Monday, October 15, 2012

மாற்றான் திரை விமர்சனம்

தமிழில் சிறந்த படங்கள் அதிகமாக வருவதில்லை. ஒரு சில படங்களை நல்ல படங்கள் என்று சொன்னாலும் அவை நல்ல முறையில் வருவதில்லை. அந்த படங்களுக்கு மார்க்கெட் இருப்பதில்லை. வந்த வேகம் தெரியாமல் தியேட்டர்களை விட்டு வெளியேறி விடுகின்றன. நல்ல கதையமைப்பு, சிறந்த நடிப்பு, பெரிய நடிகர்கள் கொண்ட படங்கள் குறைவே. அந்த குறையைத் தீர்த்து வைக்கிறது அக்டோபர் 12ஆம் தேதி வெளியான ‘மாற்றான்’ திரைப்படம். மரபணு விஞ்ஞானியான ராமச்சந்திரனுக்கு விமலும், அகிலனும் (இரட்டை வேடம்) ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள். தனக்கு இயற்கையாகப் பிறக்கும் குழந்தைகளைக்கூட மரபணு முறையிலேயே பெற துடிக்கும் மரபணு வெறியர். மரபணு முறைகளை தெரிந்துகொண்டு சென்னையில் குழந்தைகளுக்கான பவுடரைத் தயாரிக்கும் வியாபாரம் செய்கிறார் ராமச்சந்திரன். அதை ரஷ்ய நாட்டுப் பெண் பத்திரிகையாளர் ஒருவர் அவரது தொழிற்சாலையைப் பற்றிய உண்மைகளை சேகரிக்கிறார். அந்தப் பெண் இறக்கும் நேரத்தில் தனது தந்தையின் அநியாயங்களைப் பற்றி தெரிந்துகொள்கிறான் விமல். அந்த பத்திரிகையாளர் சேகரித்த விபரங்கள் விமலின் கையில் சிக்குகின்றன. விபரங்களை பிடுங்கும்போது மகலும் பலியாகிறான். தன்னுடன் ஒட்டிப் பிறந்தவன் பலியான அதிர்ச்சியில் அகிலன் உறைந்துபோகிறான். தனது சகோதரனின் மரணத்திற்கு தனது தந்தைதான் காரணம் என்பதை கண்டறிகிறான். தந்தை தயாரிக்கும் மரபணு பால் பவுடரின் மூலம் முன்னாள் சோவியத் நாடான உக்ரைனில் இருப்பதை அறிகிறான். தனது காதலியுடன் ரஷ்யாவுக்கு செல்கிறான். மரபணு பால் பவுடரின் ரகசியத்தை கஷ்டப்பட்டு கண்டுபிடித்து எப்படி நாட்டைக் அகிலன் காப்பாற்றுகிறான் என்பதுதான் மீதிக்கதை. நமது நாட்டில் மரபணு விவசாயம் பற்றிய விழிப்புணர்வு நகரத்து மக்களிடம் இல்லை. அதை ஏதோ கிராமத்து மக்களின் வெற்றுக் கூச்சல் என்று நினைக்கிறார்கள். அது தவறு என்பதை இந்தப் படம் கோடிட்டுக் காட்டுகிறது. மரபணு தொழிற்சாலை அமைந்தால் மாடுகளின் நிலை என்ன என்பதையும் படத்தில் சொல்லியிருக்கிறார்கள். சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு, காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீடு என்று ஓவர் டோஸில் போய்கொண்டிருக்கும் மத்திய அரசு, அடுத்தது மரபணு விவசாயத்தையும் ’ஒரு கை’ பார்க்கும் தீராத வெறியில் இருக்கிறது. சரியான நேரத்தில் இந்த படம் வெளிவந்திருக்கிறது. இனிமேலாவது விழித்துக் கொள்ளட்டும். இந்த படத்தில் குறிப்பிட வேண்டிய மற்றொரு சிறப்பம்சமும் இருக்கிறது. சென்ற தலைமுறை காலத்தில் அமெரிக்காவுக்கு எதிரான வலுவான சக்தியாக ஒருங்கிணைந்த சோவியத் ரஷ்யா இருந்தது. தாங்கள் எல்லாத் துறைகளிலும் வெற்றியடைவதற்காக உலகிலுள்ள அயோக்கியத்தனங்கள் அனைத்திலும் ஈடுபட்டது. அந்த தகிடுதத்தங்களின் மூலம் கிடைத்த வெற்றிகளைக் காண்பித்துதான் நம்மூர் லெனின்களும் ஸ்டாலின்களும் ஓலமிடுகிறார்கள். 