Tuesday, January 29, 2013

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் 2014 களம் இங்கே; தளபதிகள் எங்கே?

சுதந்திரப் போராட்ட காலத்தில் அலகாபாத் நகரத்தில் இருந்த தங்களது பூர்வீக வீட்டைத் தங்கள் வாரிசுகளுக்கு எழுதிவைக்காமல் காங்கிரசுக்கு தானம் அளித்த மோதிலால் நேரு, ஜவஹர்லால் நேரு ஆகியோர் மனதில் என்னவெல்லாம் ஓடியிருக்கும் என்பது நமக்குத் தெரியாது. ஆனால் வருங்காலத்தில் தங்களது சந்ததியினர்தான் காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவிக்கு வர முடியும், நாட்டுக்கே பிரதமராகவும் வர முடியும் என்ற சூழ்நிலை உருவாகும் என்பதை அவர்கள் கற்பனை செய்துகூட பார்த்திருக்க மாட்டார்கள். ஜவஹர்லால் நேருவின் கொள்ளுப் பேரன் ராகுல் காந்தி, ஜனவரி 19ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டபோது காங்கிரஸ் தொண்டர்கள் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். ஆனால் மக்கள் யாரும் ஆச்சரியம் அடையவில்லை. இது வழக்கமான ஒன்றுதான் என்பது அவர்களுக்குத் தெரிந்தே இருந்தது. இன்றைய நிலையில் ராகுல் காந்தியை விட்டால் தலைவராக காங்கிரஸில் வேறு ஆளில்லை என்பதும் அவர்களுக்குத் தெரிந்திருந்தது. அதே நேரத்தில் அவரது செயல்பாடுகள் வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை மீண்டும் ஆட்சியில் அமர்த்துமா என்பதும் நாட்டின் அடுத்த பிரதமராக அவர் தகுதியானவர்தானா என்பதும் கேள்விக்குரியவை என்பதிலும் சந்தேகம் இல்லை. இதோடு மற்றொரு கேள்வியும் எழுப்பப்படுகிறது. அது தேர்தல் களத்தில் ராகுலை எதிர்த்து நிற்கப்போகிறவர் யார் என்பதைப் பற்றியது. அடுத்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி முன்னிறுத்தப்படுவது உறுதியாகிவிட்டது. காங்கிரசின் எதிர் முகாமான பா.ஜ.க.வில் பிரதமர் வேட்பாளர் பற்றிய அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. சமீபத்தில் பா.ஜ.க.வின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜ்நாத் சிங், “பா.ஜ.க.வில் வாரிசு அரசியலுக்கு இடமில்லை. பிரதமர்பதவிக்கான வேட்பாளரை உரிய நேரத்தில் பா.ஜ.க. நாடாளுமன்றக் குழு தீர்மானிக்கும்” என்று அறிவித்திருக்கிறார். தற்போதைக்கு அவர்கள் பிரதமர் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்காவிட்டாலும் அந்த வேட்பாளர் யாராக இருக்கக் கூடும் என்பதற்கான சமிக்ஞைகள் கிடைக்காமல் இல்லை. இன்றைய தேதியில் அரசியல் களத்தில் அதிக விமர்சனங்களையும் அதிகப் பாராட்டுக்களையும் ஒரு சேரக் குவித்துவரும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை நோக்கி ஆனைவரது கவனமும் திரும்பியுள்ளது. ராஜ்நாத் சிங் தலைவரானதும் அவரைச் சந்திப்பதற்காக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி சென்றார். அப்போது நிருபர்களை சந்தித்த மோடி, “அடுத்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வின் வியூகங்கள் குறித்து ஆலோசனை செய்ய வந்தேன்” என்றார். இந்தக் கூற்று ஊகங்களைப் பல மடங்கு பெருக்கியுள்ளது. ஏற்கனவே தலைவராக இருந்த நிதின் கட்காரிக்கும் மோடிக்கும் ஒத்துவராது என்பது ஊரறிந்த சேதி. எனவே புதிய தலைவர் பொறுப்பேற்றிருப்பதே மோடிக்குக் கிடைத்த வெற்றி என்று பார்க்கப்படுகிறது. இந்நிலையில் புதிய தலைவரை மோடி சந்தித்துத் தேர்தல் குறித்துப் பேசினால் பரபரப்பு எழத்தானே செய்யும்? அது போதாதென்று கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான யஷ்வந்த் சின்ஹாவும் மோடி பிரதமர் பதவிக்குத் தகுதியானவர் என்று பகிரங்கமாகப் பேசியிருக்கிறார். இத்தகைய குரல் பகிரங்கமாக எழுவது இதுவே முதல் முறை என்பது கவனிக்கத்தக்கது. ஆனால் காங்கிரஸ் கட்சியில் ராகுலுக்கு இருக்கும் முழுமையான ஆதரவு, மோடிக்கு தே.ஜ. கூட்டணியில் மட்டுமல்ல. அவர் சார்ந்துள்ள பா.ஜ.க.விலேயே இல்லை என்பது கவனத்துக்குரிய விஷயம். பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்தான் பிரதமர் வேட்பாளர் என்பதை ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் ஏற்றுக்கொண்டாலும் அவர்கள் நரேந்திர மோடியை ஏற்பது சந்தேகம்தான். ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த பீகார் முதல்வர் நீதீஷ் குமார் ஏற்கனவே மோடியுடன் மோதலில் ஈடுபட்டு வருகிறார். மோடி-ராஜ்நாத் சிங் சந்திப்பால் அதிர்ச்சியடைந்த அந்த கட்சித் தலைவர் சரத்யாதவ் தே.ஜ. கூட்டணி ஒருங்கிணைப்புக் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளார். இந்த கூட்டத்தில் பிரதமர் வேட்பாளரை உடனடியாக பா.ஜ.க. தேர்ந்தெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படும் என்று தெரிகிறது. பா.ஜ.க.விலும் மோடிக்கு எதிர்ப்பு இருக்கிறது. பா.ஜ.க. தலைவராக நிதின் கட்காரி இருந்த சமயத்தில் அவருக்கும் மோடிக்கும் சரியான நட்புறவு இல்லை என்பது ஊரறிந்த ரகசியம். மோடியின் பிரதான எதிரியாகக் கருதப்படும் சஞ்சய் ஜோஷிக்கு கட்காரி முக்கியத்துவம் தந்தது இருவருக்குள்ளும் கோபத்தை கிளப்பிவிட்டது. இரண்டாவது முறை தலைவராக கட்காரிக்கு ஆர்.எஸ்.எஸ்.ஸின் ஆதரவு இருந்தபோதும் அத்வானியின் கடும் எதிர்ப்பின் காரணமாக, கட்காரிக்கு முன்பு இருந்த ராஜ்நாத் சிங் மீண்டும் தலைவராக வந்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. கட்காரியின் எதிரியாக அறியப்பட்ட மோடி இதனால் மகிழ்ச்சியடைந்துள்ளார். ராஜ்நாத் தலைவராக வந்ததும் உடனடியாக ட்விட்டரில் தனது மகிழ்ச்சியை மோடி வெளிப்படுத்தினார். மோடிக்குக் கட்சியில் உள்ள போட்டிகளை அவர் சமாளித்தாக வேண்டும். பிரதமர் வேட்பாளராக வருவதற்கு முன்னால் அவர் சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லி ஆகியோரின் போட்டியை மோடி எதிர்கொள்ள வேண்டியுள்ளது. மூன்றாவது முறையாக குஜராத் தேர்தலில் வென்ற நிலையில் சூழலில் மோடிக்குப் பெரிய அளவில் எதிர்ப்பு அலை இல்லை என்பதால் அவர் பிரதமர் வேட்பாளராக நியமிக்கப்படுவது சாத்தியம் என்ற நிலை உருவாகியுள்ளது. அவர் வேட்பாளராக அறிவிக்கப்படும் பட்சத்தில் ராகுல் காந்திக்கு வலுவான போட்டி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோடிக்கு அடுத்ததாக சுஷ்மா ஸ்வராஜ் பெயரே பிரதமர் பதவிக்கு அடிப்படுகிறது. ஆரம்பம் முதலே மோடிக்கு கட்சிக்குள் வலுவான போட்டி சுஷ்மாதான் என்ற கருத்து நிலவுகிறது. சுஷ்மாவுக்கு மோடி அளவுக்கு மக்கள் செல்வாக்கு இல்லை என்றாலும் கூட்டணிக் கட்சிகள் அவருக்கு ஆதரவு தெரிவிக்கின்றன. சிவசேனா கட்சியின் நிறுவனர் பால் தாக்கரே அவரது கடைசி காலத்தில் சுஷ்மா ஸ்வராஜ்தான் பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட வேண்டும் என்று குரல் கொடுத்தார். தற்போதும் சிவசேனா சுஷ்மாவையே பிரதமராக அறிவிக்க வேண்டும் என்று விரும்புகிறது. யார் பிரதமராக வர வேண்டும் என்பதில் ஐக்கிய ஜனதா தளம் இதுவரை சொல்லாவிட்டாலும் மோடியின் மீதான வெறுப்பின் காரணமாக சுஷ்மாவை ஆதரிக்கும் வாய்ப்புள்ளது. மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் நாடு முழுவதும் உள்ள பாஜக தொண்டர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதற்கு முன்னால் இவர்கள் அனைவரையும் பா.ஜ.க. சரிக்கட்ட வேண்டும். மேலும் அந்த கட்சியில் பிரதமர் வேட்பாளருக்கு பல பெயர்கள் அடிபடலாம். அவர்கள் ஒருவரை ஒருவர் கவிழ்க்க நினைப்பது ஆரோக்கியமானதல்ல. இவற்றை பா.ஜ.க. தலைமை தாண்டி வர வேண்டும். அப்போதுதான் மோடி வேட்பாளராக நின்றாலும் சரி, மற்றவர்களில் ஒருவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டாலும் சரி, அவர்களுக்குக் கிடைக்கும் மக்களின் ஆதரவை வாக்குகளாக மாற்ற முடியும். இதுவரை இந்த போட்டி நேரடியாக அறிவிக்கப்படாவிட்டாலும் மோடி – ராகுல் ஆகியோரது செயல்பாடுகள் அவர்கள் இருவரது போட்டி மனப்பான்மையை வெளிப்படுத்துகின்றன. இருவரும் ஒருவரையொருவர் எதிரியை எதிர்கொள்ளும் விதமாக தங்களை தயார் செய்து வருகிறார்கள். ஒருவர் மீது மற்றவர் வலுவான புகாரை வீசுவதில் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிருபித்து வருகிறார்கள். கடந்த சில ஆண்டுகளாகவே மோடியின் மீதும், குஜராத் மீதும் காங்கிரஸ் தொடர்ந்து அம்பெய்தி வருகிறது. தொடர்ந்து மூன்றாவது முறையாக குஜராத் மக்கள் மோடியை வெற்றிபெற வைத்திருப்பது காங்கிரஸ் அரசை உறுத்துகிறது. ஏதாவது ஒரு குற்றச்சாட்டை மோடியின் மீது வைத்துவருகிறது. 2002இல் நடந்த குஜராத் கலவரத்தில் மோடியின் மீதான களங்கம் இன்னும் மறையவில்லை. அவரது ஆட்சியின் செயல்பாடுகள் காரணமாக குஜராத் முஸ்லிம்கள் அவரை மன்னித்தாலும், மற்ற மாநிலத்தில் உள்ள முஸ்லிம்கள் அவரை எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்பது தெரியவில்லை. அந்த கலவரத்தின் வழக்குகள் மோடியின் மீது குற்றஞ்சாட்டுவது அவரது வெற்றிவாய்ப்பை பாதிக்கக்கூடும். அதே நேரத்தில் மோடியின் நிர்வாகம் அவருக்குக் கைக்கொடுக்கிறது. மோடியைத் திட்டுபவர்கள்கூட அவரது நிர்வாகத்தைப் பாராட்டுகிறார்கள். டாடா போன்ற பெரிய தொழிலதிபர்களும், அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் போன்ற பிரபலங்களும் மோடியைப் பாராட்டுகிறார்கள். குஜராத்தில் பல தொழிலதிபர்கள் முதலீடுசெய்ய முன்வருகிறார்கள். பல்வேறு வெளிநாட்டுத் தூதர்கள் மோடியைச் சந்திக்கிறார்கள். குஜராத் கலவரம் காரணமாக மோடிக்கு விசா வழங்க மறுத்த இங்கிலாந்து அரசு, இப்போது அவருக்கு பச்சைக்கொடி காட்டுகிறது. இவையெல்லாம் அவரது பலத்தை அதிகரிக்க வைக்கிறது. மோடியின் வளர்ச்சியை காங்கிரஸ் பொறாமையோடு கவனித்து வருகிறது. குஜராத்தில் முதலீடு செய்ய முன்வரும் தொழிலதிபர்களின் மீது வருமான வரி ரெய்டு நடக்கிறது. சோனியாவையும் ராகுலையும் மோடி விடுவதாக இல்லை. சோனியா காந்தியின் மருத்துவ செலவுக்காக மத்திய அரசு 1750 கோடி ரூபாயை ஏன் செலவு செய்தது என்று மோடி கேள்வி எழுப்பினார். தனிப்பட்ட மருத்துவச் செலவுகளை கேள்வி கேட்பதா என்று காங்கிரசும் பதிலுக்குப் பாய்ந்தது. குஜராத்தை காங்கிரஸ் புறக்கணிப்பதாக மோடி மக்களிடம் முறையிட்டார். குஜராத் தேர்தல் சமயத்தில் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்கள். ஆனால் கடைசியில் மோடியே ஜெயித்தார். ராகுல் காந்தியின் வளர்ச்சியையும் பார்ப்போம். அவர் காங்கிரசுக்கு அடியெடுத்து வைத்தே பத்து ஆண்டுகள்தான் ஆகின்றன. காங்கிரசின் பொதுச் செயலாளர் பதவிக்கு அவர் வந்ததற்கு வாரிசு அரசியலே காரணம் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. ஆனால் அவர் அத்துடன் திருப்தியடைந்து விடவில்லை. தான் பதவிக்கு வந்ததற்கு பரம்பரை காரணம் இருந்தாலும் சாதாரண மக்கள் கட்சி பதவிக்கு வரவேண்டும் என்று அவர் விரும்பினார். முதற்கட்டமாக அவர் பொறுப்பெடுத்த இளைஞர் காங்கிரஸ், மாணவர் காங்கிரஸ் ஆகியவற்றில் தேர்தல் முறையை ஏற்படுத்தினார். அதனால் பல இடங்களில் சாதாரண தொண்டர்களும் கட்சி பதவிக்கு வந்தார்கள். அதனால் சில மூத்த தலைவர்களின் பொறாமைக் கண்கள் ராகுல் மீது விழவே செய்தன. நாட்டின் முதுகெலும்பு கிராமப்புறத்தில்தான் உள்ளது என்ற காந்தியின் சித்தாந்தத்தில் நம்பிக்கை இருப்பதாக ராகுல் கூறினார். அதனால் கிராமங்களில் உள்ள சாதாரண மக்களின் வீடுகளில் தங்கிவருகிறார். ராகுலின் அணுகுமுறை காரணமாக தேர்தல்களில் சாதகங்களும், பாதகங்களும் சம அளவிலேயே உள்ளன. நாட்டின் பெரிய மாநிலமான உ.பி.யில் அவர் மேற்கொண்ட பிரச்சாரத்தால் கடந்த மக்களவைத் தேர்தலில் அந்த மாநிலத்தில் வெகுநாட்களுக்குப் பிறகு காங்கிரஸ் 22 இடங்களைப் பிடித்தது. ஆனால் அவர் தொடர்ந்து சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டபோதும் அங்கு நடந்த சட்டமன்ற தேர்தலில் 27 இடங்களே கிடைத்தன. பீகாரில் 7 சட்டமன்ற இடங்களே கிடைத்தன. குஜராத்திலும் ராகுல் வசீகரம் எடுபடவில்லை. தலைமைப் பண்புகள் ராகுல் காந்தியின் ரத்தத்திலேயே ஊறியிருக்கும் என்று நினைக்கும் மக்கள் இன்னும் இருக்கிறார்கள். நேரு குடும்பப் பாசம் இந்திய மக்களிடம் இன்றும் நீடிக்கிறது. மாற்றுத் தலைவர்கள் காங்கிரஸில் தலையெடுக்காத்து இதற்கு ஒரு முக்கியக் காரணம். அவரது வயதும் கூடுதல் பலம். ஆனால் அவரது பார்வையால் நாட்டிலுள்ள பிரச்சினைகளைத் தீர்க்க முடியவில்லை என்ற குற்றச்சாட்டும் பலமாகவே கேட்கிறது. விவசாயிகளின் வீடுகளில் அவர் தங்க ஆரம்பித்ததும், கடன் தொல்லை, விவசாயத்தில் தோய்வு ஆகியவை காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளத் தொடங்கியதும் ஒரே நேரத்தில் நடந்தன. மக்கள் பிரச்சினையை அவரால் சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. தேசிய நதி நீர் இணைப்பை பல சமூக நிறுவனங்கள் வலியுறுத்துகின்றன. ஆனால் ராகுல் அந்த திட்டத்தைத் தீவிரமாக எதிர்க்கிறார். சட்டீஸ்கர் மாநிலத்தில் ஆதிவாசிகளோடு இணைந்து நில கையகப்படுத்துதலுக்கு எதிராக போராட்டம் நடத்திய ராகுல் தற்போது அவர்களுடன் இல்லை. நரேந்திர மோடிக்கும், ராகுல் காந்திக்கும் பல வித்தியாசங்கள் உண்டு. ஒருவர் அரச பரம்பரையில் வந்தவர். மற்றவர் சாதாரண நிலையில் இருந்து வளர்ந்தவர். ஒருவர் மதசார்ப்பற்ற அரசியல் பேசுகிறார். மற்றவர் மதத்தை வைத்து அரசியல் நடத்துகிறார். அரசியல் அனுபவத்தில் மோடி மிகவும் மூத்தவர். ராகுல் கற்றுக்குட்டி. சமீபத்தில் இந்தியா டுடே நடத்திய கருத்துக்கணிப்பில், மோடி பிரதமராக சுமார் 50 சதவீத ஆதரவும், ராகுல் பிரதமராக சுமார் 40 சதவீத ஆதரவும் கிடைத்துள்ளன. ஆனால் மக்களவைத் தேர்தல் சமயத்தில் ஏற்படும் கூட்டணிகள், தலைவர்களின் பிரச்சாரம் ஆகியவற்றைப் பொறுத்தே வெற்றி, தோல்விகள் நிர்ணயிக்கப்படுகின்றன. முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை தற்போது சொல்ல முடியாது. ஆனால் ’யார் அடுத்த பிரதமர்?’ என்ற கேள்விக்கு முன்னால் யார் அடுத்த பிரதமருக்கான வேட்பாளர் என்னும் கேள்விக்கு பதில் கான வேண்டியுள்ளது. அந்த பதிலிலேயே முதல் கேள்விக்கான பதிலும் அடங்கியிருக்கலாம். *