Wednesday, October 24, 2012
எல்லோர் கைகளிலும் கறை அரசியல் அரங்கில் பெருகிவரும் ஊழல் குற்றச்சாட்டுக்களால் ஏற்பட்டுள்ள பலன் என்ன?
சில வாரங்களுக்கு முன்னால் ஊழலுக்கெதிராக தொடர்ந்து குரல் கொடுத்துவருபவரான முன்னாள் வருமான வரித்துறை அதிகாரி அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் மீது ஊழல் புகார் ஒன்றை சுமத்தினார். அவரது மனைவி நடத்திவரும் அறக்கட்டளையின் மூலம் 74 லட்சம் ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக குற்றம் சாட்டினார். இது சம்பந்தமாக செய்தி ஊடகங்கள் பரபரப்பாகச் செய்திகளை ஒளிபரப்பிவந்தன. நாள்தோறும் புதுப்புது விஷயங்கள் மக்களுக்குத் தரப்பட்டன. ஆனால் இந்த ஊழல் குற்றச்சாட்டினால் திருவாளர் பொதுஜனம் அதிர்ச்சிக்குள்ளாகவில்லை. ‘இது வழக்கமான ஒன்றுதான்’ என்பது போல அவர்கள் அமைதியாக நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் சல்மான் குர்ஷித்துக்காக பரிந்துபேசிய மற்றொரு மத்திய அமைச்சர் பேனி பிரசாத் வர்மா, “போயும் போயும் 71 லட்சத்துக்கா ஒரு மத்திய அமைச்சர் ஊழல் செய்வார்? ஏதாவது நம்பும்படியா சொல்லுங்க. 74 கோடி என்று சொன்னால் நம்பலாம்” என்று கிண்டல் செய்தபோது, மக்கள் வேதனைக்கு ஆளானார்கள். கடந்த பத்து வருடங்களாக ஊழல் அடைந்துவரும் பிரம்மாண்டமான பரிணாமத்தை ஒரு மத்திய அமைச்சரே ஒப்புக்கொண்டிருக்கிறார். இப்போது பிரச்சினை வேறு பக்கம் திரும்புகிறது. ஒரு அமைச்சர் எப்படி இவ்வாறு பொறுப்பில்லாமல் பேசலாம் என்று எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் மத்திய அரசை வறுத்தெடுக்க ஆரம்பித்தன.
ஏறக்குறைய இதே நேரத்தில் காஷ்மீரில் நிலக்கரி ஊழல் பற்றி கருத்து தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே, “போபர்ஸ் ஊழல் பற்றிய குற்றச்சாட்டை மக்கள் எப்படி மறந்தார்களோ அதுபோல நிலக்கரி ஊழலையும் மறந்துவிடுவார்கள்” என்று கூறினார்.
இதுபோன்ற பேச்சுக்கள் அதிர்ச்சி அலைகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்தினாலும் தொடர்ந்து நிகழ்ந்துவரும் சில சம்பவங்கள் நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கின்றன.
இரண்டாவது தலைமுறை அலைக்கற்றை ஊழல் பற்றிய தகவல் கணக்குத் தணிக்கை அறிக்கையில் அம்பலமானது, ஊடகங்கள் இந்த விஷயத்தில் பல விஷயங்களை வெளியே கொண்டுவந்தன, உச்ச நீதிமன்றம் இவ்விஷயத்தில் தலையிட்டுக் கறாரான உத்தரவுகளைப் பிறப்பித்தது, மத்திய அமைச்சர்களும் ஆளும்கட்சிப் பிரமுகர்களும் சிறை சென்றார்கள்.
இந்த நிகழ்வுகளின் தொடர்ச்சியாக அண்ணா ஹசாரே தலைமையில் சிலர் ஊழலுக்கு எதிரான போராட்டத்தைத் தொடங்கினார்கள். மலைக்க வைக்கும் தொகைகளை ஊடகங்களில் பார்த்த பொதுமக்கள் அண்ணாவுக்குப் பெருமளவில் ஆதரவு அளித்தார்கள். இந்தக் குழுவினரின் போராட்டங்கள் பல வடிவங்கள் எடுத்தாலும் ஊழலுக்கு எதிரான குரலை இந்திய அரசியல் அரங்கில் மையம் கொள்ள இந்த அமைப்பு வித்திட்டது என்று சொல்லலாம்.
ஊழலுக்கு எதிரான அரசியல் கட்சியைத் தொடங்குவதாக அண்ணா அறிவித்தார். ஆனால் தயக்கத்தின் காரணமாக அரசியல் கட்சியைத் தொடங்கும் முடிவை கைவிடுவதாக ஹசாரே அறிவித்தார். ஆனால் ஹசாரே குழுவில் முக்கிய இடம் வகித்த அரவிந்த் கெஜ்ரிவால் மட்டும் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். கடந்த சில வாரங்களாக அவர் அரசியல் கட்சிகளின் மீதும், அரசியல்வாதிகளின் மீதும் சுமத்தும் குற்றச்சாட்டுகள் சூட்டைக் கிளப்புகின்றன. கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லியாக வேண்டிய நிலையில் மத்திய அரசு உள்ளது. அதன் காரணமாக பெரிய அளவிலான அதிர்வலைகள் அரசியல் வட்டாரத்தில் ஏற்பட்டுள்ளன.
சல்மான் குர்ஷித் மீது கெஜ்ரிவால் வைத்துள்ள குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை சில மாதங்களுக்கு முன்னால் உத்தர பிரதேச முதல்வர் அபிஷேக் யாதவ் வெளியிட்டிருப்பதாகவும் தெரிவித்தார். ஆனால் அபிஷேக் யாதவ் வாய்மூடி மௌனம் காத்ததால் அந்த பிரச்சினை அடங்கியது. இந்நிலையில் சல்மான் குர்ஷித்தின் தொகுதிக்கு செல்லப் போவதாக கெஜ்ரிவால் கூறினார். வரலாம், ஆனால் திரும்பிப் போக முடியாது என்று சொல்லி அனைவரையும் அதிரவைத்தார் குர்ஷித்.
இதற்கு முன் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவின் மீது கெஜ்ரிவால் வைத்திருந்த குற்றம் சாட்டின் மீதான பரபரப்பும் அடங்கவில்லை. மூன்று ஆண்டுகளுக்கு முன்புவரை வெறும் 50 லட்சத்துக்கு சொத்து வைத்திருந்த ராபர்ட் வதேரா தற்போது 300 கோடிக்கு அதிபதியாகியது எப்படி என்ற கேள்வியை அவர் எழுப்பினார். வதேராவிடமிருந்து எந்தவித அடமானமும்பெறாமல் அவருக்கு டி.எல்.எப். நிறுவனம் 65 கோடி ரூபாயை எப்படி கடனாகத் தந்தது என்று அவர் சந்தேகம் எழுப்பினார்.
உடனே கெஜ்ரிவாலுக்கு காங்கிரஸ் அமைச்சர்கள் பதில் அளிக்க ஆரம்பித்தார்கள். கெஜ்ரிவாலின் இந்த புகார், காங்கிரசுக்கு எதிரான சதி என்று அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் கூறினார். இந்த விவகாரம் குறித்து எந்த விசாரணையும் கிடையாது என்று மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் அறிவித்தார். கெஜ்ரிவால் மீது மான நஷ்ட வழக்கு தொடருவேன் என்று வதேரா கொதித்தெழுந்தார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக விமான நிலையங்களில் ராபர்ட் வதேராவுக்கு சிறப்பு பாதுகாப்பு தரப்படுவது ஏன் என்ற கேள்விக்கும் காங்கிரசிடமிருந்து இதுவரை பதில் இல்லை.
அரவிந்த் கெஜ்ரிவாலின் அம்புகள் காங்கிரஸ் அமைச்சர்கள் மீது பாய்ந்தபோது அவரது பின்னணியில் பா.ஜ.க. உள்ளதோ என்று சில அரசியல் விமர்சகர்கள் சந்தேகப்பட்டார்கள். ஆனால் கெஜ்ரிவால் பா.ஜ.க.வையும் விடவில்லை. மகாராஷ்ட்ராவில் அணை ஒன்றை கட்டும் விஷயத்தில் 100 ஏக்கர் அத்துமீறலாக ஒரு அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் அதில் பா.ஜ.க. தலைவர் நிதின் கட்காரி சம்மந்தப்பட்டிருப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தினார். ஆனால் கட்காரி இந்த அறக்கட்டளையுடன் தனக்கு எந்தத் தொடர்புமில்லை என்று கூறியுள்ளார். இது விஷயமாக எந்த விசாரணைக்கும் தயார் என்றும் அறிவித்திருக்கிறார்.
அடுத்த்தாக வந்த செய்தி மக்களை இன்னும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இவ்வளவு பேரைக் கேள்வி கேட்ட அரவிந்த் கெஜ்ரிவால் யோக்கியரல்ல என்று மகாராஷ்ட்ரத்தைச் சேர்ந்த முன்னாள் காவல்துறை அதிகாரி ஒய்.பி.சிங் புகார் கூறினார். கெஜ்ரிவால், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கு ஆதரவாகச் செயல்படுவதாக அவர் தெரிவித்தார். அதற்கு ஆதாரமாக, சரத் பவாரும் அவரது குடும்பத்தினரும் லவாசா என்ற இடத்தில் சட்டத்துக்கு விரோஹமான வகையில் நிலங்களை சொந்தமாக்கிக்கொண்டிருப்பதை கெஜ்ரிவால் கண்டுகொள்ளவில்லை என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.
இது தவிர பா.ஜ.க. ஆட்சியின் போது வாஜ்பாய், அத்வானியின் உறவினர்கள் ஊழலில் ஈடுபட்டது குறித்த ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக திக்விஜய் சிங் பரபரப்பு ஏற்படுத்தினார்.
இப்போது எல்லாத் தரப்பிலும் ஒருவரை ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுகளால் தாக்கி வருகிறார்கள். அந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் அனைவரும் இருக்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்புவரை பெரிய அரசியல் கட்சித் தலைவர்கள் மட்டும்தான் ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்த முடியும் என்ற நிலை இருந்தது. எதிர்க்கட்சிகள் ஊழல் குற்றம் சுமத்தும் போதெல்லாம் அதைச் சுமத்த எதிர்க்கட்சிகளுக்கு அருகதையில்லை என்று சொல்வதே ஆளுங்கட்சியின் வாதமாக இருந்தது. சாதாரண மக்கள் இவர்களது ஊழல்களைப் பற்றி சரியாகத் தெரிந்துகொள்ளக் கூட முடியாத நிலை இருந்தது. ஆனால் அண்ணா ஹசாரேவின் போராட்டத்திற்குப் பிறகு அந்த நிலை மாறியுள்ளது.
ஆனால் இதுபோன்ற குற்றச்சாட்டுகளால் மக்கள் மத்தியில் ஜனநாயகத்தின் மீதான அவநம்பிக்கை அதிகமாகும் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். என்றாலும் ஊழல் செய்தால் வலுவான எதிர்ப்பு எழும் சூழல் உருவாகியுள்ளது முக்கியமான மாற்றம் என்பதை மறுக்க முடியாது. குற்றச்சாட்டு என்ற கலகத்தின் வழியாகவே நேர்மை என்ற நன்மை பிறக்கும் காலம் இது. நல்லது நடக்கும் என்று நம்புவோம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment