படிக்க வைத்தார்கள். அதனால் ஆண்களுக்கு பெண் கிடைப்பது தட்டுப்பாடாக உள்ளது. இது போன்ற பல தகவல்களை யாத்திரையில் சேகரித்தோம். யாத்திரைக்கு மக்கள் தந்த வரவேற்பு எங்களுக்கு உற்சாகம் ஏற்படுத்துகிறது" என்று பேசினார்.
வாழ்த்துரை வழங்கிய தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் செயலாளர் கே.மோகன். "இப்போது சில்லறை வணிகம் குறித்து வந்துள்ள சட்டம் இது ஜனநாய நாடா? என்ற கேள்வியை எழுப்புகிறது. பழ வியாபாரம் செய்யும் சாதாரண பெண்மணி கூட லைன்சென்ஸ் வாங்க வேண்டும் என்பது அபாயக்கரமானது. வணிகர்களை மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினரையும் இந்த யாத்திரை இணைத்துள்ளது. இது ஒரு முன்னோடி யாத்திரை" என்று புகழாரம் சூட்டினார்.
சிறப்புரையாற்றிய தேசிய சுயமரியாதை இயக்கத்தின் தலைவர் கே.என்.கோவிந்தாச்சார்யா, தனது உரையில்,
"பல்வேறு நாடுகளில் பணியாற்றி விட்டு நமது தேச விடுதலைக்காக போராடுவதற்காக மகாத்மா காந்தி பாரதம் வந்த போது, அவரது குரு கோபால கிருஷ்ண கோகலே நாடு முழுவதும் யாத்திரை வர சொன்னார். அதன் மூலம் இந்த நாட்டு மக்களிடம் இருந்து கற்று கொள்ள முடியும் என்றார். அதனால் தான் காந்தி மிகபெரிய தலைவர் ஆனார்.
இந்த நாட்டில் உள்ள ஆறு லட்சம் கிராமங்களில் 90 கோடி மக்கள் வசிக்கிறார்கள். 9000 நகரங்களில் வெறும் 30 கோடி மக்கள் தான் வசிக்கிறார்கள். 45 கோடி மக்கள் கிராமங்களை மையமாக வைத்து வாழ்கிறார்கள். இங்கு வருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னால் பிரேசில் நாட்டை சார்ந்தவர் ஒருவரை சந்தித்தேன். அவர் உத்தர பிரதேசமும், பிரேசிலும் ஒன்றாக இருப்பதாக கூறினார். அதற்கு நான் சொன்னேன், மக்கள் தொகை, சாலைகள், நிலப்பரப்பு போன்ற சில ஒன்றாக இருக்கலாம்; அனால் மக்களில் சிந்தனைகள் வேறாக தான் இருக்கும். இங்கு நதியை 'கங்கா மாதா' என்று தொழுகிறார்கள்; ஆனால் அவர்களுக்கு அது வெறும் தண்ணீர் தான். அங்கு கிளப்புகள் இருக்கின்றன. ஆனால் அங்கிருப்பவர்களும் நம் நாட்டில் இருக்கும் நிர்வாண சந்நியாசிகளும் ஒன்றா? இந்த நாட்டை கூகிள் தேடுதளம் மூலமாக பார்த்து அறிய முடியாது. யாத்திரை மூலமாகவே அறிய முடியும். மற்றயவர்களை பார்த்து நாம் காப்பி அடிக்க முடியாது.
உலகத்தில் 206 நாடுகள் உள்ளன. ஆனால் ஆறில் ஒரு பங்கு மக்கள் தொகை நம்மிடம் தான் உள்ளது. சீனாவில் மட்டும் தான் அவ்வளவு ஜனத்தொகை உள்ளது. அமெரிக்கா உட்பட 7 நாடுகளில் 10 கோடிக்கு மேல் 30 கோடி வரை ஜனத்தொகை; 46 நாடுகளில் 1 கோடிக்கு மேல் 10 கோடி வரை ஜனத்தொகை. மற்ற நாடுகள் எல்லாம் அதற்கு கீழே தான். நம் நாட்டில் குருடர்கள் மட்டும் 90 லட்சம பேர். இந்த நிலையில் நாம் மற்றவர்களை பார்த்து காப்பி அடித்தால் யானைக்கும் சுண்டெலிக்கும் முடிச்சு போடுவதே. நாம் நம் வழியில் போவது தான் சரிப்பட்டு வரும். இங்கிலாந்துக்கும் நமக்கும் இருக்கும் வாழ்க்கை முறைகள் வேறு. அதை எப்படி காப்பி செய்ய முடியும்.
