Wednesday, October 24, 2012

எல்லோர் கைகளிலும் கறை அரசியல் அரங்கில் பெருகிவரும் ஊழல் குற்றச்சாட்டுக்களால் ஏற்பட்டுள்ள பலன் என்ன?

சில வாரங்களுக்கு முன்னால் ஊழலுக்கெதிராக தொடர்ந்து குரல் கொடுத்துவருபவரான முன்னாள் வருமான வரித்துறை அதிகாரி அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் மீது ஊழல் புகார் ஒன்றை சுமத்தினார். அவரது மனைவி நடத்திவரும் அறக்கட்டளையின் மூலம் 74 லட்சம் ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக குற்றம் சாட்டினார். இது சம்பந்தமாக செய்தி ஊடகங்கள் பரபரப்பாகச் செய்திகளை ஒளிபரப்பிவந்தன. நாள்தோறும் புதுப்புது விஷயங்கள் மக்களுக்குத் தரப்பட்டன. ஆனால் இந்த ஊழல் குற்றச்சாட்டினால் திருவாளர் பொதுஜனம் அதிர்ச்சிக்குள்ளாகவில்லை. ‘இது வழக்கமான ஒன்றுதான்’ என்பது போல அவர்கள் அமைதியாக நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் சல்மான் குர்ஷித்துக்காக பரிந்துபேசிய மற்றொரு மத்திய அமைச்சர் பேனி பிரசாத் வர்மா, “போயும் போயும் 71 லட்சத்துக்கா ஒரு மத்திய அமைச்சர் ஊழல் செய்வார்? ஏதாவது நம்பும்படியா சொல்லுங்க. 74 கோடி என்று சொன்னால் நம்பலாம்” என்று கிண்டல் செய்தபோது, மக்கள் வேதனைக்கு ஆளானார்கள். கடந்த பத்து வருடங்களாக ஊழல் அடைந்துவரும் பிரம்மாண்டமான பரிணாமத்தை ஒரு மத்திய அமைச்சரே ஒப்புக்கொண்டிருக்கிறார். இப்போது பிரச்சினை வேறு பக்கம் திரும்புகிறது. ஒரு அமைச்சர் எப்படி இவ்வாறு பொறுப்பில்லாமல் பேசலாம் என்று எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் மத்திய அரசை வறுத்தெடுக்க ஆரம்பித்தன. ஏறக்குறைய இதே நேரத்தில் காஷ்மீரில் நிலக்கரி ஊழல் பற்றி கருத்து தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே, “போபர்ஸ் ஊழல் பற்றிய குற்றச்சாட்டை மக்கள் எப்படி மறந்தார்களோ அதுபோல நிலக்கரி ஊழலையும் மறந்துவிடுவார்கள்” என்று கூறினார். இதுபோன்ற பேச்சுக்கள் அதிர்ச்சி அலைகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்தினாலும் தொடர்ந்து நிகழ்ந்துவரும் சில சம்பவங்கள் நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கின்றன. இரண்டாவது தலைமுறை அலைக்கற்றை ஊழல் பற்றிய தகவல் கணக்குத் தணிக்கை அறிக்கையில் அம்பலமானது, ஊடகங்கள் இந்த விஷயத்தில் பல விஷயங்களை வெளியே கொண்டுவந்தன, உச்ச நீதிமன்றம் இவ்விஷயத்தில் தலையிட்டுக் கறாரான உத்தரவுகளைப் பிறப்பித்தது, மத்திய அமைச்சர்களும் ஆளும்கட்சிப் பிரமுகர்களும் சிறை சென்றார்கள். இந்த நிகழ்வுகளின் தொடர்ச்சியாக அண்ணா ஹசாரே தலைமையில் சிலர் ஊழலுக்கு எதிரான போராட்டத்தைத் தொடங்கினார்கள். மலைக்க வைக்கும் தொகைகளை ஊடகங்களில் பார்த்த பொதுமக்கள் அண்ணாவுக்குப் பெருமளவில் ஆதரவு