Friday, August 24, 2012

வதந்தியால் நிரம்பிய ரயில்கள்

சென்ற மாதம் நாடு முழுவதும் பரபரப்பு தெரிந்தது. வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் கும்பல் கும்பலாக ரயில் நிலையங்களை நோக்கிப் படையெடுத்தார்கள். காரணம் வட கிழக்கைச் சேர்ந்த மக்கள் மீது தாக்குதல் நடக்கவிருக்கிறது என்ற வதந்தி பரவியதே இதற்குக் காரணம். மத்திய உள்துறையும், பல மாநில அரசுகளும் மற்ற பிரச்சினைகளை ஒதுக்கி வைத்துவிட்டு வதந்தியால் பீதியடைந்த மக்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கின. ஏன் இந்த வதந்தி கிளம்பியது? திடீரென்று பெரும் திரளாக மக்கள் ஏன் தங்கள் வாழ்வாதாரங்களை விட்டுவிட்டுச் சொந்த ஊர்களுக்குச் செல்ல வேண்டும்? அஸ்ஸாம் மாநிலத்தில் கடந்த ஜூலை மாதம் கலவரம் வெடித்தது. உள்ளூர் போடோ மக்களுக்கும், வெளியிலிருந்து அங்கு குடியேறிய முஸ்லிம்களுக்கும் இடையே ஏற்பட்ட இந்தக் கலவரத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டார்கள். வங்காள தேசத்தைச் சேர்ந்த 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் அஸ்ஸாமில் ஊடுருவியதால்தான் இந்தக் கலவரம் நடைபெற்றதாக பா.ஜ.க. குற்றம்சாட்டியது. கலவரத்தின் எதிரொலியாக மும்பையில் நடந்த கண்டனப் பேரணியில் கலவரம் வெடித்தது. அதில் மும்பை போலீஸாருக்கும் அந்தப் பேரணியில் பங்கேற்ற முஸ்லிம்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இந்தக் கலவரத்திலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. இந்நிலையில் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் வடகிழக்குப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மீது திட்டமிட்ட தாக்குதல் நடக்க இருப்பதாக வதந்தி பரவியது. நாட்டில் பல்வேறு மாநிலங்களில் வாழும் வடகிழக்கு மக்களைப் பழிவாங்க முஸ்லிம்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் ரம்ஜானுக்குப் பிறகு எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடக்கலாம் என்றும் குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டதாக ஊடகங்கள் பதிவு செய்திருக்கின்றன. இந்தக் குறுஞ்செய்தி எத்தனை பேருக்குப் போய் சேர்ந்தது என்பதெல்லாம் தெரியாது. ஆனால் இது குறித்த பேச்சு காட்டுத் தீயாகப் பரவிப் பீதியைக் கிளப்பியது. வடகிழக்குப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு இந்தத் தகவல் கிடைத்ததும் அவர்கள் வெளி மாநிலங்களில் இருக்கும் தங்கள் உறவினர்களைத் தொடர்புகொண்டு வீடு திரும்பும்படி வற்புறுத்தினார்கள் என்றும் செய்திகள் வந்தன. முதலில் கர்நாடக மாநிலத்தில் இந்த வதந்தி கிளம்பியது. ஏராளமான வடகிழக்கு மக்கள் பெங்களூரு ரயில் நிலையத்திலிருந்து வடகிழக்கு மாநிலங்களை நோக்கி விரைந்தார்கள். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே, கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் ஆகியோர் 'இந்த வதந்திகளை நம்ப வேண்டாம்' என்றுக் கூறி வடகிழக்கு மக்களைச் சமாதானப்படுத்த முயன்றார்கள். அதற்குள் இந்த வதந்தி நாடு முழுவதும் பரவியது. சென்னை உட்பட நாட்டின் முக்கிய நகரங்களில் வசிக்கும் வடகிழக்குப் பகுதி மக்கள் தங்கள் சொந்த மண்ணை நோக்கி ரயிலேறினார்கள். சென்னையில் இருக்கும் வடகிழக்கு மக்களின் பாதுகாப்புக்குத் தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவாதம் கூறினார். ஆனாலும் ரயில்களில் ஏறும் மக்களின் பீதி குறையவில்லை. கடந்த மே மாதம் முதல் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சமூக வலைதளங்கள் மூலம் திட்டமிட்ட ரீதியில் இந்த வதந்தியைப் பரப்பிவருவதாக மத்திய அரசு கூறியது. சில மாதங்களாகவே இந்த வதந்தி பரவுகிறது என்றால் மத்திய உளவுத்துறை அதைத் தடுக்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது புரியாத புதிராக உள்ளது. சமூக வலைதளங்களின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் சட்டம் எதிர்க்கப்பட்டதே காரணம் என்கிறது மத்திய அரசு. அந்த வாதத்தை ஏற்றுக்கொண்டாலும்கூட மத்திய அரசால் ஃபேஸ்புக்கிலோ, டுவிட்டரிலோ ஒரு முகவரியை ஏற்படுத்தி இந்தப் பிரச்சாரத்தின் முனையை முறித்திருக்க முடியாதா? அரசின் அதிகாரபூர்வமான முகவரி என்றால் ஏராளமானவர்கள் அதில் சேர்ந்திருப்பார்களே? அப்துல் கலாம், அமிதாப் பச்சன், அமீர் கான், டெண்டுல்கர் போன்ற பிரபலங்கள் மூலமாக கமெண்ட்டுகள் தரவும் ஏற்பாடு செய்திருக்கலாமே? செல்போன் மூலம் தினந்தோறும் ஏராளமான தகவல்கள் பறிமாறப்படுகின்றன. அந்த வசதிகளை மத்திய அரசின் துறைகளும் பயன்படுத்துகின்றன. அந்த வசதியை இப்போது ஏன் அரசு பயன்படுத்தவில்லை? வடகிழக்கு மாநில அலைபேசி எண்களை குறிவைத்தே இந்தக் குறுஞ்செய்திகள் வந்திருப்பதாகத் தெரிகிறது. இதன் பின்னணியில் பாகிஸ்தான் அரசு இருப்பதாக மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே. சிங் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் பாகிஸ்தான் அரசு வழக்கம் போல அதை மறுத்தது. ஆதாரங்களை இந்தியா கொடுத்தால் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியது. உடனே உள்துறை அமைச்சகம் அதற்கான ஆதாரங்களை வெளியிட்டது. பாகிஸ்தான் மௌனம் சாதிக்கிறது. இந்த வதந்தியைப் பரப்பியது பாகிஸ்தான்தான் என்று சொல்வதன் மூலம் மத்திய அரசு தப்பித்துக்கொள்ள முடியாது. ஒரு நாட்டின் மீது பகைமை உணர்வு கொண்ட அண்டை நாடுகள் பிரச்சினைகளை உருவாக்க எப்போதுமே தயாராக இருக்கும் என்பது சின்னப் பிள்ளைகளுக்குக்கூடத் தெரியும். அஸ்ஸாமில் கலவரம் நடந்த பிறகாவது மத்திய அரசு பாகிஸ்தானின் சதி குறித்து கவனம் செலுத்தியிருக்க வேண்டும். நம் நாட்டைப் பொறுத்தவரை, ஒரு மாநிலத்து மக்கள் பிழைப்புக்காக வேறு மாநிலங்களை நோக்கிப் படையெடுப்பது எப்போதுமே நடக்கக்கூடியதுதான். உதாரணமாக, சென்னையில் ஏராளமான வட இந்தியர்களைப் பார்க்க முடியும். அவர்களில் சிலர் பரம்பரை பரம்பரையாக இங்கே வசித்துவருகிறார்கள். அவர்களுக்குத் தங்கள் தாய்மொழியில் பேச மட்டுமே தெரியும். மற்ற தொடர்புகள் எல்லாம் தமிழில்தான். இப்போதும் சென்னை, திருப்பூர் உள்ளிட்ட தமிழக நகரங்களில் வட இந்தியர்கள் அதிகமாக இருக்கிறார்கள். இவர்கள் யாருடைய வருமானத்தையும் பிடுங்கி வாழ்வதில்லை. மாறாக இவர்கள் இல்லாவிட்டால் பல்வேறு சாதாரண வேலைகள் இங்கு நடைபெறாது என்பதுதான் யதார்த்தம். இதுபோன்றே ஏராளமான தமிழர்கள் டில்லி, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் இருக்கிறார்கள். இதுபோன்ற வதந்திகள் இத்தகைய சுமுகமான இடப் பெயர்வுகளையும் அவர்களுடைய அமைதியான வாழ்வையும் குலைக்கின்றன. சில சமயங்களில் வெளிமாநிலத்தவர்களின் குடியேற்றங்கள் குறித்து உள்ளூர் மக்களிடையே சர்ச்சைகளை ஏற்படுத்தினாலும் இதுவரை பெரியளவில் குழப்பம் எதுவும் ஏற்பட்டதில்லை. சமீபத்தில் சென்னையில் வங்கி கொள்ளையர்கள் என்ற சந்தேகத்தில் சில பீகார் இளைஞர்கள் என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்டார்கள். அதைத் தொடர்ந்து வட மாநிலத்தவர் மீது சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால் அப்போது எந்த வட மாநிலத்தவரும் சென்னையை விட்டு ஓடிவிடவில்லை. ஆனால் இந்த வதந்தி பலரைத் தங்களது ஊர்களை நோக்கி ஓட வைத்திருக்கிறது. வதந்தியின் வலிமை எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை இதன் மூலம் புரிந்துகொள்ளலாம். எனவே வதந்திகளை மிக முக்கியமான அபாயமாகக் கருதி அவற்றைத் திறம்பட எதிர்கொள்ள வேண்டும் என்பதே சராசரி குடிமகனின் எதிர்பார்ப்பு.

Monday, August 13, 2012

கியூரியாசிடி தந்த நம்பிக்கை

கடந்த ஆகஸ்டு 5ம் தேதி உலகத்தில் உள்ள கோடிக்கணக்கான கண்கள் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு முன் தவம் இருந்தன. அந்த கண்கள் ஒலிம்பிக் போட்டிகளையோ, உலக பொருளாதார வீழ்ச்சி பற்றிய செய்திகளையோ, ஏதேனும் அரசியல் சம்மந்தமான பரபரப்புகளையோ எதிர்பார்த்து உட்கார்ந்திருக்கவில்லை. செவ்வாய் கிரகத்தில் அமெரிக்காவின் நாஸா விஞ்ஞானிகள் அனுப்பிய ‘கியூரியாசிடி’ விண்கலம் பத்திரமாகத் தரையிறங்குமா என்ற பதைபதைப்புடன் டி.வி.களுக்கு முன் அமர்ந்திருந்தன அந்த கண்கள். இந்திய நேரப்படி மதியம் சரியாக 12.10 மணிக்கு அந்த விண்கலம் தரையிறங்கிய செய்தியைக் கேட்டப்பிறகே அன்றைய மதிய சாப்பாடு பலருடைய வயிற்றில் நுழைந்தது. இதற்கு முன் நாஸா செவ்வாய் கிரகத்துக்கு பலமுறை வெற்றிகரமாக விண்கலங்களை அனுப்பியிருந்தது. ஆனால் அவை எவற்றிலும் இல்லாத சிறப்பு இந்த விண்கலத்தில் உண்டு. இதுவரையில் இல்லாத முறையில் இந்த விண்கலம் தரையிறங்குவதற்கு இதுவரை இல்லாத புதுமுறை செயல்படுத்தப்பட்டது. 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த விண்கலம் பல வருட ஆராய்ச்சிக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆறு சக்கர வண்டி தரையிறங்க மொத்தாம் ஏழு நிமிடம் ஆகும். அந்த ஏழு நிமிடங்களில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் பரபரப்புமிக்க அந்த ஏழு நிமிடங்களை ‘ஏழு நிமிட பயங்கரம்’ என்று அழைத்தார்கள். மேலும் இந்த விண்கலத்தில் கடைசி நேரத்தில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அமெரிக்காவில் இருக்கும் நாஸாவின் தரைக் கட்டுப்பாட்டு கேந்திரத்திலிருந்து அதை சரி செய்ய முடியாது. காரணம் பூமியிலிருந்து விண்கலத்திற்கும், விண்கலத்திலிருந்து பூமிக்கும் சிக்னல் தர 14 நிமிடங்கள் தேவைப்படும். செவ்வாய் கிரகம் பூமியைப் போலவே 24 மணிநேரம் சுற்றிக்கூடியது. அதில் 12 மணிநேரம் பூமியைப் பார்த்தும், 12 மணிநேரம் மறுபுறத்திலும் இருக்கும். செவ்வாயின் மறுபுறத்தில் அது இருக்கும்போது தரும் சிக்னல் பூமியை வந்தடையாது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியவுடன் செவ்வாய் கிரகத்தில் படமெடுத்து பூமிக்கு அனுப்பி வைத்தது. இதுபோன்று கியூரியாசிடி விண்கலம் மேலும் கீழுமாக செவ்வாய் கிரகத்தில் நடமாடி பல்வேறு ஆராய்ச்சிகளை செய்யும். அந்த ஆராய்ச்சிகள் தரும் முடிவுகளைப் பொருத்து செவ்வாய் கிரகத்திற்கு மனிதனை அனுப்புவதா, இல்லையா என்று அமெரிக்கா முடிவு செய்யும். இந்த ஆராய்ச்சிகளில் இந்தியர்கள் பெருமைப்பட வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. நாஸாவில் இடம்பெற்றுள்ள 30 சதவீத விஞ்ஞானிகள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். இன்று நாஸாவின் பல்வேறு ஆராய்ச்சிகளிலும் அவர்கள் அங்கம் வகித்து வருகிறார்கள் என்பது நமக்கு பெருமை தருவதுதானே.

அத்வானி: வலைப்பூவில் மலரும் நம்பிக்கை?

லால் கிருஷ்ண அத்வானி, 86 வயதிலும் சுறுசுறுப்பாக இயங்கிவரும் முன்னாள் துணை பிரதமர். கடந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வின் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டவர்; வாஜ்பாய் அளவுக்கு இல்லையென்றாலும் சிறந்த பேச்சாளர்; பா.ஜ.க.வின் 60 ஆண்டுகால அரசியல் பயணத்தின் சாட்சியாக இருப்பவர்; பழுத்த அரசியல் அனுபவம் வாய்ந்தவர் என்று பல முகங்கள் அவருக்கு உண்டு. இப்போது இவரிடம் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியோ, பா.ஜ.க.வின் தலைவர் பொறுப்போ இல்லை. மேலும் இவரது ஆதரவாளர்கள் என்று சொல்லப்படுபவர்கள் யாரும் கட்சியில் முக்கிய பதவிகளில் இல்லை. வரும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக இவருக்கு அடுத்தக்கட்டத் தலைவர்களான நரேந்திர மோடி, அருண் ஜெட்லி, சுஷ்மா ஸ்வராஜ் ஆகிய தலைவர்களின் பெயர்கள் அடிபடத் துவங்கியுள்ளன. சமீப காலமாக அத்வானியின் வலைப்பூக்களில் அவர் என்ன எழுதினாலும் கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் பெரும் சர்ச்சைகள் கிளம்புகின்றன. இவை ‘பிரதமர் பதவிக்கான போட்டியில் தனது பெயரையும் சேர்க்க விரும்புகிறாரோ இந்த பிதாமகர்’ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தாமல் இல்லை. தனது வலைப்பூ எழுத்துக்களில் தனக்கென ஒரு பார்வையை முன்வைக்கிறார் அத்வானி. ஆகஸ்டு முதல் வாரத்தில் அவர் எழுதிய கட்டுரையொன்று தேசிய அளவில் புயலை உண்டாக்கியது. ‘2014 தேர்தலில் ஆளும் காங்கிரசுக்கோ, பா.ஜ.க.வுக்கோ பெரும்பான்மை கிடைக்காது. ஆனால் இவர்கள் யாராவது ஒருவரின் ஆதரவுடன் மூன்றாவது அணி ஆட்சியை கைப்பற்றும்’ என்று அவர் சொன்னதாக தேசிய ஊடகங்கள் பரபரப்பை ஏற்படுத்தின. காங்கிரஸ் கட்சி, அவரது கருத்து பா.ஜ.க.வின் நிலவும் குழப்பங்களை கூறுவதாக கேலி செய்தது. அத்வானி சார்ந்திருக்கும் பா.ஜ.க.வோ எதுவும் பேசாமல் மௌனம் சாதித்தது. உண்மையில் அந்த கட்டுரையில், அந்த கருத்தை ஒரு விருந்தில் இரண்டு மத்திய அமைச்சர்கள் தன்னிடம் கூறியதாகவும் தனக்கு அந்த கருத்தில் உடன்பாடு இல்லையென்றும் பா.ஜ.க. தான் அடுத்த ஆட்சியை பிடிக்கும் என்ற தனது நம்பிக்கையையும் அவர் பதிவு செய்திருந்தார். மேலும் காங்கிரசின் நம்பிக்கைக்குரிய கூட்டணிக் கட்சி சி.பி.ஐ. தான் என்றும் அவர் கேலி செய்திருந்தார். இந்த கட்டுரை மட்டுமல்ல. சமீப காலமாக அவர் என்ன எழுதினாலும் சர்ச்சை தான். மக்களவைத் தேர்தலுடன் மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்களும் ஒன்றாக நடைபெற வேண்டும். அப்போது தான் ஐந்தாண்டுகள் மத்தியில் ஆட்சியிலிருக்கும் ஒரு கட்சி தனது செயல்திட்டங்களை சீராக செயல்படுத்த வேண்டும் என்கிறார். பிரணாப் முகர்ஜிக்கும் தனது தனிப்பட்ட கருத்துக்களை கூறுகிறார். இப்படி பல்வேறு பிரச்சினைகளில் தனது கருத்தை வெளியிடுகிறார். இதன்மூலம் என்ன சொல்ல வருகிறார் அத்வானி?. பிரதமர் வேட்பாளருக்கான பட்டியலில் தனது பெயரும் இருக்கிறது என்று காட்டுகிறாரா? இன்றைய சூழ்நிலையில் நரேந்திர மோடியை தே.ஜ. கூட்டணியில் இருக்கும் மற்ற கட்சிகள் ஏற்க தயாராக இல்லை. நிதீஷ் குமாரோ இப்போதே பா.ஜ.க. தனது பிரதமர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்கிறார். தற்போதுள்ள சூழ்நிலையில் அத்வானியை விட கூட்டணியில் பலம் பொருந்திய பா.ஜ.க. தலைவர்கள் இப்போதைக்கு இல்லை என்பது உண்மையே. ஆனால் இதை பா.ஜ.க. எப்படிப் பார்க்கிறது? தேசம் அத்வானியை எப்படி நோக்கும் என்பது இனிவரும் காலங்களில் தெரியவரும்.

டெசோ மாநாடு சாதித்தது என்ன?

பல்வேறு ஆதரவுகளுக்கும், எதிர்ப்புகளுக்கும் இடையே டெசோ மாநாடு கடந்த 12ம் தேதி நடந்து முடிந்தது. ‘இந்த மாநாடு என்ன சாதித்தது?’ என்ற கேள்விக்கு விடைகாணும் முன் இந்த மாநாடு நடப்பதற்கு முன்னால் நடந்த சில பரபரப்புகளை நாடகங்களைப் பார்ப்போம். முதலில் இந்த மாநாட்டை விழுப்புரத்தில் ஆகஸ்டு 5ம் தேதி நடத்த இருப்பதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிவித்திருந்தார். அரசியலில் இழந்த மரியாதையை பெறுவதற்காக தான் கருணாநிதி இந்த மாநாட்டை நடத்துவதாக தமிழகத்தில் இருந்த ஈழ ஆதரவாளர்கள் கருதினார்கள். மத்தியில் ஆளும் கூட்டணியில் தி.மு.க.வும் இருப்பதால் காங்கிரஸ் அரசும் தி.மு.க.வை எச்சரித்தது. மாநாட்டில் தனி ஈழம் பற்றிய கோரிக்கையை எழுப்புவதில்லை, இலங்கையில் உள்ள ஈழத்தமிழர்களின் நவாழ்வை முன்வைப்பதே மாநாட்டின் நோக்கம் என்று அறிவித்தார். மேலும் விழுப்புரத்தில் இருந்து மாநாட்டை சென்னைக்கு மாற்றினார் கருணாநிதி. தேதியையும் ஆகஸ்டு 12ம் தேதிக்கு தள்ளி வைத்தார். சென்னையில் டெசோ மாநாட்டுக்காக ராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தை தேர்வு செய்தார்கள். மேலும் இந்த மாநாடு ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நடத்தப்படுவதால் கட்சித் தலைவர்களின் படங்களையோ, கொடியையோ மாநாட்டில் பயன்படுத்தக் கூடாது என்று கருணாநிதி தி.மு.க. தொண்டர்களுக்கு உத்தரவிட்டார். டெசோ மாநாடு தோல்வியடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் கடைசி கட்ட பரபரப்புக் காட்சிகள் டெசோ மாநாட்டிற்கு வலுசேர்த்தன என்றுதான் சொல்ல வேண்டும். டெசோ மாநாட்டில் பங்கேற்கும் இலங்கைத் தமிழர்களை கண்காணிப்போம் என்று இலங்கை அரசு மிரட்டியதால் டெசோ மாநாட்டை புறக்கணிப்பதாக இலங்கை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அறிவித்தது. தி.மு.க.வின் கூட்டணிக் கட்சியான காங்கிரசும் தனது பங்குக்கு தி.மு.க.வை எச்சரித்தது. மாநாட்டில் ‘ஈழம்’ என்ற வார்த்தை இடம்பெறக்கூடாது என்று உத்தரவிட்டது. இதற்கு பதிலளித்த கருணாநிதி, ஈழத்தில் வாழும் தமிழர்களுக்கான இந்தா மாநாட்டில் ஈழம் என்ற வார்த்தையை உச்சரித்துதான் ஆக வேண்டும் என்று கூறினார். மாநாட்டில் வன்முறை ஏற்பட வாய்ப்பு இருப்பதால் மாநாட்டிற்கு அனுமதி மறுக்கப்படுவதாக சென்னை மாநகர காவல்துறை வெள்ளிக்கிழமை நள்ளிரவு அறிவித்தது. சனிக்கிழமை மாநாட்டிற்கு அனுமதி கோரியும், காவல்துறை ஆணையாளரின் தடையுத்தரவை நீக்கக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. வழக்கு ஒன்றை தாக்கல் செய்தது. ஆனால் அனுமதிக்கப்பட்ட 8000 பேருக்கு மேல் கலந்துகொள்ள மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம் என்று கேள்வியெழுப்பிய நீதிபதிகள், டெசோ மாநாட்டிற்கு அனுமதி கேட்டவரும் தடையை நீக்கக் கோரும் வழக்கை தொடுத்தவரும் வேறுவேறு நபர்கள் என்பதை சுட்டிக்காட்டி வழக்கை நிராகரித்தார்கள். இதற்கிடையில் ஈழம் என்ற வார்த்தைக்கு தந்த தடையை காங்கிரஸ் விலக்கிக்கொண்டது. மாநாடு நடந்த 12ம் தேதி காலை, பரபரப்பு நாடகங்கள் உச்சகட்டம் அடைந்தன. தி.மு.க.வின் வழக்கை அவசர வழக்காக எடுத்துக்கொண்டு நீதிபதிகள் மீண்டும் விசாரித்தார்கள். மாநாட்டில் 8000 பேருக்கும் மேல் கலந்து கொள்ளக்கூடாது, ஒலிபெருக்கி, பேனர் ஆகிய விஷயங்களில் காவல்துறையின் கட்டுப்பாட்டை மீறக்கூடாது போன்ற நிபந்தனைகளை விதித்து மாநாட்டிற்கு நீதிபதிகள் அனுமதி வழங்கினார்கள். காலையில் நடைபெற்ற ஆய்வரங்கில் பேசிய கருணாநிதி, 2009ம் ஆண்டில் தான் மேற்கொண்ட உண்ணாவிரதத்தின் போது இந்திய வெளியுறவுத் துறையும், இலங்கையும் போர் நின்றுவிட்டதாக தனக்கு உறுதியளித்ததால்தான் தனது உண்ணாவிரதத்தை கைவிட நேர்ந்ததாக தெரிவித்தார். ஆனால் அப்போது பொய்யானத் தகவலை கூறி இலங்கை அரசு, இந்தியாவை ஏமாற்றிவிட்டதாக அவர் குற்றம்சாட்டினார். மாலையில் நடந்த மாநாட்டில் பேசிய கருணாநிதி, தற்போதைய தேவை இலங்கையிலுள்ள பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு முதலுதவிதான் என்றும், தான் காணும் கனவான தமிழீழம் கிடைக்கும் வரை போராடுவேன் என்றும் கூறினார். ஈழத் தமிழர்களுக்கு உதவ தமிழகம் என்றும் தயாராக இருப்பதாகவும் அவர் உறுதியளித்தார். மாநாட்டில் லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, பேராசிரியர் சுபவீரபாண்டியன் ஆகியோரும் பேசினார்கள். இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உடனடியாக நிவாரண உதவிகள் வழங்க வேண்டும், அவர்களுக்கு அரசியல் உரிமைகள் தரவேண்டும், டெசோ மாநாட்டை தடுக்க நினைத்த அ.தி.மு.க. அரசை கண்டிப்பது, போர் குற்றங்களை விசாரிக்க பன்னாட்டுக் குழுவை அமைக்க வேண்டும் என்பன போன்ற 14 தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. தடைகள் அனைத்தையும் மீறி டெசோ மாநாடு வெற்றி பெற்றதாகவும், 30க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த தமிழர் பிரதிநிதிகள் ஆயவரங்கில் பங்கேற்றதாகவும் கருணாநிதி தெரிவித்தார். தமிழர்களுக்கு உலகில் எங்கு பிரச்சினை ஏற்பட்டாலும் தமிழர் பிரதிநிதிகள் ஒன்றுசேர்வார்கள் என்பதை டெசோ மாநாடு நிருபித்திருக்கிறது. ஆனால் இந்த மாநாடு ஏற்படுத்திய விளைவு என்ன என்பது இனிமேல்தான் தெரியவரும்.

Saturday, August 11, 2012

நம்பிக்கை இளைஞர் விவேகானந்தர்

செப்டம்பர் 11... என்று சொன்னால் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் 2001ல் நடந்த இரட்டை கோபுரத் தாக்குதல் சம்பவம்தான் நம் நினைவுக்கு வரும். ஆனால் அதற்கு சரியாக 108 வருடங்களுக்கு முன்பு 1893ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி, சிகாகோவில் நமது இந்தியத் திருநாட்டின் பெருமையை நிலைநாட்டினார் ஒரு இளைஞர் என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? சுவாமி விவேகானந்தர் என்பது அந்த இளைஞரின் பெயர். சாதிக்க வேண்டும் என்ற துடிப்பும், வேகமும் நிரம்பிய இளைஞராக அவர் இருந்தார். ராமகிருஷ்ண பரஹம்சரை சந்தித்ததால் தனது வாழ்க்கையை ஆன்மீகத்துக்காக அர்ப்பணித்து வாழ்ந்தவர். துறவியாக முழுவதும் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார். இன்று ஆங்கிலேயர்கள் நம் நாட்டை அடிமைப்படுத்தியிருந்ததால் மக்கள் நமது பெருமைகளை மறந்து இருந்தார்கள். அடிமைகளாக வாழ்வதில் சுகம் அடைந்திருந்தார்கள். இந்த இந்த நிலையைக் கண்டு விவேகானந்தர் மனம் வருந்தினார். நமது பெருமைகளை நாம் கூறி புரிய வைப்பதைவிட மேலைநாட்டவர்கள் சொன்னால் நமது மக்களுக்கு நம் பெருமைகள் புரியும் என்பதை உணர்ந்துக் கொண்டார். அதன் காரணமாக அமெரிக்கா செல்ல தீர்மானித்தார். 1893ல் அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரத்தில் சர்வமத மாநாடு நடந்தது. அந்த மாநாட்டைப் பற்றி கேள்விப்பட்ட விவேகானந்தர் அந்த மாநாட்டிற்கு செல்ல தீர்மானித்தார். அதற்கான ஆயுத்தங்களை செய்யத் தொடங்கினார். குமரிமுனைக்கு சென்ற அவர், அங்குள்ள பாறை ஒன்றின் மீது அமர்ந்து தியானம் செய்தார். தியானத்தின் போது கடவுள் பற்றி சிந்தனை செய்யவில்லை. மாறாக இந்தியாவின் அன்றைய வறுமை நிலைமையையும் கல்வி முன்னேற்றத்தையுமே சிந்தித்தார். இந்திய மக்களுக்கு உடனடி தேவை மதமல்ல, தொழிற்கல்வியே என்று உணர்ந்தார். விவேகானந்தர் வெளிநாட்டிற்கு செல்வதற்கு ஏராளமான சிற்றரசர்களும், செல்வந்தர்களும் முன்வந்தார்கள். ஆனால் விவேகானந்தர் தான் வெளிநாட்டிற்கு செல்வதற்கு காரணம் ஏழைகளுக்காக என்பதால் சாதாரண மக்களின் பங்களிப்பும் தனது பயணத்தில் இடம்பெற வேண்டுமென்று விரும்பினார். ஏற்கனவே அமெரிக்கா செல்வதற்கு பல செல்வந்தர்கள் வலியுறுத்தியப் பிறகும் விவேகானந்தர் தன்னுடைய சம்மதத்தை சென்னையில் இருந்த இளைஞர்களிடம்தான் வெளிப்படுத்தினார். அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஆன்மீகத்தை போதிப்பதன் மூலம் இங்குள்ள ஏழை மாணவர்களுக்கு கல்வி தரமுடியும் என்று நம்பினார். சென்னை இளைஞர்கள் விவேகானந்தர் வெளிநாடுகளுக்கு செல்வதற்காக பணம் திரட்டினார்கள். பணக்காரர்கள் முதல் ஏழைகள் வரை அவர் சர்வமத மாநாடுகளுக்கு செல்ல நிதியளித்தார்கள். அவர்கள் செய்து கொடுத்த ஏற்பாட்டின்படி, மே 31ம் தேதி பம்பாயிலிருந்து அமெரிக்கா நோக்கி கப்பலில் புறப்பட்டார். கப்பலில்கூட விவேகானந்தர் தேசபக்தியை விடவில்லை. கப்பல் ஜப்பான் வழியாக அமெரிக்கா சென்றது. ஜப்பானில் இருந்த தொழிற்சாலைகள் அவரை கவர்ந்தன. தன்னுடன் பயணம் செய்த தொழிலதிபரிடம் தன்னுடைய எண்ணங்களை பகிர்ந்துக் கொண்டார். அந்த தொழிலதிபர்தான் பிற்காலத்தில் இந்தியாவின் தொழிற்புரட்சிக்கு பெரிதும் உதவிய ஜாம்ஷெட்ஜி டாட்டா. அமெரிக்காவிற்கு ஜூலை மாதமே போய் சேர்ந்துவிட்டார் விவேகானந்தர். அங்குள்ள சூழ்நிலைகளுக்கு அவர் பழக்கிகொள்ளும் முன்பே அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. ஆகஸ்ட் மாதம் நடைபெற இருந்த சர்வமத மாநாடு செப்டம்பர் மாதம் தள்ளிவைக்கப்பட்டது. எந்த மனிதரும் தெரியாத ஊரில் தனித்துவிடப்பட்டதாக உணர்ந்தார். சர்வமத மாநாட்டில் தான் கலந்துகொள்ள முடியுமா என்றுகூட சந்தேகப்பட்டார். கையில் இருந்த பணமும் கரைய ஆரம்பித்தது. அவரை சந்தித்த அமெரிக்கர்கள் இந்தியாவை பற்றி தாங்கள் கேள்விப்பட்ட அவதூறுகளை பற்றி கேட்டார்கள். ஆனாலும் விவேகானந்தர் மனம் தளரவில்லை. ஒரு சிலர் அவருடைய உருவத்தை வைத்து அவரை தவறாக எடை போட்டார்கள். அவருடைய தலைப்பாகையை இழுத்துவிட்டு வேடிக்கை பார்த்தவர்கள்கூட உண்டு. ஒரு இடத்தில் அவரது உருவத்தைக் கண்டு சிறு கூட்டம் ஒன்று படுகோபத்துடன் அவரை துரத்திய சம்பவம்கூட நடந்தது. அமெரிக்காவில் அங்குள்ள மக்கள் மட்டுமல்லாமல் அங்கு குடியேறிய இந்தியர்களின் எதிர்ப்புகளையும் சமாளித்தார். ஆனால் தொடர்ந்து நம்பிக்கையுடன் செயல்பட்டதால் நல்ல நண்பர்கள் கிடைக்க ஆரம்பித்தார்கள். மாநாடு தொடங்கும்வரை சிகாகோவில் இருந்து 1000 கி.மீ. தொலைவில் இருந்த போஸ்டன் என்ற நகரத்தில் இருந்து தன்னுடைய செலவை குறைத்தார். அங்கு கேதரின் என்ற பெண் விவேகானந்தருக்கு நண்பரானார். அவர் மூலமாக பேராசிரியர் ஜான் ஹென்றி ரைட் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. அவருடைய நம்பிக்கையை பெற்றார் விவேகானந்தர். ஹென்றி ரைட் தனது நண்பரான சர்வமத மாநாட்டின் தலைவர் டாக்டர் பரோசுக்கு விவேகானந்தரை அறிமுகப்படுத்தி கடிதம் தந்தார். அத்துடன் விவேகானந்தரின் செலவுகளை சமாளிப்பதற்காக அங்கு இந்தியாவைப் பற்றிய சொற்பொழிவுகளையும் ஏற்பாடு செய்தார் ஜான் ரைட். இத்தனை தடைகளையும் மீறி சர்வமத மாநாட்டிற்கு போய் சேர்ந்தார் விவேகானந்தர். அங்கு ‘சகோதரர்களே! சகோதரிகளே!’’ என்று அழைத்து உரையை ஆரம்பித்ததுதான் காரணம். ஒட்டுமொத்த அரங்கமே எழுந்துநின்று கைதட்டியது. அந்த மாநாட்டின் போது அவருடைய வயது முப்பதுதான். அவருடைய பேச்சுகளைக் கேட்ட அமெரிக்கர்கள் நண்பர்களானார்கள். பல இடங்களில் அவரை பேச கூப்பிட்டார்கள். தனது உரைகளின் மூலம் அமெரிக்கர்களுக்கு இந்தியாவின் ஆன்மிகத்தையும், அப்போதிருந்த உண்மைநிலை பற்றியும் புரிய வைத்தார். அதனால் பல வெளிநாட்டு சீடர்கள் அவருக்கு கிடைத்தார். ஐரீஸ் நாட்டில் பிறந்து, இந்தியப் பெண்ணாக வாழ்ந்து பல சுதந்திரப் போராட்ட வீரர்களை உருவாக்கிய சகோதரி நிவேதிதையும் அவர்களில் ஒருவர். இந்தியா வந்த விவேகானந்தரை இந்தியர்கள் அனைவரும் வரவேற்றார்கள். அவரது கருத்துக்களை பிடிக்காதவர்கள் கூட அவரை ஏற்றுக் கொண்டார்கள். அவரது செயல்திட்டங்களுக்கு ஊக்கம் தந்தார்கள். ‘‘நூறு இளைஞர்களை எனக்கு தந்தால் வலிமையான இந்தியாவை உருவாக்கி காட்டுவேன்’’ என்றவர் விவேகானந்தர். அவரது வாழ்க்கை ஆன்மீகவாதிகளுக்கு மட்டுமல்ல. செயல்படத் துடிக்கும் இளைஞர்கள் அனைவருக்கும் உற்சாகம் தருகிறது.

Thursday, August 9, 2012

சீக்கியர் படுகொலையும் இந்தியர் எதிர்பார்ப்பும்

அமெரிக்காவில் உள்ள விஸ்காஸினில் இருக்கும் ஓக் க்ரீக் குருத்வாராவில் கடந்த 5ம் தேதி வேட் மைக்கேல் பேஜ் என்ற முன்னாள் ராணுவ வீரன் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 சீக்கியர்கள் பலியானார்கள். 25க்கும் மேற்பட்ட சீக்கியர்கள் காயமடைந்தார்கள். உடனே பேஜை நோக்கி அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய தாக்குதலில் பேஜ் சுட்டு கொல்லப்பட்டான். இந்த சம்பவத்திற்கு இந்தியாவிலும், அமெரிக்க வாழ் இந்தியர்களிடமும் பெரும் கண்டனம் எழுந்துள்ளது. இந்த துப்பாக்கி தாக்குதலை கண்டித்து புதுடில்லியில் பல்லாயிரக்கணக்கான சிக்கியர்கள் அமைதி ஊர்வலம் நடத்தி தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். அமெரிக்காவில் கடந்த சில வருடங்களாகவே சீக்கியர்கள், இந்துக்கள், முஸ்லீம்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இந்த தாக்குதலில் ஈடுபட்ட மைக்கேல் பேஜும் வெள்ளை இனவெறியாளனே என்று ஒரு மனித உரிமை அமைப்பு கூறுகிறது. இந்தியர்களை குறிவைத்து நடக்கும் இந்த தாக்குதல்களை இந்திய அரசு முக்கிய பிரச்சினையாக எடுத்துக் கொண்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து இந்தியாவின் கவலையை அமெரிக்க தூதர் நிருபமா ராவ் மூலமாக அமெரிக்க அரசுக்கு தெரியப்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவங்கள் குறித்து பல்வேறு சீக்கிய அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. குறிப்பாக 9/11 சம்பவத்திற்குப் பிறகு அங்குள்ள சீக்கியர்கள் மீதும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. அதே நேரத்தில் இது போன்ற சம்பவங்களுக்கு வெறும் இனவெறி மட்டுமே காரணமல்ல. மக்களுக்கு சுலபமாக துப்பாக்கி கிடைக்க வகை செய்யும் அமெரிக்க சட்டங்களும் காரணம் என்பதை கவனிக்க வேண்டும். அதிலும் குருத்வாரா தாக்குதல் நடந்த விஸ்கான்ஸின் மாநிலத்தில் துப்பாக்கி வழங்கும் சட்டம் எளிதாக உள்ளது. துப்பாக்கியை மக்கள் எளிதாக கையில் எடுப்பதால் அமெரிக்காவில் உள்நாட்டுக் குழப்பங்கள் அதிகரித்துள்ளன. போரில் பலியாகும் அமெரிக்க வீரர்களை விட துப்பாக்கி சூடுகளில் சிக்கி பலியாகும் அப்பாவி மக்களுடைய எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக சமீபத்தில் நடந்த ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. ஓக் கிரீக் குருத்வாரா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்க அரசு அமெரிக்க தேசியக் கொடிகளை அரை கம்பத்தில் ஏற்றி மூன்று நாள் துக்கம் அனுசரிப்பதாக ஒபாமா அறிவித்தது இந்திய - அமெரிக்க உறவுக்கு நல்ல அறிகுறி. ஆனால் இது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதற்கு அங்குள்ள உள்நாட்டு துப்பாக்கி சட்டமே காரணம் என்பதை கவனத்தில் கொள்ளாதவர்களாக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும் அவரது எதிர்ப்பாளர்களும் இருக்கிறார்கள். இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்காமல் இருக்க வேண்டும் என்பதே அமெரிக்கவாழ் இந்தியர்களின் எதிர்ப்பார்ப்பு. அமெரிக்க அரசு அந்த நோக்கத்தை எப்போது பூர்த்தி செய்யும்?.

மனிதா... நீ மகத்தானவன்! - புத்தக மதிப்புரை

புத்தக மதிப்புரை புத்தகத்தின் பெயர் : மனிதா... நீ மகத்தானவன்! விலை : ரூ. 120.00 நூலாசிரியர் : யா.சு.கண்ணன் வெளியீடு : ஆர் மீடியா பதிப்பகம், 37/55, சிவில் ஏவியேஷன் காலனி, நங்கநல்லூர், சென்னை & 61. மொபைல்: 9884886240. இன்றைய உலகில் சுயமுன்னேற்ற நூல்கள் தமிழிலும் அதிகமாக வரத் தொடங்கியுள்ளன. ஆன்மீக இலக்கியங்களைக் கூட சுயமுன்னேற்ற அடிப்படையில் தந்தால் தான் இளைஞர்கள் விரும்பி படிக்கிறார்கள். ஆனால் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய நூல்கள் தமிழில் குறைவே. இந்த புத்தகத்தை எழுதியதன் மூலம் அந்த குறையைத் தீர்க்க யா.சு.கண்ணன் முயன்றிருக்கிறார். வேறு அடிப்படைகளில் அல்லாமல் யதார்த்த அடிப்படையில் புத்தகத்தை எழுதியிருப்பது வாசகர்களின் ஈடுபாட்டை நிச்சயம் அதிகரிக்கும். அயல்நாட்டு சிந்தனையில் போகாமல் நமது பாரம்பரியத்தின் வழியில் நின்று புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது. பணம் வாழ்க்கைக்கு அவசியம் என்றாலும் வெறும் பணம் மட்டும் மற்றவர்களின் மதிப்புக்கு போதுமானதல்ல. பணத்துடன் நல்ல குணாதசியங்கள் தேவை. அந்த குணங்கள் எவை என்பதை விரிவாக சொல்லியிருக்கிறார். மேலும், பல்வேறு தோல்விகளுக்கு காரணங்களையும் அவை தொடராமல் இருப்பதற்கு தேவையான பண்புகளையும் நாம் சிந்திப்பதில்லை. தோல்விகளை அறிந்துகொள்வதோடு அவற்றை போக்குவதற்கான காரணங்களையும் நாம் தெரிந்துகொள்வதே வெற்றிக்கு வழிவகுக்கும். இந்த சிந்தனையை இந்த புத்தகத்தில் யா.சு.கண்ணன் விடைத்திருக்கிறார். சாதாரண மனிதனும் இந்த புத்தகத்தை படித்தால் தன்னம்பிக்கை பெறுவது நிச்சயம். புத்தகத்திலிருந்து.... ‘லட்சியத்தை தெளிவாகத் தீர்மானியங்கள்; இலக்குகளை நிர்ணயுங்கள்; அவற்றை அடைய திட்டங்களை வகுத்துக் கொள்ளுங்கள். தன்னம்பிக்கையுடன் முன் வந்து செயல்படுங்கள். பிறருடைய ஒத்துழைப்பையும் பெற்று முறைப்படுத்தப்பட்ட முயற்சியை மேற்கொள்ளுங்கள். ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்குள்ளாகவே நாம் ஒரு தெளிவான திசையில் போய் கொண்டிருப்பது புலனாகும்’’. & பக்கம்.51

எண்ணமும் கோபமும் - நீதிக்கதை

ஒரு ஊரை அரசன் ஒருவன் ஆட்சி செய்து வந்தான். அவன் தினசரி தேரிலேறி நகர்வலம் வருவான். அவன் நகர்வலம் வரும்போது மக்கள் அனைவரும் அவனுக்கு வணக்கம் செல்லுவார்கள். அவனும் மகிழ்ச்சியுடன் திரும்ப அவர்களுக்கு வணக்கம் தெரிவிப்பான். அந்த மக்களில் ஒரு விறகு கடைக்காரனும் இருந்தான். அவன் கடையை அரசன் கடந்துப் போகும் போதெல்லாம் அவன் வணக்கம் சொல்லுவான். அரசனும் மனதில் மிகுந்த வெறுப்பாக பதில் வணக்கம் தெரிவிப்பான். அந்த விறகு கடைக்காரனை பார்க்கும் போதெல்லாம் கோபம் வரும். ஆனால் அரசனுக்கு அதன் காரணம் தெரியவில்லை. தன்னுடைய அமைச்சரைக் கூப்பிட்டு, ‘‘அவனைப் பார்த்தால் மட்டும் எனக்கு வெறுப்பு வருகிறதே? என்ன காரணம்?’’ என்றுக் கேட்டான். அமைச்சரோ இரண்டு நாள் கழித்து தான் பதில் சொல்ல முடியும் என்றுக் கூறிவிட்டார். இரண்டு நாள் கழித்து அரசன் வழக்கம் போல அந்த விறகு கடைக்காரனை கடந்து சென்றான். அவனுக்கு பதில் வணக்கம் சொல்லும் போது மகிழ்ச்சி பொங்கியது. அரண்மனைக்குத் திரும்பியவுடன் அமைச்சரை கூப்பிட்டு இந்த மனமாற்றத்திற்கு காரணம் கேட்டான். அமைச்சர் இப்போது பதில் கூறினார்: ‘‘அரசே! அந்த விறகு கடைகாரன் தன்னுடைய கடையில் நிறைய சந்தனக் கட்டைகளை இறக்கியிருந்தான். ஆனால் ஒன்று கூட வியாபாரம் ஆகவில்லை. அதனால் இந்த சந்தனக் கட்டைகள் வியாபாரம் ஆக வேண்டுமென்றால் அரசன் சாக வேண்டும்; அப்போது மட்டும்தான் சந்தனக் கட்டைகள் விற்பனையாகும் என்று நினைத்துக் கொண்டான். அதே வெறுப்புடன் உங்களுக்கு மேலோட்டமான சிரிப்புடன் வணக்கம் கூறுவான். அதனால் உங்களுக்கு அவன் மேல் கோபம் வந்தது’’ என்றார். அரசனுக்கு ஒரே ஆச்சரியம். ‘‘அது சரி. இப்போது அவனை பார்த்தபோது மகிழ்ச்சி வந்ததே? அதற்கு என்ன காரணம்?’’ என்றுக் கேட்டான். ‘‘நான் செய்த வேலைதான் காரணம் அரசே. நமது அரண்மனை வேலையாட்களுடன் அவனுடைய கடைக்கு போனேன். நம்முடைய அரண்மனையில் ராஜா பெரிய யாகம் ஒன்றை நடத்தவிருக்கிறார். அதற்கு நிறைய சந்தனக் கட்டைகள் தேவை என்று சொல்லி அவனிடமிருந்த சந்தனக் கட்டைகள் அனைத்தையும் வாங்கி விட்டேன். மேலும் தேவைப்பட்டால் உனக்குத் தெரிவிக்கிறேன் என்றுக் கூறிவிட்டேன். இன்று அவன் உங்களைப் பார்க்கும் போது அரசன் நீண்ட நாள் வாழ வேண்டும். அப்போது தான் நிறைய யாகங்களை நடத்துவார். தனக்கும் வியாபாரம் நடக்கும் என்று நினைத்துக் கொண்டே உங்களுக்கு வணக்கம் கூறினான். அவன் மனதில் தங்களைப் பற்றிய நல்ல எண்ணம் ஓடியதால் உங்களுக்கும் அவன் வணக்கம் சொல்லும்போது மகிழ்ச்சி ஏற்பட்டது’’ என்று பெரிய விளக்கம் தந்தார் அமைச்சர். அரசன் அமைச்சரின் மதியூகத்தைக் கண்டு வியந்து அவருக்கு பரிசும் தந்தான் என்பதை சொல்லவும் வேண்டுமா? மாணவர்களான நமக்கும் இது பொருந்தும். நல்ல எண்ணங்களுடன் நண்பர்களைத் தேடினால் நமக்கு நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். கெட்ட எண்ணத்துடன் பழகினால் கெட்ட நண்பர்களும், எதிரிகளும் தான் நமக்கு கிடைப்பார்கள்.