Saturday, July 21, 2012
புத்தக மதிப்புரை - தர்மத்தின் குரல்
நூல் பெயர்: தர்மத்தின் குரல்
ஆசிரியர்: பூஜ்யஸ்ரீ பரமானந்த பாரதி சுவாமிகள் (ஆங்கிலம்)
தமிழாக்கம்: கடலூர் என்.ஆர்.சத்தியமூர்த்தி
வெளியீடு: ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம மண்டலி,
138, புது நகர், திருப்பூர் & 641601.
செல்: 94434 95950, 99522 66676
விலை: ரூ. 100/--&
கடவுள் இருக்கிறானா?, வேத சாஸ்திரங்கள் சொல்வதெல்லாம் உண்மை தானா?, மறுபிறவி என்பது உண்டா? என்ற கேள்வி நம் நாட்டில் உள்ள அனைவருக்கும் பொதுவானவை. ஹிந்துக்களுக்கும், மற்ற மதத்தினருக்கும், ஏன் இங்கிருக்கும் நாத்திகர்களுக்கும் கூட இந்த கேள்விகள் எழாமல் இருப்பதில்லை.
இன்று உலகளவில் நம் ஹிந்து தர்மத்தின் மீது நம்பிக்கைகள் பெருகி வருகின்றன. நம் தர்மம் பற்றிய நூல்களை வெளிநாட்டவர்கள் கூட விரும்பி படித்து வருகின்றார்கள். இந்த நேரத்தில் ஹிந்து தர்மம் பற்றிய அடிப்படை அம்சங்கள் அடங்கிய நூல்களும் அதிக அளவில் வெளிவருகின்றன. ஆனால் அவை வாசகர்களின் நியாயமான கேள்விகளுக்கும் கூட பதில் தருவதில்லை. இந்த புத்தகம் எளிமையான முறையில் அமைந்திருப்பதோடு நாத்திகர்களின் தர்க்க ரீதியான கேள்விகளுக்கு ஆத்திகப்பூர்வமான பதில்கள் அதே போன்ற தர்க்க வாதங்களில் அமைந்திருப்பது சிறப்பம்சம்.
இந்நூலின் ஆசிரியர், பூர்வாசிரமத்தில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கல்வி நிலையத்தில் ஆய்வாளராக இருந்ததாக இந்த நூலின் அணிந்துரையில் தெரிய வருகிறது. ஆசிரியர் தனது வேதாந்த அறிவை அறிவியல் தன்மையோடு கலந்து ஜீவன், உயிர்த்தன்மை, மறுபிறவி, வேதங்கள் போன்ற அம்சங்களை விளக்குவது இந்த புத்தகத்தின் மதிப்பைக் கூட்டுகிறது. எளிமையான முறையில் கடினமான விஷயங்களை புரிய வைப்பதில் சுவாமிகள் எடுத்துக் கொண்ட முயற்சியில் வெற்றியும் பெற்றுள்ளார்.
ஆங்கிலத்தில், ‘Foundation of Dharma’ என்ற பெயரில் வெளிவந்த புத்தகத்தை தமிழாக்கம் செய்தவர் கடலூர் என்.ஆர். சத்தியமூர்த்தி அவர்கள். அவருக்கும் நமது பாராட்டுக்கள். சிறப்பான முறையில் மொழிபெயர்ப்பு செய்துள்ளார். ஓங்காரானந்தா சுவாமிகளின் அருள்வாழ்த்துரையும் இந்த புத்தகத்திற்கு வலிமை சேர்க்கிறது. இந்த புத்தகத்தை படித்த பின்பு, ஹிந்து மதம் பற்றி சாதாரண மனிதர்கூட சரியான முறையில் புரிந்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இயல்பாகவே எழுகிறது.
புத்தகத்தின் உள்ளே...
‘‘வேதங்கள் கற்பதில் உள்ள இந்த சிரமம், வேதங்களின் சிக்கலான மொழி நடையினாலா?
விஞ்ஞானத்தின் மொழி நடையும் சிக்கலானது தான். ஒருவன், பட்டப்படிப்பு வரை 15 ஆண்டுகள், விஞ்ஞானம் கற்றாலும், அவன் கற்றது மிகச் சொற்பமே. ஆழ்ந்த அறிவுக்கு, அவன் இன்னும் பத்தாண்டுகள் படித்தாக வேண்டும். அவ்வாறே, ஒருவன் வேடங்களின் ஆழ்ந்த அறிவைப் பெற வேண்டுமானால், அவன் தன் முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தாக வேண்டும். இவ்வாறு செய்ய முடியாதவர்கள், வேதத்தின் அடிப்படை அறிவையாவது பெற வேண்டும். விஞ்ஞானத்தின் அடிப்படை அறிவையாவது பெறுவதற்காக, உயர்நிலைப்பள்ளி வரை படிப்பதை போன்றது இது. ஆனால் இத்தகையவர்கள் வேதங்களை விமர்சிக்கும் தகுதி தங்களுக்கு இருப்பதாக நினைத்துக்கொள்ளும் மாயையில் இருக்ககூடாது. இது, உயர்நிலைப்பள்ளி மாணவன் ஒருவன், நியூட்டனையோ ஐன்ஸ்டினையோ விமர்சிப்பதை ஒக்கும்’’ (பக்கம் 112).
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment