Tuesday, November 20, 2012

ஒபாமாவின் வெற்றி

கடந்த நவம்பர் 7ஆம் தேதி நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பராக் ஒபாமா மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். ஆனால் இரண்டாவது முறை ஜனாதிபதியாக வருவதற்கு இந்த முறை அவர் போராட வேண்டியிருந்தது. 2008ஆம் ஆண்டில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் பராக் ஒபாமா முதன்முறையாகப் போட்டியிட்டார். கருப்பர் இன மக்களின் ஆதரவுள்ள ஜனநாயகக் கட்சியின் சார்பில் அவர் நிறுத்தப்பட்டார். ஒரு கருப்பருக்கும், முஸ்லிம் தாய்க்கும் பிறந்த ஒபாமா, 1996இல் நடந்த அமெரிக்க செனட் தேர்தலில் போது அரசியலுக்குள் நுழைந்தார். அமெரிக்காவில் சிறுபான்மையின மக்களான கருப்பர்களின் பிரதிநிதியாக ஒபாமா கருதப்பட்டார். மேலும் 2007ஆம் ஆண்டு தொடங்கி அமெரிக்கப் பொருளாதாரம் பெரிதும் வீழ்ச்சியை சந்தித்தது. அந்த நேரத்தில் ஜனாதிபதி தேர்தல் நடந்ததால் ஒபாமா பொருளாதார சீர்த்திருத்தத்தை முன்வைத்து பிரச்சாரம் செய்தார். அமெரிக்காவை கடனில் இருந்து மீட்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். மேலும் வேலைவாய்ப்பை பெருக்கப் போவதாக அறிவித்தார். முக்கியமாக, அவரது ‘நம்மால் முடியும்’ (YES WE CAN!) என்ற வாசகம் பெரும் வரவேற்பைப் பெற்றது. கருப்பின மக்களின் வாக்குகள், சீர்திருத்தத்தை எதிர்பார்த்தவர்களின் வாக்குகள் ஒபாமாவிற்கு குவிந்ததால் 2008இல் நடந்த ஜனாதிபதி தேர்தலில் அவர் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்தியாவிற்கு ஆதரவானவர் என்ற தோற்றமும் ஒபாமாவுக்கு இருந்தது. ஆனால் அவர் சார்ந்துள்ள ஜனநாயகக் கட்சி ஆட்சிக்கு வரும்போதெல்லாம் இந்தியாவிற்கு பாதகமான நடவடிக்கைகளே எடுக்கப்பட்டன என்பதையும் சில இந்திய அரசியல் விமர்சகர்கள் சுட்டிக் காட்டினார்கள். கடந்த நான்கு ஆண்டுகால ஆட்சியில் ஒபாமாவின் சாதனை என்று குறிப்பிடும்படி எதுவும் இல்லை. உலகத்தை அச்சுறுத்தி வந்த பயங்கரவாதியான ஒசாமா பின்லேடனைக் கொன்றதை வேண்டுமானால் அவரது ஆட்சியில் நடந்த மிகப்பெரிய சாதனை எனலாம். என்றாலும் ஒபாமா பல முயற்சிகளை முன்னெடுத்தார். பல பிரச்சினைகளில் அமெரிக்காவை முற்போக்குப் பார்வைக்குக் கொண்டு வருவதற்குப் பல்வேறு முயற்சிகள் எடுத்தார். உதாரணமாக ஓரினச் சேர்க்கைப் பிரிவினரின் பாதுகாப்பை ஒபாமா உறுதி செய்தார். கருத்தடைச் சாதனங்களை சட்டபூர்வமானதாக மாற்றினார். செப்டம்பர் 11, 2011க்குப் பிறகு அமெரிக்காவில் முஸ்லிம்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் கேள்விக்குறியாகின. ஆனால் ஒபாமா ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் வெகுவாகக் குறைந்தன. அமெரிக்காவின் பொருளாதாரம் கடும் நெருக்கடியில் இருந்த நேரத்தில் ஒபாமா ஜனாதிபதியாகப் பதவியேற்றார். அவரது செயல்பாடுகள் பெரியளவில் மாற்றங்களை ஏற்படுத்தாவிட்டாலும் சில சலனங்கள் ஏற்பட்டன. சிட்டி வங்கியை கடன் சுமையிலிருந்து மீட்டெடுத்தது ஒபாமாவின் மதிப்பை அதிகரிக்கச் செய்தது. அமெரிக்காவில் பள்ளிக் கல்வியைப் பாதியில் விட்டு வெளியேறுபவர்கள் அதிகம். அவர்கள் தொடர்ந்து கல்வி கற்க வைக்கும் விதத்தில் அமெரிக்கப் பள்ளிக் கல்வியில் மாறுதல் கொண்டுவர ஒபாமா திட்டமிட்டுள்ளார். உள்நாட்டு வேலைவாய்ப்பை அதிகரிக்க செயல்முறை அயலாக்க நடைமுறையைத் தடை செய்தது போன்ற சில நடவடிக்கைகளை மட்டுமே அவரால் எடுக்க முடிந்தது. அவர் அயலாக்கத்தை தடை செய்தது இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையாகக் கருதப்பட்டது. ஆனால் இந்தியாவுக்கு அயலாக்கப் பணிகளைத் தந்துவந்த பெரும்பாலான நிறுவனங்கள் இந்தியாவுக்கு நேரடியாக வந்து நிறுவனங்களை ஆரம்பித்தன. அதனால் ஒபாமாவின் இந்தத் திட்டம் செல்லுபடியாகவில்லை. ஒபாமாவின் சறுக்கல்கள் என்று சொல்லக்கூடிய அளவில் ஏராளமான சம்பவங்கள் நடந்தன. ஈரான் விவகாரத்தில் வெளியுறவுக் கொள்கை அப்படியே தொடர்கிறது. லிபியாவில் அமெரிக்கா தலையிட்டதை உலகமே கண்டிக்கிறது. மேலும் வேலைவாய்ப்பற்ற மக்களின் எண்ணிக்கை 8 சதவீதத்திற்கு மேல் இருக்கிறது. இது போன்ற நிகழ்வுகள் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தின. மேலும் ஒபாமாவுக்கு ஒரு கவலையும் இருக்கிறது. குறிப்பாக சோஷலிசப் பொருளாதாரம் தோல்வியடைந்த பிறகு ‘முதலாளித்துவம்’ என்ற பெயரில் அமெரிக்காவின் பொருளாதாரமே உலகத்தை ஆட்டிப் படைத்தது. ஆனால் அமெரிக்கப் பொருளாதாரம் வீழ்ச்சியை சந்தித்த பின்னர், பல நாடுகள் தங்களது போக்கைத் தாங்களாகவே தீர்மானிக்கத் தொடங்கியுள்ளன. உலக நாடுகளை அமெரிக்காவின் பிடியில் வைத்திருந்தால்தான் அந்நாட்டின் பொருளாதாரம் சரியாகும் என்பது அமெரிக்க ஆட்சியாளர்களின் நம்பிக்கை. அதில் ஒபாமாவும் விதிவிலக்கல்ல. இதன் காரணமாகவே இந்தியாவில் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டைக் குறித்து அவர் கருத்துக் கூறினார். ஒருவேளை உலக நாடுகளின் பொருளாதாரங்கள் அமெரிக்காவைப் பின்பற்றாவிட்டால் தனக்கு அமெரிக்க வரலாற்றில் அழியாத அவப்பெயர் கிடைக்கும் என்பதுதான் ஒபாமாவின் கவலை. நடந்து முடிந்த தேர்தலில் இவையெல்லாம் பாதிப்பை ஏற்படுத்தாமல் இல்லை. பணக்காரர்களுக்கு அதிக வரி விதிக்க வேண்டும் என்று ஒபாமா பிரச்சாரம் செய்தார். அதைக் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் மிட் ரோம்னி கடுமையாக சாடினார். இந்த முறை இன்னொரு வேடிக்கையும் நடந்தது. ‘ஒபாமா கருப்பு இனத்தவர், அவருக்கு ஓட்டு போடாதீர்கள்’ என்று மிட் ரோம்னியும் அவர் சார்ந்துள்ள குடியரசு கட்சியினரும் பிரச்சாரம் செய்தார்கள். மேலும் அவரது ஆட்சிக் காலத்தில் கருப்பின மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. அதன் காரணமாக சில கருப்பினத்தவர்கள் குடியரசுக் கட்சியினருக்கு வாக்களிக்கவும் செய்தார்கள். ஒபாமாவின் இரண்டாவது வெற்றியை பிரம்மாண்டமானது என்று குறிப்பிட முடியாது. அமெரிக்க மக்கள் போனால் போகட்டும் என்று அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பைத் தந்திருக்கிறார்கள். இந்த முறை அவரது வெற்றிக்கு இனமோ அல்லது நிறமோ காரணமாக அமையவில்லை. சமீபத்தில் நடந்த சாண்டி புயலின் போது ஒபாமாவின் வேகத்தைக் குடியரசுக் கட்சியினர்கூட பாராட்டினார்கள். அந்த நிவாரணப் பணிகூட ஒபாமாவின் வெற்றிக்கு காரணமாக விளங்கியது. இனியொரு முறை ஒபாமாவுக்கு ஜனாதிபதியாக வாய்ப்பு கிடைக்காது. ஒபாமாவிடம் உலகமே ஏராளமான விஷயங்களை எதிர்ப்பார்க்கிறது. குறிப்பாக உலக அமைதியில் அமெரிக்காவின் பங்கு தவிர்க்க முடியாதது. ஏறக்குறைய அனைத்து உலக நாடுகளுக்கும் அமெரிக்காவின் நட்பு முக்கியமானது. ஐ.நா. சபையிலும் அமெரிக்காவின் செயல்பாடுகளைப் பொறுத்தே முடிவுகள் எடுக்கப்படுகின்றன. மேலும் அமெரிக்க மக்களும் தங்களுடைய தலைவர்கள் உலகப் பெரும் தலைவர்களாக இருப்பதை விரும்புகிறார்கள். அமெரிக்க அதிபர் தேர்தலில் உலகத்தின் சமாதானம் பற்றியும் விவாதிக்கப்படும். அதிபர் பராக் ஹுசைனி ஒபாமாவின் கருத்துக்கள் உலக சமாதானத்தை நிலைநாட்டுபவையாகக் கருதப்படுகின்றன. அவர் தனது செயல்பாடுகளைத் தொடங்குவதற்கு முன்பாகவே தனது கருத்துக்களின் மூலம் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இலங்கை விஷயத்தில் அமெரிக்காவின் தற்போதைய நடவடிக்கைகள் பாராட்டத்தக்க அளவில் உள்ளன. உலகம் முழுவதையும் உலுக்கியெடுத்த சேனல் 4இன் காணொளி வெளியான பிறகு ஈழம் தொடர்பான அமெரிக்காவின் செயல்களில் வேகம் தெரிந்தது. ஆனால் 2009இல் நடந்த இனப்போர் சமயத்தில் தமிழர்களின் கதறலை அமெரிக்கா காதில் வாங்க மறுத்ததையும் அந்த நேரத்தில் இலங்கை அரசுக்கு உதவிகள் செய்ததையும் மறக்க முடியாது. இவை அனைத்தையும் வைத்துப் பார்க்கும் போது ஈழத் தமிழர் பிரச்சினைகளில் அமெரிக்க அரசின் நிலைப்பாடு இரட்டை நிலையாகவே தெரிகிறது. ஒபாமா இந்த பிரச்சினையில் தீவிரமாக கவனம் செலுத்த வேண்டும் என்று உலகம் முழுவதும் பரவியுள்ள தமிழர்கள் எதிர்ப்பார்க்கிறார்கள். மேலும் சமீப காலமாக உலக நாடுகள் அமெரிக்காவின் பிடியிலிருந்து கழன்று வருவதையும் கவனிக்க வேண்டும். ஈரான் அணு ஆயுதம் வைத்திருப்பதை ஒபாமா குறை கூறியிருக்கிறார். ஆனால் பல உலக நாடுகளை அணு ஆயுதத்தைக் காட்டி அமெரிக்கா மிரட்டியதையும், இரண்டாம் உலகப் போர் சமயத்தில் ஜப்பான் மீது அணுகுண்டு போட்டதையும் உலகம் இன்றுவரை மறக்கவில்லை. இதுபோன்ற விஷயங்களை ஒபாமா முழுவதும் சரிசெய்ய முடியாவிட்டாலும் உலக சமாதானத்தில் அமெரிக்காவின் பங்கை ஓரளவாவது உறுதி செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் அமெரிக்க ஜனாதிபதிகளின் வரிசையில் மகத்தானவராக ஒபாமா வரலாற்றில் இடம்பெறுவார். அமெரிக்கா பெரும் பொருளாதார நெருக்கடியின் சிக்கித் தவிக்கிறது. அதோடு உலகம் இன்று பல கடுமையான நெருக்கடிகளைச் சந்தித்துவருகிறது. உலகின் ஒற்றை வல்லரசாக விலங்கும் அமெரிக்காவின் அதிபராக இந்தச் சமயத்தில் இருப்பது பெரும் சவாலான விஷயம். இதை வெற்றிகரமாக சமாளித்து சரித்திர நாயகனாக ஒபாமா விளங்குவாரா? அல்லது கால வெள்ளத்தில் கரைந்து போவாரா? பதிலை அறிவதற்கு இன்னும் நான்கு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்

No comments:

Post a Comment