Monday, August 13, 2012
கியூரியாசிடி தந்த நம்பிக்கை
கடந்த ஆகஸ்டு 5ம் தேதி உலகத்தில் உள்ள கோடிக்கணக்கான கண்கள் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு முன் தவம் இருந்தன. அந்த கண்கள் ஒலிம்பிக் போட்டிகளையோ, உலக பொருளாதார வீழ்ச்சி பற்றிய செய்திகளையோ, ஏதேனும் அரசியல் சம்மந்தமான பரபரப்புகளையோ எதிர்பார்த்து உட்கார்ந்திருக்கவில்லை. செவ்வாய் கிரகத்தில் அமெரிக்காவின் நாஸா விஞ்ஞானிகள் அனுப்பிய ‘கியூரியாசிடி’ விண்கலம் பத்திரமாகத் தரையிறங்குமா என்ற பதைபதைப்புடன் டி.வி.களுக்கு முன் அமர்ந்திருந்தன அந்த கண்கள். இந்திய நேரப்படி மதியம் சரியாக 12.10 மணிக்கு அந்த விண்கலம் தரையிறங்கிய செய்தியைக் கேட்டப்பிறகே அன்றைய மதிய சாப்பாடு பலருடைய வயிற்றில் நுழைந்தது.
இதற்கு முன் நாஸா செவ்வாய் கிரகத்துக்கு பலமுறை வெற்றிகரமாக விண்கலங்களை அனுப்பியிருந்தது. ஆனால் அவை எவற்றிலும் இல்லாத சிறப்பு இந்த விண்கலத்தில் உண்டு. இதுவரையில் இல்லாத முறையில் இந்த விண்கலம் தரையிறங்குவதற்கு இதுவரை இல்லாத புதுமுறை செயல்படுத்தப்பட்டது. 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த விண்கலம் பல வருட ஆராய்ச்சிக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த ஆறு சக்கர வண்டி தரையிறங்க மொத்தாம் ஏழு நிமிடம் ஆகும். அந்த ஏழு நிமிடங்களில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் பரபரப்புமிக்க அந்த ஏழு நிமிடங்களை ‘ஏழு நிமிட பயங்கரம்’ என்று அழைத்தார்கள். மேலும் இந்த விண்கலத்தில் கடைசி நேரத்தில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அமெரிக்காவில் இருக்கும் நாஸாவின் தரைக் கட்டுப்பாட்டு கேந்திரத்திலிருந்து அதை சரி செய்ய முடியாது. காரணம் பூமியிலிருந்து விண்கலத்திற்கும், விண்கலத்திலிருந்து பூமிக்கும் சிக்னல் தர 14 நிமிடங்கள் தேவைப்படும்.
செவ்வாய் கிரகம் பூமியைப் போலவே 24 மணிநேரம் சுற்றிக்கூடியது. அதில் 12 மணிநேரம் பூமியைப் பார்த்தும், 12 மணிநேரம் மறுபுறத்திலும் இருக்கும். செவ்வாயின் மறுபுறத்தில் அது இருக்கும்போது தரும் சிக்னல் பூமியை வந்தடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியவுடன் செவ்வாய் கிரகத்தில் படமெடுத்து பூமிக்கு அனுப்பி வைத்தது. இதுபோன்று கியூரியாசிடி விண்கலம் மேலும் கீழுமாக செவ்வாய் கிரகத்தில் நடமாடி பல்வேறு ஆராய்ச்சிகளை செய்யும். அந்த ஆராய்ச்சிகள் தரும் முடிவுகளைப் பொருத்து செவ்வாய் கிரகத்திற்கு மனிதனை அனுப்புவதா, இல்லையா என்று அமெரிக்கா முடிவு செய்யும்.
இந்த ஆராய்ச்சிகளில் இந்தியர்கள் பெருமைப்பட வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. நாஸாவில் இடம்பெற்றுள்ள 30 சதவீத விஞ்ஞானிகள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். இன்று நாஸாவின் பல்வேறு ஆராய்ச்சிகளிலும் அவர்கள் அங்கம் வகித்து வருகிறார்கள் என்பது நமக்கு பெருமை தருவதுதானே.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment