Thursday, September 27, 2012
பிரதமரின் பயனற்ற உபதேசம்
ஒரு குடும்பத் தலைவர் தன்னுடைய குடும்பத்தின் உறுப்பினர்களிடம் கவலையோடு பேசுகிறார். நமது குடும்பத்தின் நிதி நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. சிக்கனமாக இருக்க வேண்டும். தேவையற்ற வீண் செலவுகளைக் குறைத்துக்கொள்ளுங்கள் என்று கூறுகிறார். அந்த குடும்பத்தார் அதைக் கேட்டதும் இனிமேல் சிக்கனமாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் அதே குடும்பத் தலைவர் பட்டாடை உடுத்தி சீவி சிங்காரித்து, போதையில் தள்ளாடிக்கொண்டு அதே வார்த்தைகளைச் சொல்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்த குடும்பத்தினரின் எதிர்வினை எப்படி இருக்கும்?
இப்போது அந்த குடும்பத் தலைவருடைய இடத்தில் பாரதப் பிரதமர் மன்மோகன் சிங்கை வைத்துப் பாருங்கள். எல்லாக் கணக்கும் சரியாக வரும்.
பொருளாதாரச் சீர்திருத்தச் செம்மல் டாக்டர் மன்மோகன் சிங் அண்மையில் தொலைக்காட்சியில் மக்களிடையே பேசினார். நாடு பொருளாதார ரீதியாகப் பெரும் நெருக்கடியில் இருக்கிறது என்றார். கடினமான சில நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும் என்றார். இந்தக் கஷ்ட காலத்தை வெற்றிகரமாகக் கடக்க மக்களின் ஒத்துழைப்பு தேவை என்று உருக்கமாகக் கேட்டுக்கொண்டார்.
இப்போது அந்தக் குடும்பத் தலைவரை நினைத்துப் பாருங்கள். பல லட்சம் கோடி ஊழல், நிர்வாகச் சீர்கேடு என்று பல விதமான குற்றச்சாட்டுக்களின் கறை படிந்த காங்கிரஸ் அரசின் பிரதமர் மக்களிடம் சிக்கனம், சீர்திருத்தம் என்றெல்லாம் போதனைகள் வழங்கியபோது மக்களின் மனநிலை எப்படி இருந்திருக்கும்?
இந்த போதனைகளின் பின்னணியைப் பார்ப்போம். சென்ற 20ஆம் தேதி சில்லறை வர்த்தகத்தில் நேரடி அந்நிய முதலீடு, டீசல் விலை உயர்வு, கியாஸ் சிலிண்டர் மானிய விலையில் வருடத்திற்கு ஆறு மட்டுமே வழங்கப்படும் ஆகிய மூன்று அரசு அறிவிப்புகளை எதிர்த்து நாடு தழுவிய பந்த் நடந்தது. அன்று நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளும், வியாபாரிகளும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டார்கள். மக்களும் இந்த பந்த்தை வழக்கமான பந்த் என்று நினைக்கவில்லை. இந்த பந்த் தேவைதான் என்பதை மக்கள் உணர்ந்ததாகவே தோன்றியது. பல சில்லறை வியாபாரிகள் கடைகளை அடைத்தார்கள்.
பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள், திரிபுரா, உ.பி., மத்திய பிரதேசம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பந்த் வெற்றியடைந்தது. இதில் கேரளத்தில் காங்கிரஸ் அரசு இருப்பதைக் கவனிக்க வேண்டும். தமிழகத்தில் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க. கடைசி நேரத்தில் பந்த் நடத்த ஆதரவு தந்தது. அதுவரை பந்தை ஆதரிப்பதாகச் சொல்லிவந்த அ.தி.மு.க. அரசு பந்தை புறக்கணித்தது. அரசு அலுவலகங்களும், பேருந்துகளும் வழக்கம்போலச் செயல்பட்டன. ஆனாலும் சாதாரண மக்கள் பந்த்திற்கு ஆதரவளிக்கவே செய்தார்கள். அதன் பாதிப்பு தமிழகத்தில் தெரிந்தது. தமிழ்நாடு வணிகர் சங்கமும் வணிகர்களின் பேரமைப்பும் பந்த்துக்கு ஆதரவு தெரிவித்ததால் மாநிலம் முழுவதும் உள்ள பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
சில்லறை வர்த்தகத்தில் நேரடி அந்நிய முதலீட்டை அமல்படுத்த மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி கடந்த சில வருடங்களாக முயற்சி செய்துவருகிறது. கடந்த வருடமே இதற்கான அறிவிப்பை வெளியிட அப்போதைய நிதியமைச்சரான பிரணாப் முகர்ஜி ஆர்வம் காட்டினார். ஆனால் எதிர்க்கட்சிகளின் தீவிரமான கண்டனத்துடன் கூட்டணிக் கட்சியான திருணமூல் காங்கிரசின் எதிர்ப்பும் சேர்ந்துகொண்டதால் அப்போது அறிவிப்பை வெளியிட முடியவில்லை.
சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதன் காரணமாக இந்த நாட்டிலுள்ள 4.4 கோடி சில்லறை வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள். மேலும் விவசாயிகளும் சிறு தொழிலதிபர்களும் பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்ப்பாளர்கள் கூறுகிறார்கள். ஆனால் மத்திய அரசு இதை மறுக்கிறது. அந்நிய முதலீட்டால் வேலைவாய்ப்பு பெருகும், ஆரோக்கியமான போட்டிகள் ஏற்படும். இடைத்தரகர்கள் ஒழிக்கப்படுவதால் விவசாயிகள் லாபம் பெறுவார்கள் என்று அரசு சொல்கிறது.
இந்த வாதம் பொய்யானது என்று நேரடி அந்நிய முதலீட்டை எதிர்ப்பவர்கள் கூறுகிறார்கள். ‘‘கிராமப்புற இந்தியா குறித்து பெரும்பாலானவர்களுக்குத் தெரியாத உண்மை என்ன என்றால், இந்தியாவில் விளையும் உணவுப் பொருள்களில் 60 விழுக்காட்டிற்கும் மேல் வியாபார ரீதியாகச் சந்தைக்கு வருவதில்லை, அவை கிராமங்களுக்குள்ளேயே விநியோகிக்கப்பட்டு உண்ணப்படுகிறது என்பதுதான்’’ என்று தனது கட்டுரை ஒன்றில் எழுதுகிறார், நேரடி அந்நிய முதலீட்டை தொடர்ந்து எதிர்த்துவரும் பத்திரிகையாளர் எஸ். குருமூர்த்தி. ‘‘கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி பிரதமர் மன்மோகன் சிங், அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனத்துக்கு இங்கு சிவப்புக் கம்பள வரவேற்புக்கான நடவடிக்கையை எடுத்த அதே நாளில், நியூயார்க் நகரில் வால்மார்ட் மூடப்பட்டது. கடந்த ஜூன் 30ஆம் தேதி, வால்மார்ட்டுக்கு எதிராக லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் 10 ஆயிரம் மக்கள் மிகப் பெரும் பேரணியை நடத்தினார்கள்’’ என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
''அன்னிய நிறுவனங்கள் இந்திய விவசாயிகளிடம் நேரடியாகத் தொடர்புகொண்டு அவர்களுடைய விளைபொருள்களை வாங்கிக்கொள்ள ஒப்பந்தம் செய்துகொள்வார்கள் என்கின்றனர் சிலர். இது நடக்கவே நடக்காது. ஏன் என்றால் நாட்டின் பெரும்பாலான விவசாயிகள் நடுத்தர, விளிம்பு நிலையில் உள்ளவர்கள், மிகக் குறைந்த அளவுக்கே நிலம் வைத்திருப்பவர்கள். எனவே லட்சக்கணக்கான விவசாயிகளிடம் இந்த நிறுவனங்களால் ஒப்பந்தம் செய்துகொள்ளமுடியாது. அப்படியே அவர்கள் ஒப்பந்தம் செய்துகொண்டாலும், எந்தப் பயிரைச் சாகுபடி செய்வது என்பதை முடிவு செய்யும் சுதந்திரம் இனி விவசாயிகளுக்கு இருக்காது’’ என்று எழுதுகிறார் பத்திரிகையாளர் பி.எஸ்.எம். ராவ். இடதுசாரிக் கட்சிகளும் அரசின் முடிவை எதிர்க்கின்றன. பல மாநிலங்களில் இருக்கும் வியாபாரிகள் சங்கங்களும் எதிர்க்கின்றன.
நாடாளுமன்றத்தின் அண்மைய கூட்டத் தொடரில் நிலக்கரி ஊழல் விவகாரத்தால் முற்றிலுமாக முடக்கப்பட்டது. எங்கும் நிலக்கரி ஊழல் பற்றிய பேச்சாகவே இருந்தது. ஆனால் இப்போது மத்திய அரசு வெளியிட்ட இந்த மூன்று அறிவிப்புகளால் விவாதம் திசைமாறிவிட்டது. ஒருவேளை இதைத்தான் காங்கிரஸ் எதிர்பார்த்ததோ என்னமோ. நேரடி அந்நிய முதலீடு போன்ற மிக முக்கியமான அறிவிப்பை எந்த வித விவாதமுமின்றி அவசரமாக வெளியிட்டுள்ளதைப் பார்க்கும்போது இந்த ஐயம் வலுப்படுகிறது.
இந்த அறிவிப்புக்குப் பின்னால் ஒரு அவசரக் காரணமும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. எதிர்ப்புகளை மீறி வால்மார்ட் நிறுவனத்திற்கான பல கட்டுமானங்கள் பெருநகரங்களில் கட்டப்பட்டுவருகின்றன. கூடிய விரைவில் அவை செயல்படத் தொடங்கிவிடும். அதற்கான சட்டப்பூர்வ அங்கீகாரமே இந்த அறிவிப்பு என்று சொல்லப்படுகிறது. நிலக்கரி ஊழல் விவகாரத்தில் விவாதத்திற்குத் தயார் என்று கூறிய ஆட்சியாளர்கள், அந்நிய முதலீடு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கத் தயார் என்று பா.ஜ.க. மூத்தத் தலைவர் எல்.கே. அத்வானி கூறியதை ஏற்கவில்லை.
சென்னையை அடுத்த வானகரத்தில் வால்மார்ட் நிறுவனத்தின் கிடங்கு ஒன்று கட்டப்பட்டுவருகிறது. மேலும் இந்த நிறுவனத்தின் சார்பில் அருகிலுள்ள பகுதிகளில் இருக்கும் வியாபாரிகளைத் தொடர்புகொண்டு வருகிறார்கள். தாங்கள் வால்மார்ட்டில் உறுப்பினராகச் சேர்கிறோம் என்பதை அறியாமலேயே அந்த வியாபாரிகள் சேர்ந்துவிடுகிறார்கள்.
இந்த நடவடிக்கைகள் குறித்து விளக்குவதற்காகத்தான் பிரதமர் மன்மோகன் சிங் தொலைக்காட்சியில் தோன்றினார். தற்போது எடுக்கப்பட்டுள்ள சீர்திருத்த நடவடிக்கைகள் காலத்தின் தேவை என்றும் 1991ஆம் வருடத்தில் ஏற்பட்டது போன்ற பொருளாதார நெருக்கடியில் நாடு சிக்கித் தவிக்கிறது என்றும் அந்த நேரத்தில் ஏற்பட்டதைப் போன்று கையிருப்பில் இருக்கும் தங்கத்தை அடகு வைக்கும் நிலைமையில் நாடு இருப்பதாகவும் அவர் கூறினார்.
அந்த ஒளிபரப்பில் பிரதமர் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு மக்களுக்கு அறிவுரை கூறினார். ஆனால் கடந்த எட்டு வருடங்களாக ஆட்சியில் இருப்பவர்கள் ஏன் சரியான பொருளாதார நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. பணம் மரத்தில் காய்ப்பதில்லை என்று பொருளாதார நிபுணர் கூறியதைக் கேட்டு மக்கள் திகைத்தார்கள். அதுதான் அவர்களுக்குத் தெரியுமே. கோடிக்கணக்கில் முறைகேடு நடந்திருப்பதாக மத்திய கணக்குத் தணிக்கை அதிகாரியால் குற்றம் சாட்டப்பட்ட ஒரு அரசின் தலைவர் இதை மக்களிடம் சொல்லும்போது மக்களுக்குச் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. மாபெரும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள காங்கிரஸ் கட்சிக்கு மக்களிடம் இத்தகைய கோரிக்கையை முன்வைக்கும் தார்மீக உரிமை இல்லை என்றும் விமர்சிக்கப்படுகிறது.
‘ஊருக்கு உபதேசம்’ செய்யும் கலாச்சாரம் அரசியல்வாதிகளுக்குப் புதிதல்ல. இரண்டு வருடங்களுக்கு முன்பாக, ‘‘விமானச் செலவுகளை குறைத்துக்கொள்ளுங்கள். பெரிய ஹோட்டல்களில் விழாக்களை நடத்தாதீர்கள். சிக்கனமாக இருங்கள்’’ என்று தன்னுடைய அமைச்சரவை சகாக்களுக்குப் பிரதமர் அறிவுறுத்தினார். அதை ஒரு அமைச்சரும் மதித்து நடக்கவில்லை. காங்கிரசின் அமைச்சர்கள் ஒவ்வொருவரும் பல கோடிகளுக்கு அதிபதிகளாக இருக்கிறார்கள்.
நான்கு வருடங்களாகவே மத்திய அரசு, விலை உயர்வுக்கு சர்வதேச பொருளாதாரத்தை காரணம் சொல்கிறது. இன்னும் நிலைமையை சரிசெய்யவிடாமல் தடுப்பது யார்? பொருளாதாரத்தைச் சீரமைக்க விடாமல் பிரதமரை தடுக்கும் சக்தி எது? இடையில் பத்து வருடங்களைத் தவிர்த்து கடந்த 65 வருடங்களாக காங்கிரஸ் கட்சிதான் தொடர்ந்து ஆட்சியில் இருந்துவருகிறது. ஆனால் சாமானிய மனிதர்கள் இன்னும் துன்பத்தில் இருந்து மீளவில்லை.
பெட்ரோல், டீசல் விலையேற்றம் அன்றாட வாழ்வின் அங்கமாக மாறிவிட்டது. தற்போது டீசல் விலை ஐந்து ரூபாய் அதிகரித்துள்ளது. மத்திய அரசும் வழக்கம்போல கச்சா பொருட்களின் சர்வதேச விலை உயர்வைக் காரணமாகச் சொல்கிறது. ஆனால் அண்டைய நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை குறைவாக இருக்கும் மர்மம் மட்டும் விலகவே இல்லை. ‘பெட்ரோல் விலையை நான்கு ரூபாய் அதிகரிக்க வேண்டுமென்றால் ஐந்து ரூபாய்க்கு அதிகரித்து ஒரு ரூபாய் குறைக்கிறது’ என்று ஊடகங்கள் கிண்டல் செய்கின்றன.
சமையல் கியாஸ் விவகாரத்தில் பொறுப்பை மாநில அரசுகளிடம் காங்கிரஸ் திருப்பிவிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களில் மட்டும் மானிய விலையில் வருடத்திற்கு 9 கியாஸ் சிலிண்டர்களையும் கூடுதல் 3 சிலிண்டருக்கான மானியத்தை காங்கிரசின் மாநில அரசுகள் ஏற்பது என்றும் அறிவித்தது. மற்ற மாநிலங்களில் உள்ள எதிர்க்கட்சிகளின் மாநில அரசுகள்தான் கியாஸ் விலைக் குறைப்பை அறிவிக்க வேண்டும் என்று கூறிவிட்டது. இது கூட்டாட்சிக் கோட்பாட்டிற்கு எதிரான செயல் என்பதில் சந்தேகமில்லை.
இந்த விவகாரம் மத்தியில் ஆளும் கூட்டணியிலும் எதிரொலித்தது. இதுவரை அரசை மிரட்டிவந்த மமதா பானர்ஜி, தற்போது உறுதியாக நின்று ஆட்சியைவிட்டு வெளியேறி விட்டார். வெளியே வந்த மறுநாள் எதிர்க்கட்சிகள் நடத்திய பந்த்துக்கும் ஆதரவு தெரிவிக்காமல் தனியாகப் போராட்டத்தை அறிவித்துள்ளார். பந்த் நடத்த முன்னின்ற சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் பந்துக்கு மறுநாள் மத்திய அரசுக்கு வெளியில் இருந்து தொடர்ந்து ஆதரவு தருவோம் என்று நிருபர்களிடம் கூறினார். பந்த் நடத்த ஆதரவு தந்த தி.மு.க., ஆளும் கூட்டணியில் அங்கம் வகித்துவருகிறது. ஒற்றுமையாக செயல்படாத எதிர்க்கட்சிகளால் காங்கிரஸ் வட்டாரம் உற்சாகமாக இருக்கிறது.
ஆட்சிக்கு வந்த ஆபத்து விலகிவிட்டது. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட காங்கிரஸ் அரசு அரசியல் ரீதியாக இந்த நெருக்கடியைக் கடந்துவிட்டது. ஆனால் மக்கள் மத்தியில் எழுந்துள்ள கசப்புணர்வின் தாக்கத்திலிருந்து அது அவ்வளவு எளிதாகத் தப்பித்துவிட முடியாது. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆகும் என்றார் இளங்கோ அடிகள். இன்று பிழைத்துக்கொண்ட அரசு காலத்தின் நீதிமன்றத்தில் அறம் எழுப்பும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment