Friday, November 23, 2012

நுகர்வோர் பாதுகாப்பில் அலட்சியம்

நுகர்வோர் மத்தியில் விழிப்புணர்வை அதிகரிக்கும் முயற்சியில் அரசு ஒருபுறம் ஈடுபட்டாலும் இன்னொரு பக்கத்தில் அரசின் முயற்சிகளை நசுக்கும் விதத்தில் அரசு நிறுவனங்களே நுகர்வோரைக் காயப்படுத்துகின்றன. அதிலும் ஆசியாவில் மிகப் பெரிய நிர்வாகங்களில் ஒன்றாகத் திகழும் ரயில்வேயில் ஏராளமான அலட்சியங்கள் நடக்கின்றன. விஷயம் இதுதான். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வசந்தகுமார் என்பவர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணச் சீட்டு முன்பதிவுக்காகச் சென்றிருந்தார். தன் பயணம் தொடர்பாக அவர் விசாரித்துக்கொண்டிருந்தபோது டிக்கெட் கொடுப்பவருக்கும் அவருக்கும் இடையே ஏதோ வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. பேச்சு முற்றிப் போய் வார்த்தை தடித்திருக்கிறது. ஒரு கட்டத்தில் பணியாளர்கள் வசந்தகுமாரை அடிக்கக் கை ஓங்கியிருக்கிறார்கள். வசந்தகுமார் ரயில்வே துறையில் பணியாற்றும் மேலதிகாரிகளிடம் புகார் செய்திருக்கிறார். பலன் இல்லை. குமார் விடவில்லை. தெற்கு ரயில்வேயின் பொது மேலாளர் வரையில் புகார் தெரிவித்தார். அப்போதும் எந்த நடவடிக்கையும் இல்லை. வசந்தகுமார் வழக்கறிஞர். உயர் தீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பால் வசந்தகுமார், இந்த புகாரின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த நவம்பர் மாதம் ரயில்வே துறையைக் கடுமையாக எச்சரித்துள்ளார். நுகர்வோர் பற்றிய விழிப்புணர்வு அரசுப் பணியாளர்களுக்குக் குறைவாக இருப்பதே இதற்குக் காரணம். வாடிக்கையாளர்களிடம் நேரடியாகத் தொடர்புகொள்ள வேண்டிய பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு இந்த விழிப்புணர்வும் பொறுப்புணர்வும் கட்டாயம் இருக்க வேண்டும். 'நுகர்வோரே முக்கியமானவர்' என்று கூறினார் மகாத்மா காந்தி. ஆனால் சுதந்திரம் கிடைத்து 65 ஆண்டுகள் கழித்தும் நுகர்வோர் நலன் பற்றிய பொறுப்புணர்வு வளர்த்தெடுக்கப்படாதது கவலைக்குரிய விஷயம். சேவைகளில் குறைவு ஏற்பட்டால் நுகர்வோருக்குக் கோபம் வருகிறது. ஆனால் மக்களில் பலர் அவமானம் ஏற்பட்டாலும் கூச்சத்தால் மௌனமாக இருக்கிறார்கள். நுகர்வோர் உரிமைக்காக யாராவது குரல் கொடுத்தால் அவர்களுக்குப் பெரிய அளவில் ஆதரவு கிடைப்பதில்லை அமைப்பின் மீது இருக்கும் அவநம்பிக்கையும் செயல்படுவதில் உள்ள சுணக்கமுமே இதற்குக் காரணம். ஆனால் முனைப்புடன் செயலாற்றி மாற்றங்களைக் கொண்டுவந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். எனவே நமது அடிப்படை உரிமைகளில் சுணக்கம் ஏற்பட்டால் தைரியமாகக் குரல் எழுப்பும் சூழல் உருவாக வேண்டும். (சென்னை சலனங்கள் - 1)

No comments:

Post a Comment