Tuesday, September 25, 2012

நேரடி அந்நிய முதலீடு உள்ளூர் வர்த்தகம் சீர்குலையுமா?

இந்திய சில்லறை வர்த்தகத்தில் 51 சதவீத அந்நிய முதலீட்டை அனுமதிப்பது என்று பத்து நாட்களுக்கு முன்பு மத்திய அரசு முடிவெடுத்தது. நிலக்கரி ஊழல் பிரச்சினையில் பா.ஜ.க.வின் கேள்விக்கணைகளில் சிக்கிக் கொண்டிருந்த காங்கிரஸ் அரசுக்கு இந்த அனுமதியால் கொஞ்சம் மூச்சு விட அவகாசம் கிடைத்துள்ளது. உலகமயமாக்கலின் காரணமாக இந்தியா பல்வேறு நேரடி அந்நிய முதலீடுகளை கடந்த 20 வருடங்களாக அனுமதித்து வருகிறது. எந்தத் துறையில் நேரடி அந்நிய அனுமதித்தாலும் மத்திய அரசு எதிர்ப்பைச் சந்திப்பது வாடிக்கைதான். ஆனால் சில்லறை வர்த்தகத்தில் நேரடி அந்நிய முதலீட்டை அரசு அனுமதிக்க முயற்சிக்கும் போதெல்லாம் எதிர்ப்பாளர்களின் போராட்டம் இன்னும் தீவிரமாகவே இருக்கிறது. இந்தியாவில் 4.4 கோடி பேருக்கான வேலைவாய்ப்பை இந்திய சில்லறை வர்த்தகம் தருவதால்தான் இந்த கூடுதல் எதிர்ப்பு. இந்தியாவை பொறுத்தவரை விவசாயத்திற்கு அடுத்தபடியாக சில்லறை வர்த்தகம்தான் அதிகளவில் மக்களின் பிழைப்புக்கு வழி செய்கிறது. ‘‘இந்த நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிப்பதால் ஏராளமான மக்களின் வாழ்க்கை பாதிப்படையும்’’ என்கிறார்கள் எதிர்ப்பாளர்கள். வால்மார்ட் போன்ற பெரிய வர்த்தகத் தலைகள், சில்லறை வர்த்தகத்தில் நுழைவதால் சிறிய முதலீட்டாளர்கள் காணாமல் போவார்கள். தொடக்கத்தில் விலை குறைவாக பொருட்களைத் தந்து மற்ற போட்டியாளர்கள் ஒழிப்பார்கள். அதன் பிறகு விலையைத் தாறுமாறாக உயர்த்துவார்கள். அமெரிக்காவில் வால்மார்ட் நிறுவனம் இத்தைகைய உபாயத்தைத்தான் கையாண்டார்கள் என்பதை அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். ஆனால் அந்நிய முதலீட்டின் ஆதரவாளர்களோ இந்த வாதத்தை ஏற்க மறுக்கிறார்கள். ‘‘இந்த முதலீடு காரணமாக சில்லறை வர்த்தகத்தில் ஆரோக்கியமான போட்டி ஏற்படும். இதனால் பொருளாதாரம் வளர்ச்சியடையும். விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்வதால் இடைதரகர்கள் பாதிக்கப்படுவார்கள்’’ என்கிறார்கள். இந்த முடிவை பா.ஜ.க, இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்க்கிறார்கள். அவர்களோடு காங்கிரசின் கூட்டணிக் கட்சித் தலைவரான மம்தா பானர்ஜியும் எதிர்க்கிறார். இந்த முடிவை அரசு கைவிடாவிட்டால் கூட்டணியை விட்டு விலக நேரிடும் என்று அவர் எச்சரித்து வருகிறார். ஆனால் பிரதமர் மன்மோகன் சிங், இந்த எதிர்ப்புகளைக் கண்டு பயப்படாமல் சில்லறை வர்த்தகத்தில் நேரடி அந்நிய முதலீட்டை அனுமதித்தாக வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக செய்திகள் வருகின்றன. இதை அனுமதிப்பதால் ஏற்படும் சங்கடங்களை சமாளிக்க மத்திய அரசு தயாராக இருக்கிறது. இந்த முடிவை எதிர்த்து எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறார்கள். ஆனால் இதுகுறித்து மத்திய அரசு கவலைபடவில்லை. இந்த முடிவால், பொருளாதார வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க திருப்பம் ஏற்படும் என்று மத்திய அரசு நினைக்கிறது. இந்த முடிவை எந்தெந்த மாநிலங்களில் அமல்படுத்துவது என்பது குறித்து அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்யும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதனால் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களிலும், மற்ற எதிர்க்கட்சிகள் ஆளும் உ.பி, மேற்கு வங்கம், தமிழ்நாடு, பீகார், பஞ்சாப், திரிபுரா ஆகிய மாநிலங்களில் தற்போதைக்கு நேரடி அந்நிய முதலீடு அனுமதிக்கப்படாது என்பது தெரிகிறது. இந்த முடிவுடன் உள்நாட்டு விமானத் துறையில் 49 சதவீத நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் முடிவையும் மத்திய அரசு எடுத்துள்ளது. இதன் காரணமாக விமான போக்குவரத்துத் துறையில் முதலீடு செய்திருக்கும் உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று தெரிகிறது. ஆனால் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்த்துவரும் அரசியல் கட்சிகள், விமான போக்குவரத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பது குறித்து பெரிய அளவிலான எதிர்ப்பு எதையும் வெளியிடவில்லை. இந்நிலையில், நிலக்கரி ஊழல் பிரச்சினைகளை திசை திருப்புவதற்குதான் முக்கியமான இந்த முடிவை அவசர கோலத்தில் மத்திய அரசு எடுத்துள்ளதாக பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது. இதுபற்றி, பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே. அத்வானி தனது வலைப்பூவில், ‘‘இந்த முடிவால் நிலக்கரி ஊழலை விட்டு மக்களின் கவனத்தை திசை திருப்பலாம் என்று காங்கிரஸ் நினைக்கிறது. ஆனால் அது நடக்காது’’ என்று எழுதியுள்ளார்.

No comments:

Post a Comment