Saturday, November 24, 2012

தாக்கரே மறைவு ஏற்படுத்திய சலனம்

சிவசேனை கட்சித் தலைவர் பால் தாக்கரே கடந்த 17ஆம் தேதி மாலை காலமானார். 86 வயதான தாக்கரே, கடந்த சில மாதங்களாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். வருடந்தோறும் தசரா திருவிழாவின் போது தொண்டர்களிடையே உரையாற்றுவது அவரது வழக்கம். கடந்த மாதம் அவரால் நேரில் வரமுடியாததால் ஒளிப்படத்தில் தோன்றி பேட்டியளித்தார். அப்போது தனக்கு பின்னால் தனது மகனும் சிவசேனையின் தலைவருமான உத்தவ் தாக்கரேவுக்கும், பேரன் ஆதித்ய தாக்கரேவுக்கும் தொடர்ந்து ஆதரவு தருமாறு தொண்டர்களிடம் உருக்கமான வேண்டுகோள் விடுத்தார். அரசியல் கார்டூனிஸ்டாக வாழ்க்கையைத் துவக்கிய பால் தாக்கரே, 1966இல் சிவசேனைக் கட்சியை நிறுவினார். மேலும் ‘சாம்னா’ என்ற பத்திரிக்கையைத் துவக்கி அதன் மூலம் அரசியல் கருத்துக்களை தெரிவித்து வந்தார். கட்சி ஆரம்பித்த சில மாதங்களில் நடந்த மாநாட்டிலேயே 5 லட்சம் மக்கள் திரண்டார்கள். 1980களில் இருந்து சிவசேனைக் கட்சி தேர்தல் களத்தில் குதித்தது. 1990களில் பா.ஜ.க.வுடன் இணைந்து சிவசேனை ஆட்சியமைத்தது. சிவசேனையின் மனோகர் ஜோஷி முதல்வராகப் பதவியேற்றாலும் பால் தாக்கரே தான் நிஜ முதல்வர் என்ற பேச்சு கிளம்பியது. தீவிரமான மகாராஷ்ட்ர வெறியராகவும், அதே நேரத்தில் சிறந்த நாட்டுப்பற்றுமிக்கவராகவும் தாக்கரே விளங்கினார். தீவிர இந்துத்துவவாதியாகவும் அவர் திகழ்ந்தார். எந்த சமயத்திலும் தனது கொள்கையில் அவர் சமரசம் செய்துகொள்ளவில்லை. ‘மும்பை மாநகரம் மராட்டியருக்கே’ என்ற கோஷத்துடன் மும்பையில் கலவரம் ஏற்பட்டது. இதனால் ஏராளமான மக்கள் மும்பையை விட்டு வெளியேறும் சூழ்நிலை உருவானது. மேலும் 1993இல் மும்பையில் நடந்த இந்து-முஸ்லிம் கலவரத்துக்கு பால் தாக்கரேவின் உணர்ச்சியைத் தூண்டும் பேச்சுதான் காரணம் என்று ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் குற்றம்சாட்டியது. அருண் சால்வா போன்ற பல தாதாக்கள் சிவசேனையில் இணைந்ததால் அது தாதாக்களின் கட்சி என்று வர்ணிக்கப்பட்டது. ஒரு நேரத்தில் ‘மும்பை அனைவருக்கும் சொந்தம்’ என்று பேட்டியளித்தபோது சிவசேனையின் எதிர்ப்பை அவர் சந்திக்க நேரிட்டது. காஷ்மீர் பிரச்சினை தீரும்வரை பாகிஸ்தானுடன் கிரிக்கெட் உறவு கூடாது என்று வலியுறுத்தினார். காதலர் தினம் போன்ற அயல்நாட்டு கொண்டாட்டங்களை இந்தியாவில் கொண்டாட கடும் எதிர்ப்பு தெரிவித்தார். 25 வருடங்களுக்கு மேலாக பா.ஜ.க.வின் கூட்டணியில் சிவசேனை நீடித்து வருகிறது. மத்தியில் பா.ஜ.க. ஆட்சியில் இருந்த சமயத்தில் அவர்களுக்கு பால் தாக்கரே தொடர்ந்து சங்கடங்களை ஏற்படுத்தி வந்தார். 2007ஆம் ஆண்டு நடந்த இந்திய ஜனாதிபதி தேர்தலில் பைரோன்சிங் ஷெகாவத்தை ஆதரிப்பது என்ற தே.ஜ.கூட்டணியின் முடிவை மீறி மராட்டியர் என்பதால் காங்கிரஸ் வேட்பாளரான பிரதீபா பாட்டிலை சிவசேனை ஆதரித்தது. பால் தாக்கரே தனது அரசியல் வாரிசாக தனது மகன் உத்தவ் தாக்கரேவை தலைவராக அறிவித்தவுடன் கட்சியில் பிளவு ஏற்பட்டது. 2006இல் பால் தாக்கரேவின் தம்பி மகன் ராஜ் தாக்கரே கட்சியை உடைத்து மாகாராஷ்ட்ர நவநிர்மாண் சேனா என்ற கட்சியை நிறுவினார். அவரது கட்சியும் மும்பையில் வசிக்கும் பிற மாநிலத்தவர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்து வருகிறது. பால் தாக்கரேவின் மரணத்திற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங், அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்தார்கள். பால் தாக்கரே இறந்தபோது மும்பை மாநகரம் மயான அமைதியாக காட்சியளித்தது. அவர் இறக்கும் சில நாட்களுக்கு முன்னதாகவே பாதுகாப்பு ஏற்பாடுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டது. இந்த நிலையில் பால் தாக்கரேவின் மரணம் காரணமாக மும்பை நகரம் ஸ்தம்பித்து நின்றதை கண்டித்து சமூக வலைத்தளத்தில் கருத்து வெளியிட்ட ரேணு சிங், ஷகீன் தாஹா என்ற இரண்டு பெண்கள் மத உணர்வைப் புண்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு மும்பை போலிசாரால் கைது செய்யப்பட்டார்கள். இந்த கைது சம்பவம் பல்வேறு தரப்பினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment