Saturday, November 24, 2012

ராகுலை மக்கள் ஏற்பார்களா?

வரும் 2014ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலை சந்திக்க காங்கிரஸ் கட்சி தயாராகி வருகிறது. அதற்கு ஆயுத்தமாவதற்காக காங்கிரஸ் தேர்தல் பணிக்குழுவை நியமித்துள்ளது. அதன் தலைவராக காங்கிரஸ் பொது செயலாளர் ராகுல் காந்தி பொறுப்பேற்றுள்ளார். இந்த நியமனம் வரும் தேர்தலில் காங்கிரசை கரையேற்றுமா அல்லது வீழ்த்தி விடுமா என்பது தேர்தல் முடிவில் தெரிந்துவரும். கடந்த 2004ஆம் தேர்தல் முடிந்தவுடன் காங்கிரஸ் ஆட்சியமைத்தது. பிரதமர் பதவிக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி பிரதமராக முயற்சி செய்தார். ஆனால் கடைசி நேரத்தில் பின்வாங்கிய சோனியா காந்தி மன்மோகன் சிங்கை பிரதமராக முமொழிந்தார். அப்போது எம்.பி.யாக இருந்த ராகுல் காந்தி மத்திய அமைச்சரவையில் சேர மறுத்தார். ஆனால் காங்கிரசை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் அவரை விடுவதாக இல்லை. தொடர்ந்து பிரதமர் பதவியேற்க வலியுறுத்தி வருகிறார்கள். 2009இல் இரண்டாவது முறையாக காங்கிரஸ் ஆட்சி பொறுப்பேற்றபோது ராகுல் காந்தியை பிரதமராக பதவியேற்குமாறு கேட்டுக் கொண்டார்கள். ஆனால் ராகுல் மறுத்துவிட்டார். கடந்த 3 வருடங்களாக ஆட்சியில் நடந்துள்ள ஏராளமான ஊழல்கள் வெளிவந்து காங்கிரஸ் தலைமைக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளன. அண்ணா ஹசாரே உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் மத்திய அரசின் ஊழலுக்கு எதிராக போராடி வருவதால் நாடு முழுவதும் காங்கிரசுக்கு எதிரான நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த சில வருடங்களாக ஆளும் காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுவந்த திருணமூல் காங்கிரஸ் கட்சி சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்த்து தனது ஆதரவை விலக்கிக் கொண்டுள்ளது. மேலும் தொடங்கவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் காங்கிரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவர முடிவு செய்துள்ளது. இந்நிலையில் காங்கிரசின் தேர்தல் குழு மேலாளராக ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2004ஆம் ஆண்டு முதல் நடந்து வரும் பெரும்பாலான தேர்தல்களில் காங்கிரசை ராகுல் காந்தி வழிநடத்தினார். அவர் தேர்தல் பொறுப்பேற்ற மாநிலங்களில் காங்கிரஸ் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்துவிடவில்லை. குறிப்பாக அவர் கடும் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோதும் உத்தர பிரதேசம், பீகார் ஆகிய சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. ராகுல் காந்தியை தேர்தல் பிரிவு மேலாளராக அறிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, அவரை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதற்கு தயக்கம் காட்டுவதை ஊடகங்கள் சுட்டிக் காட்டுகின்றன. அதற்கு முக்கிய காரணம் ஒன்று இருக்கிறது. தற்போது நிலவும் சூழ்நிலையில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வருமா என்ற சந்தேகம் நிலவுகிறது. ஒரு வேளை காங்கிரஸ் ஆட்சியை இழந்துவிடுமானால் ராகுல் காந்தியை பிரதமராக ஏற்க மக்கள் மறுத்துவிட்டார்கள் என்ற எண்ணம் வலுப்படும். இப்போதைய சூழலில் காங்கிரசுக்கு நேரு குடும்பத்தை விட்டால் வழியில்லை. அதனால் காங்கிரஸ் இம்முறை கவனமாக களமிறங்குகிறது. பிரதமர் பதவியில் ராகுல் அமருவாரா மாட்டாரா என்பதற்கு மக்களிடம் தான் பதில் இருக்கிறது.

No comments:

Post a Comment