Sunday, December 18, 2011

நூல் விமர்சனம் - சில்லறை வர்த்தகத்தை சீரழிக்கும் அந்நிய நேரடி முதலீடு


நூல் மதிப்புரை
நூல்: சில்லறை வர்த்தகத்தை சீரழிக்கும் அந்நிய நேரடி முதலீடு
நூலாசிரியர்கள்: எஸ்.குருமூர்த்தி, சேகர் ஸ்வாமி
வெளியீடு: சுதேசி விழிப்புணர்வு இயக்கம், தமிழ்நாடு
கே 75, 14- வது தெரு, அண்ணாநகர் கிழக்கு, சென்னை - 600 102.
தொடர்புக்கு : 9443140930
விலை: ரூபாய் 10 /- மட்டும்

சில்லறை வர்த்தகத்தில் 51% நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிப்பதை மத்திய காங்கிரஸ் அரசு தற்போதைக்கு ஒத்தி வைத்துள்ளது. இந்த நிலையில் சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் தமிழ்நாடு கிளை இந்த புத்தகத்தை வெளியிட்டுள்ளது பொருத்தமானது. திரு.எஸ்.குருமூர்த்தி அவர்களும், திரு.சேகர் ஸ்வாமி அவர்களும் இந்த பிரச்சனை பற்றி நன்கு ஆராய்ந்து பத்திரிக்கைகளில் எழுதிய கட்டுரைகள் மற்றும் எஸ்.குருமூர்த்தி அவர்களின் ஒரு பேச்சின் தொகுப்பே இந்த புத்தகம்.

திரு.எஸ்.குருமூர்த்தி அவர்களின் கட்டுரைகளும், பேச்சும் ஏற்கனவே படித்து, ரசித்தது தான் என்றாலும் புத்தகத்தின் வடிவில் பார்க்கும் போது இன்னும் சுவை கூடவே செய்கிறது. நம் நாட்டின் பெரும்பாலான மக்கள் (சுமார் 4 கோடி குடும்பங்கள்) ஏற்கனவே சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள போது, அந்நிய நிறுவனங்களின் கையில் சில்லறை வர்த்தகம் சிக்கினால் என்ன ஆகும் என்பதை தெளிவாக விளக்குகிறார்; நம் நாட்டு சிறு விவசாயிகள் அயல் நாட்டு விவசாயிகளை போன்றவர்கள் இல்லை, அவர்களால் பெரிய நிறுவனங்களை அணுகக்கூட முடியாது என்ற உண்மையை ஆணித்தரமாக எடுத்துரைக்கிறார். சில்லறை வர்த்தகத்தில் இதுவரை இருக்கும் பாரம்பரியமான சந்தைப்படுதலும், கலாச்சார நடைமுறைகளும் வால் மார்ட் போன்ற அந்நிய நிறுவனங்களால் எப்படி சிதையும் என்பதை விரிவாக எடுத்துரைக்கிறார் திரு.குருமூர்த்தி. அவ்வாறு சிதையும் அபாயத்தை நினைத்தாலே பிரதமர் மன்மோகன் சிங் மொழியில் சொன்னால் "கவலை தருகிறது".

திரு.சேகர் ஸ்வாமி அவர்கள் தி ஹிந்து பிசினஸ் லைனில் எழுதிய கட்டுரைத் தொகுப்பிலிருந்து சில பகுதிகள் இந்த புத்தகத்தில் வெளிவந்துள்ளது. விவரம் புரியாமல் வால்மார்ட் போன்ற நிறுவனங்களுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் அவசியம் படிக்க வேண்டிய கட்டுரை இது. பெரும் நிறுவனங்கள் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட்டால் நுகர்வோர் உரிமை எவ்வாறெல்லாம் பாதிப்படையும் என்பதை அழகாக எடுத்துரைக்கிறார். நம் பாரத நாட்டை பொறுத்தவரை சில்லறை வர்த்தகத்தில் இடைத்தரகர் மூமாக ஈடுபடுவதே நுகர்வோருக்கு மட்டும் இல்லை, விவசாயிகளுக்கும் சிறந்தது என்பதை விளக்குகிறார். சில்லறை வர்த்தகத்துக்கு ஆதரவான அனைத்து கருத்துக்களுக்கும் நேர்மையாக பதில் அளித்துள்ளார். சில்லறை வர்த்தகம் பற்றி ஆதரவாகவோ, எதிர்ப்பாகவோ கருத்து கொண்டிருப்பவர்கள் அவசியம் படிக்க வேண்டிய விஷயங்கள் தரப்பட்டுள்ளன.

அட்டைப்படத்தில் சில்லறை வர்த்தகர்கள் இடம்பெற்றுள்ளது புத்தகத்தில் விறுவிறுப்பை கூட்டுகிறது. மத்திய அரசின் பொருளாதார ஆலோசகர்கள் இந்த புத்தகத்தை படித்து, மன்மோகன் சிங், பிரணாப் முகர்ஜி ஆகியோரின் செவிட்டு காதில் ஊளையிட்டால் நல்லது.