Friday, November 23, 2012

குழந்தைகளை பிச்சை எடுக்க விடலாமா?

கடந்த 17ஆம் தேதி சனிக்கிழமையன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள புறநகர் பேருந்து நிலையத்தில் இளம் பெண் ஒருவர் கையில் குழந்தையுடன் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். அங்கிருந்த காவலர்களுக்கு அந்தப் பெண்ணின் மீது சந்தேகம் வந்தது. அந்த பெண்ணைக் கூப்பிட்டு விசாரித்தார்கள். அவர் கூறிய தகவலைக் கேட்டுக் காவல்துறையினர் அதிர்ந்து போனார்கள். அந்த குழந்தை அக்டோபர் 29ஆம் தேதி ஸ்டான்லி மருத்துவமனையில் பிறந்தது. அந்த குழந்தையின் தாய் ஒரு விதவை. இந்தக் குழந்தை முறை தவறிப் பிறந்தது என்பதாலும், அந்தத் தாய் ஏழை என்பதாலும் அதை விற்றுவிட முயற்சித்திருக்கிறார் என்பதும் தெரிய வந்தது. அப்போது முனியம்மா என்பவரிடம் 1000 ரூபாய்க்கு விற்க முயற்சி செய்திருக்கிறார். முனியம்மா பேரம் பேசி நூறு ரூபாய்க்கு வாங்கியிருக்கிறார். கடந்த மாதம் நாளிதழ்களில் வெளிவந்த மற்றொரு செய்தியும் இதன் தொடர்பில் கவனிக்கத் தக்கது. ராயபுரம் அரசு பொது மருத்துவமனையில் ஒரு குழந்தை தொலைந்து போனது. விசாரணையில் குழந்தை பிறக்காத ஏக்கத்தால் ஒரு பெண் திருடியதாகத் தெரியவந்தது. இந்த குழந்தையின் தாய் குழந்தையைக் காணாமல் தவித்தப்போது மருத்துவமனையின் டாக்டரும், நர்சுகளும் அவரைக் கடுமையாக மிரட்டியுள்ளார்கள். குழந்தையை விற்பது, திருடுவது இரண்டும் அரசு மருத்துவமனைகளில் நடந்திருக்கின்றன. வசதி அற்ற பிரிவினரில் பெரும்பாலான குழந்தைகள் அரசு மருத்துவமனைகளில்தான் பிறக்கின்றன. இந்த மருத்துவமனைகளில் இதுபோல நடப்பது அதிர்ச்சி தருகிறது. அலட்சியம், கண்காணிப்பின்மை, எந்தப் பாதுகாப்பும் அற்ற சூழல் ஆகியவையே இதுபோன்ற சம்பவங்களுக்குக் காரணம் என்பதில் சந்தேகமில்லை. இதுபோன்ற சம்பவங்களைத் தொடர விடாமல் சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவமனைகளில் பாதுகாப்பைக் கூட்ட வேண்டும். அங்குள்ள பணியாகளின் பொறுப்புணர்வைக் கூட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தைகளை வைத்து பிச்சையெடுப்பதைத் தடை செய்வது இதுபோன்ற குற்றங்களைக் களைய உதவும். குழந்தை தொழிலாளர் போன்று இதுவும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைதான். இந்த விஷயத்தில் பொதுமக்களுக்கும் பொறுப்பு உள்ளது. குழந்தையை வைத்து பிச்சையெடுப்பவர்கள் மீது சந்தாகம் எழுந்தால் அமைதியாகக் கடந்து செல்லாமல் குழந்தைகளுகு உதவுவதற்கான இலவச அழைப்பு எண் 1098ஐ அழைத்துத் தகவல் அளியுங்கள். ஒரு குழந்தையின் வருங்காலத்தைக் காப்பாற்றும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கும். (சென்னை சலனங்கள் - 2)

No comments:

Post a Comment