அளித்தார்கள். இந்தக் குழுவினரின் போராட்டங்கள் பல வடிவங்கள் எடுத்தாலும் ஊழலுக்கு எதிரான குரலை இந்திய அரசியல் அரங்கில் மையம் கொள்ள இந்த அமைப்பு வித்திட்டது என்று சொல்லலாம். ஊழலுக்கு எதிரான அரசியல் கட்சியைத் தொடங்குவதாக அண்ணா அறிவித்தார். ஆனால் தயக்கத்தின் காரணமாக அரசியல் கட்சியைத் தொடங்கும் முடிவை கைவிடுவதாக ஹசாரே அறிவித்தார். ஆனால் ஹசாரே குழுவில் முக்கிய இடம் வகித்த அரவிந்த் கெஜ்ரிவால் மட்டும் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். கடந்த சில வாரங்களாக அவர் அரசியல் கட்சிகளின் மீதும், அரசியல்வாதிகளின் மீதும் சுமத்தும் குற்றச்சாட்டுகள் சூட்டைக் கிளப்புகின்றன. கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லியாக வேண்டிய நிலையில் மத்திய அரசு உள்ளது. அதன் காரணமாக பெரிய அளவிலான அதிர்வலைகள் அரசியல் வட்டாரத்தில் ஏற்பட்டுள்ளன. சல்மான் குர்ஷித் மீது கெஜ்ரிவால் வைத்துள்ள குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை சில மாதங்களுக்கு முன்னால் உத்தர பிரதேச முதல்வர் அபிஷேக் யாதவ் வெளியிட்டிருப்பதாகவும் தெரிவித்தார். ஆனால் அபிஷேக் யாதவ் வாய்மூடி மௌனம் காத்ததால் அந்த பிரச்சினை அடங்கியது. இந்நிலையில் சல்மான் குர்ஷித்தின் தொகுதிக்கு செல்லப் போவதாக கெஜ்ரிவால் கூறினார். வரலாம், ஆனால் திரும்பிப் போக முடியாது என்று சொல்லி அனைவரையும் அதிரவைத்தார் குர்ஷித். இதற்கு முன் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவின் மீது கெஜ்ரிவால் வைத்திருந்த குற்றம் சாட்டின் மீதான பரபரப்பும் அடங்கவில்லை. மூன்று ஆண்டுகளுக்கு முன்புவரை வெறும் 50 லட்சத்துக்கு சொத்து வைத்திருந்த ராபர்ட் வதேரா தற்போது 300 கோடிக்கு அதிபதியாகியது எப்படி என்ற கேள்வியை அவர் எழுப்பினார். வதேராவிடமிருந்து எந்தவித அடமானமும்பெறாமல் அவருக்கு டி.எல்.எப். நிறுவனம் 65 கோடி ரூபாயை எப்படி கடனாகத் தந்தது என்று அவர் சந்தேகம் எழுப்பினார். உடனே கெஜ்ரிவாலுக்கு காங்கிரஸ் அமைச்சர்கள் பதில் அளிக்க ஆரம்பித்தார்கள். கெஜ்ரிவாலின் இந்த புகார், காங்கிரசுக்கு எதிரான சதி என்று அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் கூறினார். இந்த விவகாரம் குறித்து எந்த விசாரணையும் கிடையாது என்று மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் அறிவித்தார். கெஜ்ரிவால் மீது மான நஷ்ட வழக்கு தொடருவேன் என்று வதேரா கொதித்தெழுந்தார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக விமான நிலையங்களில் ராபர்ட் வதேராவுக்கு சிறப்பு பாதுகாப்பு தரப்படுவது ஏன் என்ற கேள்விக்கும் காங்கிரசிடமிருந்து இதுவரை பதில் இல்லை. அரவிந்த் கெஜ்ரிவாலின் அம்புகள் காங்கிரஸ் அமைச்சர்கள் மீது பாய்ந்தபோது அவரது பின்னணியில் பா.ஜ.க. உள்ளதோ என்று சில அரசியல் விமர்சகர்கள் சந்தேகப்பட்டார்கள். ஆனால் கெஜ்ரிவால் பா.ஜ.க.வையும் விடவில்லை. மகாராஷ்ட்ராவில் அணை ஒன்றை கட்டும் விஷயத்தில் 100 ஏக்கர் அத்துமீறலாக ஒரு அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் அதில் பா.ஜ.க. தலைவர் நிதின் கட்காரி சம்மந்தப்பட்டிருப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தினார். ஆனால் கட்காரி இந்த அறக்கட்டளையுடன் தனக்கு எந்தத் தொடர்புமில்லை என்று கூறியுள்ளார். இது விஷயமாக எந்த விசாரணைக்கும் தயார் என்றும் அறிவித்திருக்கிறார். அடுத்த்தாக வந்த செய்தி மக்களை இன்னும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இவ்வளவு பேரைக் கேள்வி கேட்ட அரவிந்த் கெஜ்ரிவால் யோக்கியரல்ல என்று மகாராஷ்ட்ரத்தைச் சேர்ந்த முன்னாள் காவல்துறை அதிகாரி ஒய்.பி.சிங் புகார் கூறினார். கெஜ்ரிவால், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கு ஆதரவாகச் செயல்படுவதாக அவர் தெரிவித்தார். அதற்கு ஆதாரமாக, சரத் பவாரும் அவரது குடும்பத்தினரும் லவாசா என்ற இடத்தில் சட்டத்துக்கு விரோஹமான வகையில் நிலங்களை சொந்தமாக்கிக்கொண்டிருப்பதை கெஜ்ரிவால் கண்டுகொள்ளவில்லை என்பதை அவர் சுட்டிக் காட்டினார். இது தவிர பா.ஜ.க. ஆட்சியின் போது வாஜ்பாய், அத்வானியின் உறவினர்கள் ஊழலில் ஈடுபட்டது குறித்த ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக திக்விஜய் சிங் பரபரப்பு ஏற்படுத்தினார். இப்போது எல்லாத் தரப்பிலும் ஒருவரை ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுகளால் தாக்கி வருகிறார்கள். அந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் அனைவரும் இருக்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்புவரை பெரிய அரசியல் கட்சித் தலைவர்கள் மட்டும்தான் ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்த முடியும் என்ற நிலை இருந்தது. எதிர்க்கட்சிகள் ஊழல் குற்றம் சுமத்தும் போதெல்லாம் அதைச் சுமத்த எதிர்க்கட்சிகளுக்கு அருகதையில்லை என்று சொல்வதே ஆளுங்கட்சியின் வாதமாக இருந்தது. சாதாரண மக்கள் இவர்களது ஊழல்களைப் பற்றி சரியாகத் தெரிந்துகொள்ளக் கூட முடியாத நிலை இருந்தது. ஆனால் அண்ணா ஹசாரேவின் போராட்டத்திற்குப் பிறகு அந்த நிலை மாறியுள்ளது. ஆனால் இதுபோன்ற குற்றச்சாட்டுகளால் மக்கள் மத்தியில் ஜனநாயகத்தின் மீதான அவநம்பிக்கை அதிகமாகும் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். என்றாலும் ஊழல் செய்தால் வலுவான எதிர்ப்பு எழும் சூழல் உருவாகியுள்ளது முக்கியமான மாற்றம் என்பதை மறுக்க முடியாது. குற்றச்சாட்டு என்ற கலகத்தின் வழியாகவே நேர்மை என்ற நன்மை பிறக்கும் காலம் இது. நல்லது நடக்கும் என்று நம்புவோம்.

Monday, October 15, 2012

மாற்றான் திரை விமர்சனம்

தமிழில் சிறந்த படங்கள் அதிகமாக வருவதில்லை. ஒரு சில படங்களை நல்ல படங்கள் என்று சொன்னாலும் அவை நல்ல முறையில் வருவதில்லை. அந்த படங்களுக்கு மார்க்கெட் இருப்பதில்லை. வந்த வேகம் தெரியாமல் தியேட்டர்களை விட்டு வெளியேறி விடுகின்றன. நல்ல கதையமைப்பு, சிறந்த நடிப்பு, பெரிய நடிகர்கள் கொண்ட படங்கள் குறைவே. அந்த குறையைத் தீர்த்து வைக்கிறது அக்டோபர் 12ஆம் தேதி வெளியான ‘மாற்றான்’ திரைப்படம். மரபணு விஞ்ஞானியான ராமச்சந்திரனுக்கு விமலும், அகிலனும் (இரட்டை வேடம்) ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள். தனக்கு இயற்கையாகப் பிறக்கும் குழந்தைகளைக்கூட மரபணு முறையிலேயே பெற துடிக்கும் மரபணு வெறியர். மரபணு முறைகளை தெரிந்துகொண்டு சென்னையில் குழந்தைகளுக்கான பவுடரைத் தயாரிக்கும் வியாபாரம் செய்கிறார் ராமச்சந்திரன். அதை ரஷ்ய நாட்டுப் பெண் பத்திரிகையாளர் ஒருவர் அவரது தொழிற்சாலையைப் பற்றிய உண்மைகளை சேகரிக்கிறார். அந்தப் பெண் இறக்கும் நேரத்தில் தனது தந்தையின் அநியாயங்களைப் பற்றி தெரிந்துகொள்கிறான் விமல். அந்த பத்திரிகையாளர் சேகரித்த விபரங்கள் விமலின் கையில் சிக்குகின்றன. விபரங்களை பிடுங்கும்போது மகலும் பலியாகிறான். தன்னுடன் ஒட்டிப் பிறந்தவன் பலியான அதிர்ச்சியில் அகிலன் உறைந்துபோகிறான். தனது சகோதரனின் மரணத்திற்கு தனது தந்தைதான் காரணம் என்பதை கண்டறிகிறான். தந்தை தயாரிக்கும் மரபணு பால் பவுடரின் மூலம் முன்னாள் சோவியத் நாடான உக்ரைனில் இருப்பதை அறிகிறான். தனது காதலியுடன் ரஷ்யாவுக்கு செல்கிறான். மரபணு பால் பவுடரின் ரகசியத்தை கஷ்டப்பட்டு கண்டுபிடித்து எப்படி நாட்டைக் அகிலன் காப்பாற்றுகிறான் என்பதுதான் மீதிக்கதை. நமது நாட்டில் மரபணு விவசாயம் பற்றிய விழிப்புணர்வு நகரத்து மக்களிடம் இல்லை. அதை ஏதோ கிராமத்து மக்களின் வெற்றுக் கூச்சல் என்று நினைக்கிறார்கள். அது தவறு என்பதை இந்தப் படம் கோடிட்டுக் காட்டுகிறது. மரபணு தொழிற்சாலை அமைந்தால் மாடுகளின் நிலை என்ன என்பதையும் படத்தில் சொல்லியிருக்கிறார்கள். சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு, காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீடு என்று ஓவர் டோஸில் போய்கொண்டிருக்கும் மத்திய அரசு, அடுத்தது மரபணு விவசாயத்தையும் ’ஒரு கை’ பார்க்கும் தீராத வெறியில் இருக்கிறது. சரியான நேரத்தில் இந்த படம் வெளிவந்திருக்கிறது. இனிமேலாவது விழித்துக் கொள்ளட்டும். இந்த படத்தில் குறிப்பிட வேண்டிய மற்றொரு சிறப்பம்சமும் இருக்கிறது. சென்ற தலைமுறை காலத்தில் அமெரிக்காவுக்கு எதிரான வலுவான சக்தியாக ஒருங்கிணைந்த சோவியத் ரஷ்யா இருந்தது. தாங்கள் எல்லாத் துறைகளிலும் வெற்றியடைவதற்காக உலகிலுள்ள அயோக்கியத்தனங்கள் அனைத்திலும் ஈடுபட்டது. அந்த தகிடுதத்தங்களின் மூலம் கிடைத்த வெற்றிகளைக் காண்பித்துதான் நம்மூர் லெனின்களும் ஸ்டாலின்களும் ஓலமிடுகிறார்கள். 1990களில் சோவியத் யூனியன் சின்னாபின்னமான பிறகுதான் கம்யூனிஸ்டுகளின் அநியாயங்கள் சோவியத்தின் பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்களால் உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டன. கம்யூனிஸ்ட்டுகளின் மர்ம முடிச்சுகள் இந்த படத்திலும் அவிழ்க்கப்பட்டுள்ளன. தனது முயற்சியில் கதாநாயகன் சூர்யா வெற்றியடையும்போது தங்களுடைய விளையாட்டு வீரர்கள் ஊக்க மருந்தை உட்கொண்டுதான் போட்டிகளில் வெற்றியடைந்தார்கள் என்பதை சொன்னால் தங்கள் நாட்டின் மரியாதை உலக அரங்கில் சீர்குலையும் என்று உக்ரைன் நாட்டு உயரதிகாரி கெஞ்சும் காட்சியில் கம்யூனிசத்தின் நிலை அந்தோ பரிதாபம்!. தைரியமாக படம் எடுத்து கம்யூனிஸ்ட்டுகளின் அக்கிரமங்களை வெளிப்படுத்திய இயக்குநர் கே.வி. ஆனந்துக்கு வாழ்த்துக்கள். இயக்குநரை பல இடதுசாரிகள் வலைத்தளங்களில் திட்டி வருகிறார்கள். திருடனுக்கும் தேள் கொட்டினால் வியர்க்கத்தானே செய்யும்?. பாரதத்தின் கலைகளை சீனாவுக்குக் கொண்டுசென்ற போதிதர்மரைப் பற்றிய ‘ஏழாவது அறிவு’ படத்தைத் தொடர்ந்து இந்த படத்திலும் நடித்திருக்கிறார் நடிகர் சூர்யா. இப்படிப்பட்ட படங்களை அவர் தேர்ந்தெடுத்து நடிக்கிறாரா? அல்லது இயற்கையாகவே அவரை வாய்ப்புகள் தேடி வருகின்றனவா?. எப்படியிருந்தாலும் அவருக்குப் பாராட்டுக்கள். ஹாரீஸ் ஜெயராஜ் இசையில் ’கால் முளைத்த பூவே’ மட்டுமே சொல்லும்படியாக இருக்கிறது. கம்யூனிஸத் தொழிற்சங்கத் தலைவர்களின் உண்மை சொரூபம் என்ன என்பதை நகைச்சுவையாக சொல்லியிருக்கிறார்கள். படத்தில் நடித்தவர்கள் அனைவரும் தங்களது கதாபாத்திரங்களைச் சரியாக நடித்திருக்கிறார்கள். நாயகனை விவேகானந்தர், டெண்டுல்கர் ஆகியோரின் மரபணு மூலமாக பெற்றெடுப்பது, நாட்டின் உயரதிகாரிகள், விஞ்ஞானிகளாலேயே முடியாததை நாயகன் தனியாக இருந்து சாதிப்பது, நினைத்தவுடன் பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் இருக்கும் குஜராத்திற்குச் சென்று வில்லனைப் பிடிப்பது போன்ற அபந்தங்களையும் தவிர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். மக்களின் மனதில் மாற்றத்தை மாற்றான் வழியாகவும் கொண்டுவர முடியுமே?