Sunday, November 25, 2012

மிருக வதைப் பூங்கா


'இந்தப் படத்தில் எந்த விலங்கும் துன்புறுத்தப்படவில்லை' - இது விலங்குகளைப் பயன்படுத்தும் எல்லாப் படங்களிலும் இடம்பெற்றாக வேண்டிய சட்டபூர்வமான அறிவிப்பு. விலங்குகளை ஏதேனும் ஒரு வகையில் துன்புறுத்தியதாகத் தெரிந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். விலங்குகள் பயன்படுத்தப்படும் படங்களில் இந்தச் சான்றொப்பம் அவசியம் இடம்பெற வேண்டும். அரசுக்கு விலங்குகள் மீது இத்தனை கரிசனமா என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் வண்டலூரில் நடப்பதைப் பார்த்தால் இது ஊருக்குத்தான் உபதேசம் என்று தோன்றுகிறது. வண்டலூரில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சில நாட்களுக்கு முன்னால் யானை ஒன்று இறந்தது. திடீரென்று ஏற்பட்ட உடல் நலக் குறைவினால் அது மரணம் அடைந்ததாகப் பூங்கா நிர்வாகம் அறிவித்தது. ஆனால் அந்த யானை சரியாகச் சாப்பிடாததே மரணத்திற்குக் காரணமாக அமைந்தது என அந்தச் செய்தி தெரிவித்தது. பூங்காவில் மிருகங்களுக்கு உணவிடுவதற்காகக் கொள்முதல் செய்யப்படும் மாமிசத்தின் அளவு ஒரு நாளைக்கு 80 கிலோதான். அதைத்தான் அங்குள்ள எல்லா மிருகங்களுக்கும் பகிர்ந்தளிக்கிறார்கள். அங்கிருக்கும் முதலையின் உணவுத் தேவை மட்டுமே 80 கிலோ மாமிசம் என்பதை கவனிக்க வேண்டும். இதில் மற்ற மிருகங்களுக்குக் கொடுத்த பிறகு முதலை சாப்பிடும் உணவு 2 கிலோ மட்டுமே. எல்லா மிருகங்களுக்கும் இதே கதிதான். கடல் கழுகு என்ற மிருகம் கடல் நீரில் மட்டுமே வாழும். இங்கே அதற்கு நீரே காண்பிக்கப்படுவதில்லை என்பது கண்ணில் நீரை வரவழைக்கிறது. இதெல்லாம் போதாதென்று இன்னொரு கொடூரமும் நடக்கிறது. ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் உயிரியல் பூங்காவுக்கு விடுமுறை. செவ்வாயன்று அங்கு யாரும் இருக்க மாட்டார்கள். திங்கட்கிழமை மதியம் சாப்பிடும் மிருகங்களுக்கு அடுத்தது புதன் மதியம்தான் உணவு வைக்கப்படுகிறது. அதுவரை கொலைப் பட்டினி. இது மிருக வதை இல்லை என்றால் வேறு எது மிருக வதை? அதிர்ச்சி தரும் இந்தத் தகவல்கள் அரசல் புரசலாகப் பேசப்படுபவை அல்ல. பிரபலமான நாளிதழில் வந்தவை. இந்தத் தகவல்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் இது மன்னிக்க முடியாத அலட்சியம் என்பதில் சந்தேகமில்லை. சரியாகப் பாதுகாக்க முடியாவிட்டால் அந்த விலங்குகளைக் காட்டில் விட்டுவிடலாம். மாபெரும் அறிவியல் பூங்கா என்னும் பெருமையைக் காப்பதற்காக விலங்குகளைப் பட்டினி போட்டுக் கொல்ல வேண்டாம்.

No comments:

Post a Comment