Tuesday, September 4, 2012
கோல்கேட்!
ஊழலுக்கு மேல் ஊழலாகச் சிக்கித் தவிக்கும் காங்கிரஸ் அரசுக்குக் கடந்த ஆகஸ்ட் மாதம் மற்றொரு தலைவலி. கடந்த 2004ஆம் ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலக்கரிச் சுரங்கங்களால் மத்திய அரசுக்கு 1.86 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக இந்தியத் தலைமை கணக்குத் தணிக்கைத் துறையின் (சி.ஏ.ஜி.) அறிக்கை தெரிவித்துள்ளது. முதலில் இருந்த விருப்ப ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்து ஏல அடிப்படையில் நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மத்திய அமைச்சரவையால் பரிந்துரைக்கப்பட்டது. இந்தப் பரிந்துரையைக் கண்டுகொள்ளாததே இந்த முறைகேட்டிற்கு காரணம் என்று சி.ஏ.ஜி. குற்றம் சாட்டியது. இந்த அறிக்கை ஆகஸ்ட் 17ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த அறிக்கை, நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ.க. முறைகேடு நடந்த காலத்தில் நிலக்கரித் துறைக்குப் பொறுப்பாக இருந்த பிரதமர் மன்மோகன் சிங் இந்த முறைகேட்டுக்குப் பொறுப்பேற்றுப் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியது. அதை வலியுறுத்தி ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் நாடாளுமன்றத்தைப் புறக்கணித்துவருகிறது.
சி.ஏ.ஜி. அறிக்கை குறித்து பதிலளித்த பிரதமர் மன்மோகன் சிங், இந்த விவாகரத்தில் பா.ஜ.க. ஆளும் ஜார்க்கண்ட், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்கள் கேட்டுக்கொண்டபடிதான் ஒதுக்கீடு நடந்ததாகவும் இதுபற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்கத் தயார் என்றும் பதவி விலக அவசியமில்லை என்றும் கூறினார். ஆனால் பா.ஜ.க. இதை ஏற்க மறுத்துவிட்டது. இந்த விவகாரத்தில் பிரதமர் பதவி விலகும்வரை நாடாளுமன்றப் புறக்கணிப்பைக் கைவிடப்போவதில்லை என்று அது தெரிவித்தது.
இந்த விவகாரத்தில் பா.ஜ.க. தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. நிலக்கரி ஊழலில் தனது முதல்வர்களும் சம்மந்தப்பட்டதாக கூறப்படுவதை அது மறுத்துள்ளது. நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு என்பது மத்திய அரசு சம்மந்தப்பட்ட விஷயம் என்றும், இதில் மாநில அரசுகளின் பங்கு எதுவுமில்லை என்று அது கூறியது.
பிரதமர் பதவி விலகத் தேவையில்லை என்று காங்கிரஸ் சொல்கிறது. 142 நிலக்கரிச் சுரங்கங்களுக்கான ஒதுக்கீட்டை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று பா.ஜ.க. வலியுறுத்திவருகிறது. ஆனால் இந்த ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரித்து வருவதால் செப்டம்பர் 15ஆம் தேதிக்குப் பிறகே நிலக்கரிச் சுரங்கங்களின் ஒதுக்கீடுகளை ரத்து செய்வது குறித்து முடிவெடுக்கப்படும் என்று மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் ஸ்ரீ பிரகாஷ் ஜெய்ஸ்வால் அறிவித்தார். ஆனால் நிலக்கரி ஒதுக்கீடுகள் தற்போதைக்கு ரத்து செய்யப்படாது எனவும், இதுகுறித்த எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை சந்திக்கத் தயாராக இருப்பதாகவும் பா.ஜ.க.வின் கேள்விகளுக்குப் பிரதமர் பதிலளிக்கத் தயாராக இருப்பதாகவும் செய்திகள் கசிகின்றன.
இந்த விவகாரத்தால் பா.ஜ.க. கூட்டணியில் மீண்டும் பிளவு ஏற்பட்டுள்ளது. பா.ஜ.க.வின் நீண்ட கால கூட்டணிக் கட்சிகளான அகாலி தளம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் நிலக்கரி ஒதுக்கீடு சம்மந்தமாக பிரதமரின் விளக்கத்திற்குப் பிறகு நாடாளுமன்றம் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கலாம் என்று கருத்து தெரிவித்தன. ஆனால் பா.ஜ.க. அந்த யோசனையை முற்றிலுமாக நிராகரித்தது. காங்கிரஸ் கூட்டணி அரசில் குற்றம் சாட்டப்பட்ட ஆ. ராசா உட்பட அனைத்து அமைச்சர்களும் பதவி விலகி, ஊழல் வழக்குகளை சந்தித்து வருகிறார்கள். இந்நிலையில் நிலக்கரிக்கு பொறுப்பு வகித்த பிரதமரும் ராஜிநாமா செய்ய வேண்டும். மேலும் பிரதமரே ஊழலில் சம்மந்தப்பட்டிருப்பதால் விசாரணையில் பாதிப்பு ஏற்படும் என்று கூறுகிறது.
இந்நிலையில் நாடாளுமன்றத்தை முடக்குவதன் மூலம் மற்ற எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளை ஒதுக்க காங்கிரசும் பா.ஜ.க.வும் கூட்டு சதி செய்வதாக இடதுசாரி கட்சிகளும், சமாஜ்வாதி கட்சியும் குற்றம் சாட்டியுள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment