Friday, November 23, 2012

சவீதா விவகாரம் நடந்தது என்ன?

உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் இந்திய வம்சாவளிகள் வசித்து வருகிறார்கள். சில நாடுகளின் சட்டதிட்டங்கள் அங்குள்ள மக்களின் வாழ்வாதாரங்களை அழிப்பதாக இருக்கிறது. இந்த விஷயத்தில் அந்த நாடுகளில் வசிக்கும் இந்தியர்களும் தப்ப முடிவதில்லை. சமீபத்திய உதாரணம் சவீதா. இப்போது சவீதாவின் கதையைப் படிப்போம். அயர்லாந்தில் வசித்த பெண் மருத்துவர் சவீதா ஹலப்பனாவர். அவர் சில மாதங்களுக்கு முன்னால் கர்ப்பமடைந்துள்ளார். ஆனால் வயிற்றில் இருந்த குழந்தை இறந்துவிட்டது. அதனால் சவீதா முழுமையாக கருக்கலைப்பு செய்துகொள்வதற்காக மருத்துவர்களை அணுகினார். சவீதாவும் ஒரு மருத்துவரே என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அந்த நாட்டில் கருக்கலைப்புத் தடைச் சட்டம் அமலில் உள்ளதால் கருக்கலைப்பு செய்ய ஐரிஷ் நாட்டு மருத்துவர்கள் மறுத்துவிட்டார்கள். கருவின் மூலமாக விஷம் பரவியதால் சவீதா செப்டிசீமியா என்ற மோசமான பாதிப்புக்கு உள்ளாகி மரணமடைந்தார். இந்த சம்பவம் உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களிடம் அதிர்ச்சியலையை ஏற்படுத்தியுள்ளது. அந்த நாட்டிலும் கருக்கலைப்பு எதிரான போராட்டங்கள் தலைதூக்கியுள்ளன. கருக்கலைப்பு விதிகளை தளர்த்தக்கோரி அந்நாட்டு தலைநகரம் டப்ளினில் 2 ஆயிரம் பேர் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டம் நடந்தது. அதேபோல், லண்டனில் உள்ள அயர்லாந்து தூதரகத்திலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களிடம் இந்த மரணம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய வெளியுறவுத் துறை அயர்லாந்து அரசை தொடர்புக் கொண்டது. அதன் காரணமாக சவீதாவின் மரணம் குறித்து 7 பேர் கொண்ட விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. ஆனால் அந்த விசாரணை குழுவில் சவீதாவுக்கு சிகிச்சையளித்த கால்வே மருத்துவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 3 பேர் இருப்பதால் நியாயமான விசாரணை நடக்காது என்று சவீதாவின் கணவர் பிரவீண் ஹலப்பனாவர் கூறினார். இதையடுத்து அந்த மூன்று பேரையும் குழுவில் இருந்து நீக்குமாறு அயர்லாந்து பிரதமர் எண்ட கென்னி உத்தரவிட்டுள்ளார். மேலும், பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள கருக்கலைப்பு மறுப்புச் சட்டத்தை உடனடியாக திருத்த முடியாது என்றாலும் திருத்தம் கொண்டுவர பரிசீலிப்பதாக அவர் உறுதியளித்தார். இந்த விவகாரத்தில் ஒரு செய்தியை நாம் கவனிக்க வேண்டும். கருக்கலைப்பு செய்வது பாவம் என்று கத்தோலிக்கர்கள் நினைக்கிறார்கள். இந்த எண்ணம் அவர்களின் ஆதிக்கத்தில் உள்ள நாடுகளின் சட்டங்களில் எதிரொலிக்கிறது. இதனை அமல்படுத்துவதால் ஏற்படும் தீமைகளை அவர்கள் கணக்கில் கொள்வதில்லை. யதார்த்த உணர்வற்ற இந்த சட்டங்களால் அந்த நாடுகளில் வசிக்கும் இந்தியர்களும் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் நமது நாட்டிலோ, வெளிநாட்டவர்களுக்கு கருணை காட்டப்படுகிறது. மேலும் வெளிநாட்டு மதங்களைச் சேர்ந்தவர்களையும் பரந்த மனப்பான்மையோடு அணுகுகிறோம். இந்த சூழ்நிலை நமது சட்டங்களில் எதிரொலிக்கிறது. எனவே பாரதம், உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்பதில் பெருமிதம் கொள்வோம்

No comments:

Post a Comment