Friday, August 24, 2012

வதந்தியால் நிரம்பிய ரயில்கள்

சென்ற மாதம் நாடு முழுவதும் பரபரப்பு தெரிந்தது. வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் கும்பல் கும்பலாக ரயில் நிலையங்களை நோக்கிப் படையெடுத்தார்கள். காரணம் வட கிழக்கைச் சேர்ந்த மக்கள் மீது தாக்குதல் நடக்கவிருக்கிறது என்ற வதந்தி பரவியதே இதற்குக் காரணம். மத்திய உள்துறையும், பல மாநில அரசுகளும் மற்ற பிரச்சினைகளை ஒதுக்கி வைத்துவிட்டு வதந்தியால் பீதியடைந்த மக்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கின. ஏன் இந்த வதந்தி கிளம்பியது? திடீரென்று பெரும் திரளாக மக்கள் ஏன் தங்கள் வாழ்வாதாரங்களை விட்டுவிட்டுச் சொந்த ஊர்களுக்குச் செல்ல வேண்டும்? அஸ்ஸாம் மாநிலத்தில் கடந்த ஜூலை மாதம் கலவரம் வெடித்தது. உள்ளூர் போடோ மக்களுக்கும், வெளியிலிருந்து அங்கு குடியேறிய முஸ்லிம்களுக்கும் இடையே ஏற்பட்ட இந்தக் கலவரத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டார்கள். வங்காள தேசத்தைச் சேர்ந்த 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் அஸ்ஸாமில் ஊடுருவியதால்தான் இந்தக் கலவரம் நடைபெற்றதாக பா.ஜ.க. குற்றம்சாட்டியது. கலவரத்தின் எதிரொலியாக மும்பையில் நடந்த கண்டனப் பேரணியில் கலவரம் வெடித்தது. அதில் மும்பை போலீஸாருக்கும் அந்தப் பேரணியில் பங்கேற்ற முஸ்லிம்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இந்தக் கலவரத்திலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. இந்நிலையில் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் வடகிழக்குப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மீது திட்டமிட்ட தாக்குதல் நடக்க இருப்பதாக வதந்தி பரவியது. நாட்டில் பல்வேறு மாநிலங்களில் வாழும் வடகிழக்கு மக்களைப் பழிவாங்க முஸ்லிம்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் ரம்ஜானுக்குப் பிறகு எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடக்கலாம் என்றும் குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டதாக ஊடகங்கள் பதிவு செய்திருக்கின்றன. இந்தக் குறுஞ்செய்தி எத்தனை பேருக்குப் போய் சேர்ந்தது என்பதெல்லாம் தெரியாது. ஆனால் இது குறித்த பேச்சு காட்டுத் தீயாகப் பரவிப் பீதியைக் கிளப்பியது. வடகிழக்குப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு இந்தத் தகவல் கிடைத்ததும் அவர்கள் வெளி மாநிலங்களில் இருக்கும் தங்கள் உறவினர்களைத் தொடர்புகொண்டு வீடு திரும்பும்படி வற்புறுத்தினார்கள் என்றும் செய்திகள் வந்தன. முதலில் கர்நாடக மாநிலத்தில் இந்த வதந்தி கிளம்பியது. ஏராளமான வடகிழக்கு மக்கள் பெங்களூரு ரயில் நிலையத்திலிருந்து வடகிழக்கு மாநிலங்களை நோக்கி விரைந்தார்கள். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே, கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் ஆகியோர் 'இந்த வதந்திகளை நம்ப வேண்டாம்' என்றுக் கூறி வடகிழக்கு மக்களைச் சமாதானப்படுத்த முயன்றார்கள். அதற்குள் இந்த வதந்தி நாடு முழுவதும் பரவியது. சென்னை உட்பட நாட்டின் முக்கிய நகரங்களில் வசிக்கும் வடகிழக்குப் பகுதி மக்கள் தங்கள் சொந்த மண்ணை நோக்கி ரயிலேறினார்கள். சென்னையில் இருக்கும் வடகிழக்கு மக்களின் பாதுகாப்புக்குத் தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவாதம் கூறினார். ஆனாலும் ரயில்களில் ஏறும் மக்களின் பீதி குறையவில்லை. கடந்த மே மாதம் முதல் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சமூக வலைதளங்கள் மூலம் திட்டமிட்ட ரீதியில் இந்த வதந்தியைப் பரப்பிவருவதாக மத்திய அரசு கூறியது. சில மாதங்களாகவே இந்த வதந்தி பரவுகிறது என்றால் மத்திய உளவுத்துறை