உலகத்தில் இரண்டு சதவீத நிலப்பரப்பு கூட நம்மிடம் இல்லை. ஆனால் 60 சதவீத பறவைகள் நம் நாட்டில் தான் உள்ளன. இங்கிலாந்தில் குளிர் அதிகம். அதனால் காலுக்கு சாக்ஸ் போடுகிறார்கள். நமக்கு சூரியனின் அருள் அதிகம். அதனால் வெப்பம் அதிகம். அவர்களுக்கு சாப்பிட மாட்டுக்கறி தேவை. நமக்கு மாடு கோமாதா. அதனால் நமது முறையே நமக்கு சரியாக வரும்.
200 வருடங்களுக்கு முன்பு வரை பாரதம் தான் உலகத்தின் பணக்கார நாடாக இருந்தது. எனவே நமக்கு உலக நாடுகளுக்கு வழிகாட்டும் நம்பிக்கை வேண்டும். ஆனால் நமது ஆட்சியாளர்களாக இதுவரை இருந்தவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை தான் உள்ளது. இது தான் நமது பிரச்சனைகளுக்கு காரணம். எனவே முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் நம்பிக்கையுடன் நம் நாட்டை முன்னேற்றி உலகத்துக்கு வழிகாட்டும் நாடாக மாற்றுவோம்". இவ்வாறு கோவிந்தாச்சார்யா பேசினார்.
அடுத்து உரையாற்றிய சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் அகில பாரத இணை அமைப்பாளரும், பிரபல பத்திரிகையாளருமான எஸ்.குருமூர்த்தி பேசுகையில்,
"சமுதாயத்தின் மூலம் பெறுகின்ற படிப்பினையை எந்த நூலகத்திலும், பத்திரிக்கைகளையும் படித்து தெரிந்து கொள்ள முடியாது. ஆதி சங்கரர் நாடு முழுவதும் யாத்திரை போனது அத்வைதத்தை பரப்புவதற்காக அல்ல.நாடு மக்க்களிடம் இருந்து தெரிந்துக் கொள்வதற்காக தான். உப்பு சத்தியாகிரகம் தொடங்கிய பொது காந்திஜிக்கு புத்தி பேதலித்து விட்டதாக சில தலைவர்கள் கூட சொன்னார்கள். அகமதாபாத்தில் இருந்து 15 மைல் கடந்து ஒரு கிராமத்துக்கு இரவு 10.30 மணிக்கு பிறகு தான் யாத்திரை வந்தது. அந்த நேரத்தில் உடன் வந்த 150 பேருக்கும் உணவு தயாரிக்க சொன்னார் காந்திஜி. மக்களும் தயாரித்து தந்தார்கள். யாத்திரை தொடங்கும் போது 15 பேர் தான் அவருடன் வந்தார்கள். முடியும் போது வந்தவர்கள் ஒன்றரை லட்சம் பேர். அத்தனை பேருக்கும் உணவு தயாரித்தது சாதாரண மக்கள் தான். மக்களின் உணர்வை தெரிந்துக் கொண்டதாலேயே காந்தி மாபெரும் தலைவர் ஆனார்.
எனக்கு சிறிய அளவில் யாத்திரை போன அனுபவம் உண்டு. அது பாத யாத்திரை அல்ல. 1993-ல் உலகமயமாக்கலின் போது நாட்டில் உள்ள 42 தொழிற்கூடங்களுக்கு குஜராத் முதல் தூத்துக்குடி வரை சென்றோம். சுமார் நான்கு வருடங்கள் அந்த இடங்களுக்கு போன பிறகு எங்களுக்கு வந்த தெளிவுக்கு பின்னர் நாங்கள் சொன்னது அப்படியே நடந்தது. நம் நாட்டுக்கு அந்நிய முதலீடு பெரிய அளவில் கிடைக்காது என்றோம். எட்டு சதவீத அந்நிய முதலீட்டை எதிர்பார்த்தனர். ஆனால் கடந்த 18 வருடங்களில் வந்த அந்நிய முதலீடு வெறும் 1.2% தான். சேமிப்பு 23% -இல் இருந்து 37%-மாக உயர்ந்தது. காரணம் நமது குடும்பங்கள் தான்.