1990களில் சோவியத் யூனியன் சின்னாபின்னமான பிறகுதான் கம்யூனிஸ்டுகளின் அநியாயங்கள் சோவியத்தின் பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்களால் உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டன. கம்யூனிஸ்ட்டுகளின் மர்ம முடிச்சுகள் இந்த படத்திலும் அவிழ்க்கப்பட்டுள்ளன. தனது முயற்சியில் கதாநாயகன் சூர்யா வெற்றியடையும்போது தங்களுடைய விளையாட்டு வீரர்கள் ஊக்க மருந்தை உட்கொண்டுதான் போட்டிகளில் வெற்றியடைந்தார்கள் என்பதை சொன்னால் தங்கள் நாட்டின் மரியாதை உலக அரங்கில் சீர்குலையும் என்று உக்ரைன் நாட்டு உயரதிகாரி கெஞ்சும் காட்சியில் கம்யூனிசத்தின் நிலை அந்தோ பரிதாபம்!. தைரியமாக படம் எடுத்து கம்யூனிஸ்ட்டுகளின் அக்கிரமங்களை வெளிப்படுத்திய இயக்குநர் கே.வி. ஆனந்துக்கு வாழ்த்துக்கள். இயக்குநரை பல இடதுசாரிகள் வலைத்தளங்களில் திட்டி வருகிறார்கள். திருடனுக்கும் தேள் கொட்டினால் வியர்க்கத்தானே செய்யும்?. பாரதத்தின் கலைகளை சீனாவுக்குக் கொண்டுசென்ற போதிதர்மரைப் பற்றிய ‘ஏழாவது அறிவு’ படத்தைத் தொடர்ந்து இந்த படத்திலும் நடித்திருக்கிறார் நடிகர் சூர்யா. இப்படிப்பட்ட படங்களை அவர் தேர்ந்தெடுத்து நடிக்கிறாரா? அல்லது இயற்கையாகவே அவரை வாய்ப்புகள் தேடி வருகின்றனவா?. எப்படியிருந்தாலும் அவருக்குப் பாராட்டுக்கள். ஹாரீஸ் ஜெயராஜ் இசையில் ’கால் முளைத்த பூவே’ மட்டுமே சொல்லும்படியாக இருக்கிறது. கம்யூனிஸத் தொழிற்சங்கத் தலைவர்களின் உண்மை சொரூபம் என்ன என்பதை நகைச்சுவையாக சொல்லியிருக்கிறார்கள். படத்தில் நடித்தவர்கள் அனைவரும் தங்களது கதாபாத்திரங்களைச் சரியாக நடித்திருக்கிறார்கள். நாயகனை விவேகானந்தர், டெண்டுல்கர் ஆகியோரின் மரபணு மூலமாக பெற்றெடுப்பது, நாட்டின் உயரதிகாரிகள், விஞ்ஞானிகளாலேயே முடியாததை நாயகன் தனியாக இருந்து சாதிப்பது, நினைத்தவுடன் பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் இருக்கும் குஜராத்திற்குச் சென்று வில்லனைப் பிடிப்பது போன்ற அபந்தங்களையும் தவிர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். மக்களின் மனதில் மாற்றத்தை மாற்றான் வழியாகவும் கொண்டுவர முடியுமே?

No comments:

Post a Comment