Tuesday, September 25, 2012

முலாயம் சிங்கின் பிரதமர் ஆசை நனவாகுமா மூன்றாவது அணி?

இந்திய மக்களவைத் தேர்தல் குறித்த பேச்சுக்கள் கிளம்பும் போதெல்லாம் மூன்றாவது அணி குறித்த முயற்சிகளும் நடப்பது வாடிக்கை. ஊழல் விவகாரங்களில் காங்கிரஸ் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. ‘பா.ஜ.க.வோ பிரதமர் வேட்பாளர் யார்?’ என்ற கேள்வியில் திணறிக் கொண்டிருக்கிறது. இந்த நிலை, மாநில கட்சிகளுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் இதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். கடந்த மக்களவைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், லோக் ஜன சக்தி ஆகிய கட்சிகளுடன் இணைந்து நான்காவது அணியாகப் போட்டியிட்டது. இந்த கட்சிகள் 5.14 சதவீத வாக்குகளைப் பெற்று 27 இடங்களை கைப்பற்றியது. நான்கு இடதுசாரி கட்சிகள், அ.தி.மு.க., பா.ம.க, ம.தி.மு.க, பிஜு ஜனதா தளம், மதசார்பற்ற ஜனதா தளம், பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை அடங்கிய மூன்றாவது அணி 21.15 சதவீத வாக்குகளைப் பெற்று 79 இடங்களில் வெற்றி பெற்றது. அந்த தேர்தலுக்குப் பிறகு மூன்றாவது, நான்காவது அணிகள் கலைந்துவிட்டன. இப்போதைய சூழ்நிலையை மாநில கட்சிகள் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள திட்டமிடுகின்றன. அதே நேரத்தில் இந்த கட்சி தலைவர்கள் ஒவ்வொருவருக்கும் பிரதமர் பதவியின் மீது ஆசை இருக்கிறது. இந்த முயற்சி வெற்றியடையுமா என்ற கேள்விக்கு பதிலை பெற நாம் பொறுத்திருந்து பார்ப்போம். ‘வரும் மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் கூட்டணியும், பா.ஜ.க. கூட்டணியும் வெற்றி பெறாது. இவற்றில் ஏதேனும் ஒரு கட்சியின் ஆதரவுடன் மூன்றாவது அணி ஆட்சியமைக்கவும் வாய்ப்பிருக்கிறது’ என்று பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி கூறியதாக கடந்த ஆகஸ்ட் மாதம் புரளியொன்று கிளம்பியது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment