Monday, February 25, 2013

திரை விமர்சனம் - ஹரிதாஸ்


அமர்க்களமான காதல் பாடல்கள் இல்லை, சிலிர்ப்பூட்டும் வசனங்கள் இல்லை, தேவையற்ற நகைச்சுவைகள் இல்லை, உபதேசங்கள் இல்லை என்று ஒரு படம் வந்தால் எப்படி இருக்கும் என்ற ஆதங்கம் பல ரசிகர்களுக்கு உண்டு. அதைப் பூர்த்தி செய்திருக்கிறது 'ஹரிதாஸ்' திரைப்படம். ஆட்டிஸம் பாதித்த மகனுக்கு என்ன சொல்லி புரிய வைப்பது? எப்படி புரியும்படி சொல்வது என்று திணறும் அப்பா, தனது உணர்வை அப்பாவிடம் சொல்ல முடியாமல் குதிரை மைதானத்திற்கு ஓடும் சிறுவன், தேறாது என்று தான் ஒதுக்கிய சிறுவன் தனக்கு முன்னாலேயே பயிற்சி எடுப்பதை அதிசயமாகப் பார்க்கும் ரன்னிங் கோச் என்று காட்சிகளே பேசும் தருணங்கள் அழகானவை. என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் சிவதாஸுக்கு (கிஷோர்) ஆதி என்ற ரவுடியைப் பிடிக்கும் பொறுப்பு தரப்படுகிறது. இந்த நேரத்தில் ஊரில் வசிக்கும் அம்மா இறக்க நேரிட, பாட்டியிடம் வசித்துவந்த மகன் ஹரிதாசை தன்னிடம் அழைத்துக்கொள்கிறார். ஹரிதாஸ் ஆட்டிஸம் என்ற நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறான். சிவதாஸ் மனைவியை இழந்தவர் என்பதால் மகனைத் தனியாக வலர்க்க வேண்டிய பொறுப்பு அவருக்கு. அவனைப் பள்ளியில் சேர்த்தால் கூடவே யாராவது இருந்து அவனுக்கு உதவி செய்தால்தான் சேர்த்துக்கொள்ள முடியும் என்று தலைமை ஆசிரியை கறாராகச் சொல்லிவிடுகிறார். அம்மா இல்லாத பையன் என்பதால் அப்பாவே அவனைப் பார்த்துக்கொள்ள விடுமுறை எடுக்கிறார். ஹரிதாசின் ஆசிரியை அமுதவல்லி (சினேகா) இதுபோன்ற சிறப்புக் கவனம் தேவைப்படும் குழந்தைகளைக் கையாண்ட அனுபவம் உள்ளவர். அவரது உதவி சிவதாஸுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறது. ஆனாலும் மகனைப் படிக்கவைக்கவோ அவன் வேலைகளை அவனையே செய்துகொள்ள வைக்கவோ அவரால் முடியவில்லை. இந்தச் சமயத்தில் நிகழும் ஒரு திருப்பத்தால் தனது மகனின் உள்ளார்ந்த இயல்பு என்ன என்பதைக் கண்டுபிடிக்கிறார். அது ஒரு புதிய திறப்பை அளிக்கிறது. இந்த நேரத்தில் ஆதியால் தனது நண்பன் கடத்தப்பட்டது தெரிந்து சிவதாஸ் மீண்டும் களம் இறங்க வேண்டியிருக்கிறது. மகனைப் பார்த்துக்கொள்வதற்கும் ஆதியை வேட்டையாடுவதற்கும் இடையே அவர் சிக்கிக்கொள்கிறார். இந்தச் சிக்கலின் முடிவு என்ன என்பது மீதிக்கதை. அர்த்தமுள்ள ஒரு கதையை எடுத்துக்கொண்டு அதற்கு ஏற்ற திரைக்கதையை அமைத்திருக்கும் ஜி.என்.ஆர். குமாரவேலனுக்குப் பாராட்டுக்கள். கதையின் ஆதாரமான தன்மையையும் பாத்திரங்களின் இயல்பையும் நுட்பமாகக் காட்சிப்படுத்தும் விதம் அற்புதம். அப்பாவும் மகனும் மழையில் நிற்கும் காட்சி, மகன் குதிரையோடு ஓடும் காட்சி என்று பல காட்சிகள் அழகாக உள்ளன. பையன் மீது பெரும் ஈடுபாடு கொண்ட ஆசிரியையின் மனதுக்குள் நடக்கும் மாற்றங்களும் அதற்கு சிவதாஸ் எதிர்வினை ஆற்றும் விதமும் மிகவும் பக்குவமாகக் கையாளப்பட்டிருக்கின்றன. மென்மையான காட்சிகளை மட்டுமில்லாமல் ரவுடிகளைத் தீர்த்துக் கட்டும் காவல்துறையினரின் அதிரடியான வழிமுறைகளையும் சிறப்பாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் குமாரவேலன். பல படங்களில் வில்லனாக வந்திருக்கும் கிஷோர் இந்தப் படத்தில் மகனுக்காகப் போராடும் தந்தையாகவும் தைரியமான போலீஸ் அதிகாரியாகவும் பிரகாசிக்கிறார். இதுபோன்ற வேடங்களை ஏற்ற அனுபவம் உள்ள சினேகா அமுதவல்லி டீச்சர் பாத்திரத்தில் பளிச்சிடுகிறார். நாசுக்காக காதலைச் சொல்லும் விதம் ரசிக்கவைக்கிற்து. ஆட்டிஸம் பாதித்த சிறுவனாக வரும் பிருத்விராஜ் தாசுக்கு இந்த படம் நல்ல அறிமுகம். மூளை பாதித்த சிறுவனாக வாழ்ந்திருக்கிறார். அவரை அற்புதமாக நடிக்க வைத்திருக்கும் இயக்குநரை அதற்காகவே மீண்டும் ஒரு முறை பாராட்டலாம். படம் அவ்வப்போது தொய்வடையும்போது தூக்கி நிறுத்த வேண்டிய பரோட்டா சூரியின் நகைச்சுவை அந்த அளவுக்கு வலுவாக இல்லை. யூகி சேதுவும், ராஜ் கபூரும் வரும் சில காட்சிகள் படத்திற்கு அர்த்தம் தருகின்றன. ரத்னவேலுவின் ஒளிப்பதிவு படத்தைக் கவிதையாக உணரச் செய்கிறது. விஜய் ஆண்டனியின் பாடல்களை விடவும் பின்னணி இசை நன்றாக உள்ளது. 'அன்னையின் கருவில்' என்ற பாடல் மனதில் நிற்கிறது. வலுவான கதையும் காட்சியமைபுகளும் இருந்தாலும் ஆங்காங்கே ஆவணப்படம் பார்க்கும் உணர்வு ஏற்படுவதைத் தவிர்த்திருக்கலாம். ஆட்டிஸம் பாதித்த சிறுவனைப் பைத்தியம் என்று ஒதுக்கும் சமூகத்தின் பொதுப் போக்கைக் காட்டும் காட்சிகள் தேவைதான். ஆனால் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் அது வருகிறது. இதுபோன்ற சிறுவர்களைப் பார்த்துக்கொள்ள்வதில் உள்ள சிரமங்களைச் சொல்வதற்கும் ஒரே மாதிரியான காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றைத் தவிர்த்திருக்கலாம். இதுபோன்ற சில நெருடல்கள் இருந்தாலும் வலுவான கதை, பொருத்தமான திரைக்கதை, அற்புதமான காட்சிப் படிமங்கள் ஆகியவை கொண்ட அர்த்தமுள்ள திரைப்படங்கள் தமிழில் வருவது அரிது. அத்தகைய அரிய படங்களில் ஒன்று ஹரிதாஸ்.

Tuesday, February 19, 2013

காவிரிப் பிரச்சினை ஜீவ நதியும் ஜீவ மரணப் போராட்டமும்

தென்னகத்தின் மிகப் பழமையான மாநிலங்களும் அண்டைய மாநிலங்களுமான தமிழகத்துக்கும் கர்நாடகத்துக்கும் தீராத பிரச்சினை காவிரி நதிநீர்ப் பங்கீடு. இதில் ஏற்பாடும் சிக்கல்களால் பேச்சுவார்த்தைகள் நடந்துவருகின்றன. வழக்குகள் தொடுக்கப்படுகின்றன. ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. அரசியல் கட்சிகள் காவிரி பற்றி வீர வசனங்கள் பேசி ஆட்சியைக் கைப்பற்றுகின்றன. போராட்டங்கள் நடக்கின்றன. ஆனால் காவிரி பிரச்சினை மட்டும் முடிந்தபாடில்லை. இந்த ஆண்டு கர்நாடகத்திலும் வறட்சி அதிகமாகிவிட்டதாக அம்மாநில அரசு சொல்கிறது. தமிழகத்துக்கு தண்ணீர் விட்டால் கர்நாடகம் வறட்சியில் சிக்கிவிடும் என்கிறார்கள். வழக்கம்போல தேசியக் கட்சிகள் இரண்டு மாநிலங்களிலும் மாறுப்பட்ட நிலைகளை எடுத்துவருகின்றன. அரசியல் பரமபத விளையாட்டில் நிரந்தர இடம் பிடித்திருக்கும் காவிரிப் பிரச்சினை தற்போது ஆவேசமான கட்டத்தை எட்டியுள்ளது. என்னதான் நடக்கிறது காவிரி பிரச்சினையில்? காவிரி நதிநீர்ப் பங்கீட்டின் வரலாறு 90 ஆண்டுகள் பழமையானது. 1924ஆம் ஆண்டு அப்போதைய சென்னை மாகாணத்துக்கும், மைசூர் அரசாங்கத்துக்கும் காவிரி நதி நீர்ப் பங்கீடு சம்பந்தமாக ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. அப்போது குடகு மாவட்டம் சென்னை மாகாணத்துடன் இணைந்திருந்தது. அந்த ஒப்பந்தத்தின்படி, தமிழகத்தில் இருக்கும் 18 ஏக்கர் பாசன நிலமும், கர்நாடகத்தில் 3 ஏக்கர் பாசன நிலமும் காவிரி நீர் பயன்பாட்டில் வந்தன. கர்நாடக அரசு ஆண்டுதோறும் தமிழகத்திற்கு 95 டி.எம்.சி. தண்ணீர் தரவேண்டும் என்று முடிவானது. இந்த ஒப்பந்தம் 1974இல் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் 1972இல் அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி காவிரி ஒப்பந்ததத்தை நீடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் அந்த வழக்க்கைத் தமிழக அரசு தொடர்ந்து நடத்த முடியாத அளவுக்கு அரசியல் நிர்ப்பந்தங்கள் எழுந்தன. அன்று இந்தியப் பிரதமராக இருந்த இந்திரா காந்தி ஊழல் குற்றச்சாட்டுகளை வைத்துக் கருணாநிதியை மிரட்டியதால் தமிழகம் பணிய நேரிட்டது என்று கருணாநிதியை விமர்சிப்பவர்கள் சொல்கிறார்கள். எது எப்படியோ, 50 ஆண்டுகள் கழிந்தவுடன் ஒப்பந்தமும் காலாவதியானது. காவிரியின் உற்பாத்தி ஸ்தானம் கார்நாடகத்தில் இருப்பதால் அதன் நீரைப் பகிர்ந்துகொள்வதற்கான ஒப்பந்தம் காலாவதியானது கர்நாடகத்திற்குச் சாதகமாக அமைந்தது. குறுகிய காலத்தில் கபினி, ஹேமாவதி, ஹேரங்கி ஆகிய மூன்று அணைகளைக் கர்நாடக்க மாநிலம் கட்டியது. அதனால் காவிரி நீர் பழமையான கிருஷ்ணராஜ சாகர் அணைக்குக்கூட வரவில்லை. இதனால் தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என்று கர்நாடகம் காரணம் சொல்லத் துவங்கியது. அன்று ஆரம்பித்த காவிரிப் பிரச்சினை இன்றுவரை தொடர்கிறது. இரு தரப்புப் பேச்சுவார்த்தைகள் உரிய பலனைப் பெற்றுத் தராததால் காவிரி நதிநீர்ப் பங்கீட்டுக்கென நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. பிரச்சினை குறித்த வாதங்களையும் யதார்த்த நிலவரங்களையும் அலசி ஆராய்ந்த மான்றம், தமிழகத்துக்கு ஆண்டுக்கு 205 டி.எம்.சி. நீரைத் திறந்துவிட வேண்டும் என்ன்று தீர்ப்பளித்தது. இதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. ஆனால் இந்தத் தீர்ப்புகளைக் கர்நாடகம் தொடர்ந்து உதாசீனப்படுத்திவருகிறது. உபரியாஅக மழை பெய்யும் ஆண்டுகளைத் தவிர மற்ற எல்லா ஆண்டுகளிலும் பிரச்சினை எழுகிறது. முற்றுகிறது. பேச்சுவார்த்தைகள் பலனின்றி முறிகின்றன. சில ஆண்டுகளாக மழையும் பொய்த்துவருகிறது. இதற்கிடையில் 1974 தொடங்கி இன்றுவரை கர்நாடகம் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பாசன நிலங்களை அதிகரித்துவருகிறது. 3 லட்சம் ஏக்கர் பாசன நிலத்திலிருந்து 18 லட்சம் ஏக்கராகப் பாசன நிலமாக கர்நாடகம் அதிகரித்துள்ளதே பிரச்சினைக்கு முக்கியக் காரணம் என்கிறார்கள் தமிழக டெல்டா விவசாயிகள். சில ஆண்டுகளாகவே டெல்டா பகுதிகளில் மழை சரியாக பொய்வதில்லை. கர்நாடகம் பல அணைகளைக் கட்டி காவிரி நீரை தங்களுக்குள்ளேயே முடக்கிவிடுவதால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வருவதில்லை. இந்த ஆண்டு பிரச்சினை இன்னும் மோசமாகியது. கர்நாடகத்திலேயே வறட்சி நிலவுவதால் கொஞ்சம்கூட தண்ணீர் விட முடியாது என்று கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் அடம் பிடித்தார். அதையடுத்து தமிழக முதல்வர் ஜெயலலிதா நடுவர் மன்றத்தையும், உச்ச நீதிமன்றத்தையும் அணுகினார். தமிழக டெல்டா விவசாயிகளுக்குத் தேவைப்படும் நீர் அளவைப் பற்றி ஆய்வு செய்வதற்காக மத்திய நிபுணர் குழுவை நடுவர் மன்றம் நியமித்தது. அந்தக் குழு பிப்ரவரி 5ஆம் தேதி தமிழக பாசன நிலங்களில் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் கர்நாடகம் தமிழகத்துக்கு 2.44 டி.எம்.சி தண்ணீரை பிப்ரவரி 20ஆம் தேதிக்குள் திறந்து விட வேண்டும் என்று நடுவர் மன்றம் தீர்ப்பளித்தது. அதற்கு முன்பு அதே அளவுள்ள நீரை மேட்டூர் அணையிலிருந்து தமிழக அரசு திறந்து விட வேண்டும் என்றும் உத்தரவில் கூறப்பட்டது. இந்த உத்தரவு ஒருதலைப்பட்சமானது என்று தமிழக விவசாயிகள் கருதுகிறார்கள். காவிரி டெல்டா பகுதியில் மொத்தம் 9 லட்சம் ஏக்கர் நிலங்களில் பயிரிடப்பட்டுள்ளதாகவும் அதில் சரியான நீர் வளம் இல்லாமல் ஏற்கனவே 3 லட்சம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களில் பயிர்கள் கருகிவிட்டதாகவும் அவர்கள் தெரிவிக்கிறார்கள். தற்போது 6 ஏக்கர் நிலத்தில் நீர் வேண்டிப் பயிர்கள் காத்திருக்கும் நிலையில் தற்போது உடனடியாக அறுவடை செய்யப்படவிருக்கும் 3.25 லட்சம் ஏக்கரை மட்டுமே மத்திய குழுவினர் கணக்கில் எடுத்துக்கொண்டுள்ளார்கள். மேலும் பல லட்சம் ஏக்கர் பயிர்களை மத்திய குழு ஒரே நாளில் கணக்கெடுப்பது சாத்தியமானதா என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. ஆனால் இந்தக் குறைந்த அளவைக்கூடக் கர்நாடகம் தர மறுப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தமிழகத்தில் நடந்துவரும் சட்டமன்றக் கூட்டத் தொடரில் காவிரி டெல்டா விவசாயிகளின் நிலைமை குறித்து விவாதிக்கப்பட்டது. பயிர் விளைச்சலின்றி பாதிக்கப்பட்டுள்ள டெல்டா விவசாயிகளுக்குக் குறைந்தது 25,000 ரூபாயாவது நிவாரணம் வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதையடுத்து மாநில நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான குழுவினர் டெல்டா பகுதியில் மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் செய்து சமர்ப்பிக்கும் ஆய்வறிக்கையின் அடிப்படையில் நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்று ஜெயலலிதா பிப்ரவரி 3ஆம் தேதி அறிவித்தார். அடுத்த மூன்று நாட்கள் மாநிலக் குழுவினர் ஆய்வு செய்து ஆய்வறிக்கை சமர்ப்பித்தனர். அதன் அடிப்படையில் பிப்ரவரி 7ஆம் தேதி சட்டமன்றத்தில் ஜெயலலிதா நிவாரண உதவிகளை அறிவித்தார். டெல்டா பகுதியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் முன்னுரிமை அளிப்பது, போதிய பயிர் காப்பீடு அளிப்பது, 50 சதவீதத்துக்கு மேல் மகசூல் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 15,000 ரூபாய் நிவாரணம் வழங்குவது ஆகியவை அந்த அறிவிப்புகளில் குறிப்பிடத்தக்கவை. தமிழக அரசின் அறிவிப்புக்கு ஆதரவும், எதிர்ப்பும் சம அளவில் கிளம்பியுள்ளன. இந்த அறிவிப்பு ஏமாற்றம் அளிப்பதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறினார். இந்த அறிவிப்பு போதுமானதல்ல என்றும் இது வெறும் கண்துடைப்பே என்றும் அவர் குறை கூறினார். குறைவாக மகசூல் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கதி என்னவென்று அவர் கேள்வி எழுப்பினார். பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட தலைவர்களும் இந்த அறிவிப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்கள். மேலும் விவசாயத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் அளிக்கப்படாததும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இந்தச் சூழ்நிலையில் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதை அடுத்து கர்நாடக அரசும் நடுவர் மன்றத் தீர்ப்பை அமல்படுத்தியது. தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் கர்நாடக விவசாயிகள் அதிருப்தியடைந்தார்கள். ‘‘நடுவர் மன்றத் தீர்ப்பை அமல்படுத்தாவிட்டால் சட்டச் சிக்கல் ஏற்படும் என்ற காரணத்துக்காகவே தண்ணீர் திறந்து விடப்பட்டது. கர்நாடகத்தின் உரிமையை நிலைநாட்டப் பதவியைத் துறக்கவும் தயார்’’ என்று அம்மாநில சட்டமன்றத்தில் ஜெகதீஷ் ஷெட்டர் அறிவித்தார். அங்கு ஏற்பட்ட பதற்றத்தால் நடுவர் மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து 12ஆம் தேதியன்று மறு ஆய்வு மனுவை கர்நாடக அரசு தாக்கல் செய்தது. தமிழகத்திற்குத் தேவையான நீர் மேட்டூர் அணையிலேயே இருப்பதாகவும், தண்ணீர் திறந்து விட்டால் கர்நாடக விவசாயிகளுக்குப் பாதிப்பு ஏற்படும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. கர்நாடகத்தின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாகத் தமிழக அரசு 13ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடுத்துள்ளது. இந்தச் சட்டப் போரால் காவிரி பிரச்சினை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகத் தெரிகிறது. தற்போதைய சூழலில் இரண்டு மாநிலங்களிலும் சரியான மழையின்றி வறட்சி நிலவுகிறது. இந்த நிலையில் பேச்சுவார்த்தைகளும் சட்ட நடவடிக்கைகளும் மட்டும் தீர்வாக அமையாது என்றும் சிலர் கருதுகிறார்கள். “தலைக்காவிரியில் இருந்து காவிரி நதி பாய்கிறது. அது இரண்டாகப் பிரிந்து தமிழகத்துக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைக்கும் செல்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் பாயும் நதி வீணாகக் கடலில் கலக்கிறது. அந்த நீரை நேத்னாவதி அணையில் சேமித்து வைப்பதன் மூலம் கிடைக்கும் 400 டி.எம்.சி. தண்ணீரை இரண்டு மாநிலங்களும் சரிபாதியாகப் பங்கிட்டுக் கொள்ள முடியும். இப்போது தமிழகத்தின் தேவை 192 டி.எம்.சி. மட்டுமே என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இதை நாங்கள் மாற்று ஏற்பாடாக முன்வைக்கிறோம்” என்கிறார் பாரதிய கிசான் (விவசாயிகள்) சங்கத்தின் மாநில துணைத் தலைவரும், வழக்கறிஞருமான அய்யாக்கண்ணு. கங்கையும் காவிரியும் இணையும் வகையில் தேசிய நதிநீர் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்தினால் கடலில் கலக்கும் 30,000 டி.எம்.சி. தண்ணீர் மிச்சமாகும். இந்தியாவின் தென்மூலையில் தமிழகம் இருப்பதால் அதில் சிறிய அளவு நீராவது கிடைத்தால் தமிழகம் வளமான பூமியாகும் என்று அவர் நம்புகிறார். மழையின் பங்கு கணிசமாக குறைந்துவரும் இந்த சமயத்தில் மாற்று வழியையும் யோசிக்க வேண்டியுள்ளது என்று பலர் கருதுகிறார்க்கள். பல ஆண்டுகளாக நீடித்துவரும் காவிரிப் பிரச்சினை இரண்டு மாநிலங்களிலும் வலுவான அரசியல் ஆயுதமாகியுள்ளது. கர்நாடகத்தை ஆளும் தேசியக் கட்சிகள் தமிழகத்தின் ஆட்சியைப் பிடிக்கும் சூழல் இல்லை என்பதால் இரட்டை வேடம் போடுவதாக விவசாயிகள் நினைக்கிறார்கள். அதை முற்றாகத் தவிர்த்து இதை ஒரு வாழ்வாதாரப் பிரச்சினையாகப் பார்த்தால் மட்டுமே பிரச்சினை தீரும்.

ஹெலிகாப்டர் பேர ஊழல் காங்கிரஸின் அச்சை முறிக்குமா இந்த மயிலிறகு?

துரித கதியில் ஒரு பின்னோட்டம்: 1987ஆம் ஆண்டு. அன்றைய காங்கிரஸ் அரசை ஆண்டுகொண்டிருந்த ராஜிவ் காந்தி மீது எதிர்க்கட்சிகள் ஃபோபர்ஸ் ஊழலைச் சுமத்தின. இந்திய ராணுவத்திற்கு ஃபோபர்ஸ் போர் விமானம் வாங்கியதில் இத்தாலி நாட்டைச் சேர்ந்த குவாத்ரோட்சி சம்மந்தப்பட்டிருப்பதாக புகார் எழுந்தது. அப்போதுதான் ராஜிவ் காந்தியின் அரசில் இருந்தும், கட்சியில் இருந்தும் வெளியேறிய வி.பி.சிங் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டார். ஃபோபர்ஸ் ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்து எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்தார். 1989இல் நடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது. அதற்குப் பிறகு மூன்று முறை காங்கிரஸ் பிரதமர்கள் ஆட்சியைப் பிடித்தாலும் கடந்த 25 ஆண்டுகளில் பெரும்பான்மை என்பது கைக்குச் சிக்காத புகையாக மறிவிட்டது. உண்மையில் தற்போது இருக்கும் கூட்டணி ஆட்சி முறைக்கு விதை போட்டதே அந்த தேர்தல்தான் என்றும் சொல்லலாம். சரியாக இருபத்தாறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் ஊழல் சரித்திரம் மீண்டும் இத்தாலி நாட்டுடன் இணைந்திருக்கிறது. நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்கள் அனைத்திலும் ஊழல் செய்த அரசியல் கட்சி என்ற எதிர்க்கட்சிகளின் கிண்டலை காங்கிரஸ் சந்தித்தாலும் கட்சியின் செல்வாக்கு இன்னும் முழுமையாகக் குறைந்துவிடவில்லை. ஆனால் இத்தாலியுடன் அதன் ஊழல் கறைகள் சம்மந்தப்படும் போதெல்லாம் இந்திய மக்கள் காங்கிரசை சந்தேக கண்ணோடுப் பார்ப்பதைத் தவிர்க்க முடியவில்லை. சமீப காலமாக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள், நிர்வாக சீர்குலைவுகள் ஆகியவற்றால் பழுதுப்பட்டிருக்கும் காங்கிரசின் பெயர், கடந்த வாரம் வெளியான ஹெலிகாப்டர் ஊழல் காரணமாக அதல பாதாளத்துக்குச் செல்லும் என்ற யூகம் கிளம்பியிருக்கிறது. 2010ஆம் ஆண்டு இந்திய ராணுவத்திற்கு ‘ஏ டபள்யூ 101’ என்னும் 12 போர் ஹெலிகாப்டர்கள் வாங்கப்பட்டன. இதற்காக ரூ.3600 கோடி செலவிடப்பட்டது. அதற்காக சிலருக்கு பேரத்தின் அடிப்படையில் ரூ.362 கோடி கமிஷனாக தரப்பட்டுள்ளது. இத்தாலி நாட்டின் அரசு பங்கு வகிக்கும் ‘ஃபின்மெக்கானிக்கா’ என்ற நிறுவனத்தின் துணை நிறுவனமான ‘அகஸ்தா வெஸ்ட்லாண்ட்’ என்ற ஹெலிகாப்டர் நிறுவனம் இந்த ஆர்டரைப் பெற்று ஹெலிகாப்டர்களை தயாரித்துக் கொடுத்துள்ளது. வணிக பேரங்களில் லஞ்சம் தருவது என்பது இன்றைய உலகத்தில் தவிர்க்க முடியாதது என்றாலும் இந்திய நாட்டு சட்டத்தின்படி இது குற்றம் என்பதால் இந்த தகவலை வெளியிடுவதாக இத்தாலி நாட்டுப் பிரதமர் அறிவித்தார். முன்னூறு கோடியெல்லாம் ஒரு ஊழலா என்று கேட்கும் அளவு இந்தியப் பொது வாழ்க்கை ‘முன்னேறி’விட்டது. சில ஆண்டுகளாகப் பல லட்சம் கோடிகளில் நடைபெறும் இமாலய ஊழல் குற்றச்சாட்டுகள் வந்துகொண்டிருப்பதால் சில கோடி ரூபாய்களில் நடக்கும் ஊழல்களைக் கண்டு அதிர்ச்சி அடையாமல் இருக்க இந்திய மக்கள் பழகியிருக்கிறார்கள். ஆனாலும் ‘பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ் சால மிகுத்துப் பெயின்’ (அளவுக்கு அதிகமாக ஏற்றப்பட்டால் மயிலிறகும் வண்டியின் அச்சை முறிக்கும்) என்று வள்ளுவர் சொல்வதுபோல இந்தச் சிறிய ஊழலும் காங்கிரஸுக்குப் பெரும் தலைவலியாக அமையலாம். முதலாவதாக, ஹெலிகாப்டர் வாங்கியது ராணுவ விஷயத்திற்காக என்பதால் நாட்டின் பாதுகாப்பு சம்மந்தமாகவும் கேள்வி எழுந்துள்ளது. இந்த ஊழலை ஃபோபர்ஸ் ஊழலோடு எதிர்க்கட்சிகள் ஒப்பிடுகின்றன. காங்கிரஸ் இந்த ஒப்பீட்டை மறுக்கிறது. இந்த முறைகேட்டில் காங்கிரஸ் ஆட்சி, முந்தைய பா.ஜ.க. ஆட்சி இரண்டுமே சம்மந்தப்பட்டிருப்பதாகவும், இது குறித்து விரிவான விசாரணை நடந்த பிறகுதான் சொல்ல முடியும் என்று மத்திய அமைச்சர்கள் மணீஷ் திவாரி, அந்தோணி ஆகியோர் கூறுகிறார்கள். தற்போதைய சூழல் காங்கிரசுக்குப் போதாத காலமாக இருக்கிறது. பா.ஜ.க.வைச் சேர்ந்த நரேந்திர மோடி மூன்றாவது முறையாக வெற்றிபெற்று குஜராத்தின் முதல்வராக அமர்ந்துள்ளார். வளர்ச்சி அரசியலும், இந்துத்துவ அடையாளமும் பரவலான மக்கள் ஆதரவும் அவரை அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த எட்டு ஆண்டுகளாக நீடித்துவரும் காங்கிரஸ் ஆட்சி சிறுபான்மையினருக்கான பாதுகாப்பை உறுதி செய்துள்ளது. சிறுபான்மையினத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு நல உதவிகளையும், ஊக்கத் தொகையையும் வழங்கி வருகிறது. மேலும் சிறுபான்மையினத்தவருக்குத் தனி இட ஒதுக்கீடும் தர முயற்சித்துவருகிறது. இதனால் காங்கிரஸ் அரசை சிறுபான்மையினருக்கு ஆதரவானது என்று பா.ஜ.க. குற்றம்சாட்டினாலும் அதைக் காங்கிரஸ் கண்டுகொள்ளவில்லை. ஆனால் தற்போது மோடியின் வெற்றி மத்திய அரசை கவலை அடையச் செய்வதால் காங்கிரஸின் செயல்திட்டங்கள் மாறுவதாகத் தோன்றுகிறது. பா.ஜ.க.வைப் பொறுத்தவரை பயங்கரவாதத்தைக் கடுமையான அணுகுமுறையின் துணையோடு ஒடுக்குவதை கொள்கை ரீதியாகவே ஆதரிக்கிறது. ஆனால் காங்கிரஸ் கட்சி பயங்கரவாத நடவடிக்கைகளை அணுகும் முறை வித்தியாசமானது. பயங்கரவாதத்தை வேறறுப்போம் என்று அவர்களும் சொன்னாலும் பா.ஜ.க. அளவுக்கு அந்த விஷயத்தில் தீவிரப் போக்கு உள்ள கட்சியாக காங்கிரஸ் பார்க்கப்படவில்லை. ஆனால் சமீப காலத்தில் கசாப், அப்சல் குரு ஆகியோர் தூக்கிலிடப்பட்டதும் தூக்கிலிடப்பட்ட விதமும் பா.ஜ.க.வின் செயல்திட்டத்தை கையில் எடுப்பதற்கு காங்கிரஸ் திட்டமிடுகிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அதிலும், ஒரு முக்கிய வித்தியாசத்தை கவனிக்க வேண்டும். கசாப் தூக்கிலிடப்பட்டப் போது மரண தண்டனைக்கு எதிராக பொதுவான குரல் மட்டுமே எழுந்தது. அவரது குற்றத்தின் தன்மை பற்றி யாருமே கேள்வி எழுப்பவில்லை. ஆனால் அப்சல் குருவின் தூக்கில் அவரது குற்றம் பற்றியும் கேள்வி எழுகிறது. அவனைத் தூக்கில் போட்டதால் காஷ்மீரில் பதற்றம் ஏற்பட்டது. பல ஆண்டுகளாக மரண தண்டனையை நிறைவேற்றாமல் தேர்தல் நெருங்கும்போது தண்டனையை அமல்படுத்துவது இந்துத்துவ வாக்குகளைக் கவரும் முயற்சியே என்று பல ஊடகங்கள் விமர்சிக்கின்றன. ஆனால் காங்கிரசின் இந்த திட்டம் வெற்றிபெறாது என்கிறார் சென்னையைச் சேர்ந்த இந்து முன்னணி பிரமுகர்களில் ஒருவரான சரவணன். “மோடியின் வெற்றிக்கு இந்துத்துவப் பின்னணி மட்டுமே காரணம் அல்ல. அவர் வளர்ச்சியின் மீது கவனம் செலுத்துகிறார். ஆனால் அடித்தட்டு மக்களை பாதிக்கும் விலைவாசி உயர்விலும், நிர்வாக குளறுபடிகளிலும் கவனம் செலுத்தாமல் இதுபோன்ற திட்டங்களை தீட்டுவது நகைப்புக்குரியது. சிறுபான்மையினருக்கான அதிக சலுகைகள், அதை முன்னிட்டு இந்துக்களின் இட ஒதுக்கீட்டைக் குறைப்பது போன்ற செயல்களால் காங்கிரஸ் கட்சி இந்துக்களுக்கு எதிரான கட்சி என்று சாதாரண மக்களுக்கும் தெரிந்துள்ளது” என்று கருதுகிறார் சரவணன். இந்த தூக்கு தண்டனைகளால் காங்கிரசுக்கு வழக்கமாகக் கிடைத்துவரும் இடதுசாரி சிந்தனையுள்ளவர்களின் வாக்கு வங்கியும் பிளவுபடும் என்கிறார் இவர். 1980களில் ராமர் கோயில் பிரச்சினை தொடங்கியபோது அதை சாதகமாக்கிக்கொள்ள திட்டமிட்ட ராஜிவ் காந்தி, ராமர் பிறந்த இடம் என்று சொல்லப்படும் இடத்தைத் திறக்க உத்தரவிட்டார். ஆனால் அது காங்கிரசுக்கு சாதகமாக அமையவில்லை. இந்த விவகாரம் பா.ஜ.க.வின் செல்வாக்கை வளர்க்க உதவியது என்பது இங்கே குறிப்பிட வேண்டிய விஷயம். டெல்லியில் நடந்த பாலியல் வன்முறை சம்மந்தமாக நீதிபதி வர்மா கமிஷனை மத்திய அரசு நியமித்தது. அந்த கமிஷன் பலாத்காரத்தைத் தடுக்க சில பரிந்துரைகளை செய்தது. ஆனால் அதில் சிலவற்றை மட்டும் ஏற்றுக்கொண்டு மத்திய அரசு அவசர சட்டமொன்றைப் பிறப்பித்தது. மற்ற கட்சிகளையும், நிறுவனங்களையும் கலந்தாலோசிக்காமல் அவசரமாக நிறைவேற்றப்பட்ட இந்த சட்டத்தால் அரசின் மீது அதிருப்தி கிளம்பியுள்ளது. இந்த பிரச்சினை, காங்கிரஸ் அரசின் போதாத காலத்தைக் குறிக்கிறது என்று மூத்த அரசியல் விமர்சரான சோ தனது துக்ளக் பத்திரிகையில் வர்ணிக்கிறார். இந்த இக்கட்டான நேரத்தில் ஹெலிகாப்டர் ஊழல் வெடித்துள்ளது காங்கிரசை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இந்த விஷயத்தில் எதிர்க்கட்சிகள் பெரும் ரகளையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஊழல் தொடர்பாக எந்தத் தகவலையும் வெளியிடத் தயார் என்று இத்தாலி அரசு அறிவித்துள்ளது. இதனால் இத்தாலி தலைநகரமான ரோம் நகரத்தை நோக்கி சி.பி.ஐ. விரைந்துள்ளது. இந்த விஷயத்தை அரசியலாக்க வேண்டாம் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால் எதிர்க்கட்சிகள் அதை ஏற்க வாய்ப்பில்லை. இந்த விவகாரம் மிக முக்கியமானது என்பதால் உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று பா.ஜ.க. கோருகிறது. இந்த ஊழலில் பா.ஜ.க.வுக்குத் தொடர்பிருப்பதாகக் கூறுவதை அந்த கட்சி மறுத்துள்ளது. ஏன் விதிமுறையை மாற்றாமல் ஹெலிகாப்டர்கள் ஏலம் விடப்பட்டன என்று அது கேட்கிறது. இந்த ஊழலில் முன்னாள் விமானப்படைத் தளபதி தியாகியின் குடும்பத்தினர் பெயர் அடிப்படுகிறது. ஆனால் இவர்களுக்குப் பின்னணியில் பெரும்தலைகள் இருக்கின்றன என்று எதிர்க்கட்சிகள் நம்புகின்றன. தற்போது ஃபோபர்ஸ் வழக்கு நீர்த்துப்போய்விட்டாலும் அதன் காரணமாக காங்கிரஸ் பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்டதை மறுக்க முடியாது. பெரும்பான்மை பலம் வாய்ந்த காங்கிரஸ் கட்சி, ஃபோபர்ஸ் புகார் காரணமாக பல ஆண்டுகள் சிறுபான்மை ஸ்தானத்துக்குச் சென்றுவிட்டது. இந்த ஹெலிகாப்டர் ஊழலும் அதேபோன்ற விளைவை ஏற்படுத்தினால் மீண்டு வருவதற்கு காங்கிரசுக்கு மேலும் கூடுதலான காலம் தேவைப்படலாம். தற்போதைய சூழலில் காங்கிரசின் எதிர்காலம் இந்த ஊழல் புகாரில் அடங்கியுள்ளது என்றும் சொல்லலாம். சிறிய அளவிலான ஊழல் என்றாலும் ராணுவம் சம்மந்தப்பட்டது என்பதால் இது சீக்கிரமாக அடங்கிவிடாது. தவிர, தொடர் பிரச்சினைகளின் சுமையால் அழுத்தப்பட்டுள்ள காங்கிரஸுக்கு இந்தச் சிறிய சுமையும் முதுகை ஒடிக்கப் போதுமானதாக இருக்கலாம். கழுதையின் முதுகை ஒடித்த ஒற்றை வைக்கோல் (A straw that broke camel's back) என்ற ஆங்கிலப் பழமொழியும் வள்ளுவர் கூறும் மயிலிறகும் இப்போது காங்கிரஸுக்குக் கச்சிதமாகப் பொருந்துகிறது.