அதைத் தடுக்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது புரியாத புதிராக உள்ளது. சமூக வலைதளங்களின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் சட்டம் எதிர்க்கப்பட்டதே காரணம் என்கிறது மத்திய அரசு. அந்த வாதத்தை ஏற்றுக்கொண்டாலும்கூட மத்திய அரசால் ஃபேஸ்புக்கிலோ, டுவிட்டரிலோ ஒரு முகவரியை ஏற்படுத்தி இந்தப் பிரச்சாரத்தின் முனையை முறித்திருக்க முடியாதா? அரசின் அதிகாரபூர்வமான முகவரி என்றால் ஏராளமானவர்கள் அதில் சேர்ந்திருப்பார்களே? அப்துல் கலாம், அமிதாப் பச்சன், அமீர் கான், டெண்டுல்கர் போன்ற பிரபலங்கள் மூலமாக கமெண்ட்டுகள் தரவும் ஏற்பாடு செய்திருக்கலாமே? செல்போன் மூலம் தினந்தோறும் ஏராளமான தகவல்கள் பறிமாறப்படுகின்றன. அந்த வசதிகளை மத்திய அரசின் துறைகளும் பயன்படுத்துகின்றன. அந்த வசதியை இப்போது ஏன் அரசு பயன்படுத்தவில்லை? வடகிழக்கு மாநில அலைபேசி எண்களை குறிவைத்தே இந்தக் குறுஞ்செய்திகள் வந்திருப்பதாகத் தெரிகிறது. இதன் பின்னணியில் பாகிஸ்தான் அரசு இருப்பதாக மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே. சிங் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் பாகிஸ்தான் அரசு வழக்கம் போல அதை மறுத்தது. ஆதாரங்களை இந்தியா கொடுத்தால் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியது. உடனே உள்துறை அமைச்சகம் அதற்கான ஆதாரங்களை வெளியிட்டது. பாகிஸ்தான் மௌனம் சாதிக்கிறது. இந்த வதந்தியைப் பரப்பியது பாகிஸ்தான்தான் என்று சொல்வதன் மூலம் மத்திய அரசு தப்பித்துக்கொள்ள முடியாது. ஒரு நாட்டின் மீது பகைமை உணர்வு கொண்ட அண்டை நாடுகள் பிரச்சினைகளை உருவாக்க எப்போதுமே தயாராக இருக்கும் என்பது சின்னப் பிள்ளைகளுக்குக்கூடத் தெரியும். அஸ்ஸாமில் கலவரம் நடந்த பிறகாவது மத்திய அரசு பாகிஸ்தானின் சதி குறித்து கவனம் செலுத்தியிருக்க வேண்டும். நம் நாட்டைப் பொறுத்தவரை, ஒரு மாநிலத்து மக்கள் பிழைப்புக்காக வேறு மாநிலங்களை நோக்கிப் படையெடுப்பது எப்போதுமே நடக்கக்கூடியதுதான். உதாரணமாக, சென்னையில் ஏராளமான வட இந்தியர்களைப் பார்க்க முடியும். அவர்களில் சிலர் பரம்பரை பரம்பரையாக இங்கே வசித்துவருகிறார்கள். அவர்களுக்குத் தங்கள் தாய்மொழியில் பேச மட்டுமே தெரியும். மற்ற தொடர்புகள் எல்லாம் தமிழில்தான். இப்போதும் சென்னை, திருப்பூர் உள்ளிட்ட தமிழக நகரங்களில் வட இந்தியர்கள் அதிகமாக இருக்கிறார்கள். இவர்கள் யாருடைய வருமானத்தையும் பிடுங்கி வாழ்வதில்லை. மாறாக இவர்கள் இல்லாவிட்டால் பல்வேறு சாதாரண வேலைகள் இங்கு நடைபெறாது என்பதுதான் யதார்த்தம். இதுபோன்றே ஏராளமான தமிழர்கள் டில்லி, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் இருக்கிறார்கள். இதுபோன்ற வதந்திகள் இத்தகைய சுமுகமான இடப் பெயர்வுகளையும் அவர்களுடைய அமைதியான வாழ்வையும் குலைக்கின்றன. சில சமயங்களில் வெளிமாநிலத்தவர்களின் குடியேற்றங்கள் குறித்து உள்ளூர் மக்களிடையே சர்ச்சைகளை ஏற்படுத்தினாலும் இதுவரை பெரியளவில் குழப்பம் எதுவும் ஏற்பட்டதில்லை. சமீபத்தில் சென்னையில் வங்கி கொள்ளையர்கள் என்ற சந்தேகத்தில் சில பீகார் இளைஞர்கள் என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்டார்கள். அதைத் தொடர்ந்து வட மாநிலத்தவர் மீது சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால் அப்போது எந்த வட மாநிலத்தவரும் சென்னையை விட்டு ஓடிவிடவில்லை. ஆனால் இந்த வதந்தி பலரைத் தங்களது ஊர்களை நோக்கி ஓட வைத்திருக்கிறது. வதந்தியின் வலிமை எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை இதன் மூலம் புரிந்துகொள்ளலாம். எனவே வதந்திகளை மிக முக்கியமான அபாயமாகக் கருதி அவற்றைத் திறம்பட எதிர்கொள்ள வேண்டும் என்பதே சராசரி குடிமகனின் எதிர்பார்ப்பு.

No comments:

Post a Comment