அப்போது திருப்பூருக்கும் சென்றோம். அங்கு உள்ள முதலாளிகள் அங்கு உள்ள குறுகிய சாலைகளில் டி.வி.எஸ். வண்டியில் தான் பயணிக்கிறார்கள். அறுபது சதவீத ஏற்றுமதியாளர்கள் வெறும் எட்டாம் வகுப்புக்கும் கீழே படித்தவர்கள். ஏழு சதவீதம் பேர் மட்டுமே பட்டதாரிகள்.
குஜராத் மாநிலம் மோர்விக்கும் சென்றோம். அவர்கள் பல இயற்கை சீற்றங்களுக்கு பிறகும் நிமிர்ந்து நிற்கிறார்கள். குஜராத் மாநிலம் சூரத் 20 வருடங்களுக்கு முன்னால் சுற்று வட்டார கிராமங்களின் மக்கள் செய்த கழிவுகளால் சுத்தமின்றி கிடந்தது. அந்த சுற்று வட்டாரத்தினர் நகை செய்யும் வித்தையை கற்றுக் கொண்டனர். இன்று ஒவ்வொரு கிராமமும் ஒரு தொழிற் கூடமாக காட்சி அளிக்கிறது. உலகத்தில் உள்ள வைர உற்பத்திகளில் மூன்றில் இரண்டு பங்கு அங்கு தான் நடக்கிறது.
2001- ஆம் ஆண்டு உலக பொருளாதார வரலாறு எழுதப்பட்டது. அதில் பாரத நாடு தான் 1750 வரை பெரிய முன்னேறிய நாடாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளனர். 1800 வரை இன்றுள்ள பல வளர்ந்த நாடுகள் கீழ் நிலையில் தான் இருந்தன. அந்த நிலையில் நாம் இருந்ததற்கு எந்த பயிற்சி நிலையமும் காரணம் அல்ல. சமுதாயமே காரணம். இதை சமூக மூலதனம் என்று மேலை நாடுகள் இப்போது சொல்கின்றன.
நமக்கு மட்டுமல்லாமல் பல நாடுகளுக்கும் கண்கவர் நாடாக அமெரிக்கா இருந்தது. ஆனால் குடும்ப சீரழிவுகளின் காரணமாக அங்கு பொருளாதாரம் வீழ்ச்சி பெற்று வருகிறது. இப்போது அவர்கள் கடனில் இருந்து மீள 104 ட்ரில்லியன் டாலர்கள் தேவை.
கடந்த 20 வருட பொருளாதார ஆய்வில் நாங்கள் தெரிந்துக் கொண்ட உண்மை, நமது பொருளாதாரத்துக்கும், அரசாங்கத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பது தான். காரணம் அதை நாங்கள் புரிந்துக் கொண்டது பத்திரிக்கையை பார்த்து அல்ல. மக்களை பார்த்து தான்" என்று எஸ்.குருமூர்த்தி பேசினார்.
யாத்திரையின் மாநகர ஒருங்கிணைப்பாளர் சுந்தர் நன்றி கூறினார்.
ஆர்.எஸ்.எஸ். வடதமிழக அமைப்பாளர் பக்தவத்சலன், வடதமிழக இணை செயலாளர் எஸ்.சாம்பமூர்த்தி, சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் தமிழக - கேரளா அமைப்பு செயலாளர் பிஜு உட்பட ஏராளமானோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
தங்களின் இந்த பதிவு சிறப்பாக உள்ளது. எந்த ஒரு விஷயத்தையும் இணையத்தில் உடனுக்குடன் பதிவேற்றுவது அவசியமாக உள்ளது. இது அனைவருக்கும் பயன்படும். நன்றி.
ReplyDelete