Thursday, November 15, 2012

துப்பாக்கி – திரைப்பார்வை

சாதாரணமாக நான் நடிகர் விஜய் நடித்த படங்களை பார்ப்பதில்லை. அவருக்கு நடிக்கத் தெரியாது என்ற கருத்து பரவலாக இருப்பதே அதற்கு காரணம். இப்போது ஓடிக் கொண்டிருக்கும் ‘துப்பாக்கி’ திரைப்படத்தையும் முதலில் பார்க்க விரும்பவில்லை. ஆனால் முதல் நாள் படம் பார்த்த ஒரு நண்பர் முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்தரித்துள்ளதாக கூறினார். இந்த படத்திற்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்த செய்தியும் வந்தது. சரி, படத்தில் ஏதோ விஷயம் இருக்கிறது போல என்று தோன்றியது. உடனே அந்த படத்தை விஜய்க்காக இல்லாவிட்டாலும், ஏ.ஆர். முருகதாசுக்காகவாவது ஒருதடவை பார்த்துவிடலாம் என்று மனதை திடப்படுத்திக் கொண்டேன். அந்த படத்தில் அப்படி என்னதான் இருக்கிறது என்பதை அறிவதற்காக இணையத்தில் பதிவு செய்து டிக்கெட் வாங்கினேன். இரண்டாவது நாள் இரவுக் காட்சிக்கு தான் டிக்கெட் கிடைத்தது. புறப்படுவதற்கு முன்னால் ஒரு நண்பன் போனில் கூப்பிட்டான். ‘படத்தில் முஸ்லிம்களை வெறுப்பேற்றும் வகையில் ஏதாவது தெரிகிறதா என்று பார்’ என்றான். ஆனால் இதன் மூலம் சகலமானவர்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால், படத்தில் முஸ்லிம்களை அவமானப்படுத்தும் காட்சி இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் படம் வடமேற்குப் பகுதியிலிருந்து கதை நகர்கிறது. அந்த எல்லைப்புறத்தில் ஊடுருவல்காரர்கள் முஸ்லிம்களாக இருப்பதால் அப்படி காட்ட நேரிடுகிறது. வில்லனுக்கு உதவும் போலிஸ் அதிகாரியின் பெயர் முஸ்லிம் பெயராக இருக்கிறது என்கிறார்கள். ஆனால் முதலில் இன்பசேகர் என்ற ஒரு போலிஸ் அதிகாரி வில்லனுக்கு உதவி செய்ததை விஜய் கண்டுபிடிப்பதாக கதை போகிறது. இன்பசேகர் என்பது எந்த மதத்தவர்களின் பெயர் என்பது அனைவருக்கும் புரிந்திருக்கும். வெறும் விளம்பரத்துக்காகவே சில முஸ்லிம்கள் படத்தைக் கண்டிப்பதாகத் தோன்றுகிறது. படத்தின் கதை இதுதான். எல்லைப்புறத்தில் நாட்டுக்காக போராடும் ராணுவ வீரன் ஜகதீஷ் விடுமுறைக்காக மும்பையில் உள்ள வீட்டிற்கு வருகிறான். வந்தவுடனே அவனுக்கு திருமண ஏற்பாடு நடக்கிறது. முதலில் அவனுக்கு பெண்ணை பிடிக்கவில்லை. ஆனால் அந்த பெண்ணைப் பற்றித் தெரிந்துகொண்ட பிறகு அவளை விரும்புகிறான். ஒருநாள் பஸ்சில் ஒரு பிக் பாக்கெட்டை தேடும்போது ஒருவன் சந்தேகத்துக்கிடமாகத் தெரிகிறான். அவனைப் பிடிக்க ஓடும்போது அவர்கள் பயணம் செய்த பஸ் வெடித்து குழந்தைகள் பலியாகிறார்கள். அந்த பயங்கரவாதியை பிடித்து போலிசில் ஒப்படைக்கிறான். ஆனால் அவன் தப்பிக்க முயல்வதால் அவனை மீண்டும் பிடித்து தனது வீட்டில் அடைத்து வைக்கிறான். அவன் மூலம் மும்பை மாநகரத்தில் ஒரே நாளில் 12 இடங்களில் குண்டுவைக்க திட்டமிட்டிருப்பதை கண்டுபிடித்து ’சீக்ரெட் செல்’ என்று சொல்லப்படும் அந்த 12 பயங்கரவாதிகளையும் ஒரே சமயத்தில் சுட்டு வீழ்த்துகிறார்கள். தனது திட்டத்தை அழித்தவனை தேடிக் கொண்டு சீக்ரெட் செல் தலைவன் வடமேற்குப் பகுதியிலிருந்து வருகிறான். அவனை எப்படி ஜகதீஷ் (விஜய்) அழித்து நாட்டைக் காப்பாற்றுகிறான் என்பது தான் படத்தின் கிளைமாக்ஸ். பல படங்களில் ராணுவ வீரர்களின் சாகசங்களை காண்பித்திருந்தாலும் இந்த படத்தில் அவர்கள் தங்களது குடும்பத்துடன் கழிக்கும் நாட்களைச் சுற்றி கதை நகர்கிறது. பயங்கராவாதிக்கு உதவும் செக்யூரிட்டி ஆபிஸரை சந்திக்கும் காட்சியில் விஜய், ராணுவ வீரர்களின் தியாகத்தைச் சொல்லும்போது திரையரங்கமே மௌனத்தில் ஆழ்கிறது. படத்தில் இறுதியில் ராணுவ வீரர்கள் தங்களது குடும்பத்தைப் பிரிந்து ரயிலேறும் போது நமது மனமும் நெகிழ்வதை தவிர்க்க முடியவில்லை. இதுபோன்ற கதாபாத்திரங்களில் நடித்தால் விஜய் நடிக்கும் படங்கள் ஓடும். விஜய் ரசிகர்களுக்கும் தீனி கிடைக்கும். முடிவு நடிகர் கையில் தான். இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் காலத்திற்கு ஏற்ற வகையில் நல்லதொரு படத்தைக் கொடுத்திருக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் “கூகுள்… கூகுள்…” பாடல் அருமை. காட்சியுடன் இணைந்து “போய் வரவா” பாடலும் நெகிழ வைக்கின்றன. பின்னணி இசை அமர்க்களம். படத்தில் சந்தேகங்களும் இல்லாமல் இல்லை. என்ன தான் நாயகன் ரகசிய உளவுப் பிரிவைச் சேர்ந்தவராக இருந்தாலும் யாரும் அவரை கண்டுபிடிக்க முடியாமலா இருக்கும்?. எல்லா இடங்களிலும் ஹீரோயிசம் அதிகமாகத் தெரிகிறது. ஹீரோயிசம் தமிழில் தற்போது குறைந்துவருகிற நேரத்தில் இப்படி தேவையா?. மொத்தத்தில், துப்பாக்கி… தீபாவளி படங்களில் மசாலா கலந்த சரவெடி. - சந்திர. பிரவீண்குமார்.

No comments:

Post a Comment