Monday, February 25, 2013

திரை விமர்சனம் - ஹரிதாஸ்


அமர்க்களமான காதல் பாடல்கள் இல்லை, சிலிர்ப்பூட்டும் வசனங்கள் இல்லை, தேவையற்ற நகைச்சுவைகள் இல்லை, உபதேசங்கள் இல்லை என்று ஒரு படம் வந்தால் எப்படி இருக்கும் என்ற ஆதங்கம் பல ரசிகர்களுக்கு உண்டு. அதைப் பூர்த்தி செய்திருக்கிறது 'ஹரிதாஸ்' திரைப்படம். ஆட்டிஸம் பாதித்த மகனுக்கு என்ன சொல்லி புரிய வைப்பது? எப்படி புரியும்படி சொல்வது என்று திணறும் அப்பா, தனது உணர்வை அப்பாவிடம் சொல்ல முடியாமல் குதிரை மைதானத்திற்கு ஓடும் சிறுவன், தேறாது என்று தான் ஒதுக்கிய சிறுவன் தனக்கு முன்னாலேயே பயிற்சி எடுப்பதை அதிசயமாகப் பார்க்கும் ரன்னிங் கோச் என்று காட்சிகளே பேசும் தருணங்கள் அழகானவை. என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் சிவதாஸுக்கு (கிஷோர்) ஆதி என்ற ரவுடியைப் பிடிக்கும் பொறுப்பு தரப்படுகிறது. இந்த நேரத்தில் ஊரில் வசிக்கும் அம்மா இறக்க நேரிட, பாட்டியிடம் வசித்துவந்த மகன் ஹரிதாசை தன்னிடம் அழைத்துக்கொள்கிறார். ஹரிதாஸ் ஆட்டிஸம் என்ற நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறான். சிவதாஸ் மனைவியை இழந்தவர் என்பதால் மகனைத் தனியாக வலர்க்க வேண்டிய பொறுப்பு அவருக்கு. அவனைப் பள்ளியில் சேர்த்தால் கூடவே யாராவது இருந்து அவனுக்கு உதவி செய்தால்தான் சேர்த்துக்கொள்ள முடியும் என்று தலைமை ஆசிரியை கறாராகச் சொல்லிவிடுகிறார். அம்மா இல்லாத பையன் என்பதால் அப்பாவே அவனைப் பார்த்துக்கொள்ள விடுமுறை எடுக்கிறார். ஹரிதாசின் ஆசிரியை அமுதவல்லி (சினேகா) இதுபோன்ற சிறப்புக் கவனம் தேவைப்படும் குழந்தைகளைக் கையாண்ட அனுபவம் உள்ளவர். அவரது உதவி சிவதாஸுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறது. ஆனாலும் மகனைப் படிக்கவைக்கவோ அவன் வேலைகளை அவனையே செய்துகொள்ள வைக்கவோ அவரால் முடியவில்லை. இந்தச் சமயத்தில் நிகழும் ஒரு திருப்பத்தால் தனது மகனின் உள்ளார்ந்த இயல்பு என்ன என்பதைக் கண்டுபிடிக்கிறார். அது ஒரு புதிய திறப்பை அளிக்கிறது. இந்த நேரத்தில் ஆதியால் தனது நண்பன் கடத்தப்பட்டது தெரிந்து சிவதாஸ் மீண்டும் களம் இறங்க வேண்டியிருக்கிறது. மகனைப் பார்த்துக்கொள்வதற்கும் ஆதியை வேட்டையாடுவதற்கும் இடையே அவர் சிக்கிக்கொள்கிறார். இந்தச் சிக்கலின் முடிவு என்ன என்பது மீதிக்கதை. அர்த்தமுள்ள ஒரு கதையை எடுத்துக்கொண்டு அதற்கு ஏற்ற திரைக்கதையை அமைத்திருக்கும் ஜி.என்.ஆர். குமாரவேலனுக்குப் பாராட்டுக்கள். கதையின் ஆதாரமான தன்மையையும் பாத்திரங்களின் இயல்பையும் நுட்பமாகக் காட்சிப்படுத்தும் விதம் அற்புதம். அப்பாவும் மகனும் மழையில் நிற்கும் காட்சி, மகன் குதிரையோடு ஓடும் காட்சி என்று பல காட்சிகள் அழகாக உள்ளன. பையன் மீது பெரும் ஈடுபாடு கொண்ட ஆசிரியையின் மனதுக்குள் நடக்கும் மாற்றங்களும் அதற்கு சிவதாஸ் எதிர்வினை ஆற்றும் விதமும் மிகவும் பக்குவமாகக் கையாளப்பட்டிருக்கின்றன. மென்மையான காட்சிகளை மட்டுமில்லாமல் ரவுடிகளைத் தீர்த்துக் கட்டும் காவல்துறையினரின் அதிரடியான வழிமுறைகளையும் சிறப்பாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் குமாரவேலன். பல படங்களில் வில்லனாக வந்திருக்கும் கிஷோர் இந்தப் படத்தில் மகனுக்காகப் போராடும் தந்தையாகவும் தைரியமான போலீஸ் அதிகாரியாகவும் பிரகாசிக்கிறார். இதுபோன்ற வேடங்களை ஏற்ற அனுபவம் உள்ள சினேகா அமுதவல்லி டீச்சர் பாத்திரத்தில் பளிச்சிடுகிறார். நாசுக்காக காதலைச் சொல்லும் விதம் ரசிக்கவைக்கிற்து. ஆட்டிஸம் பாதித்த சிறுவனாக வரும் பிருத்விராஜ் தாசுக்கு இந்த படம் நல்ல அறிமுகம். மூளை பாதித்த சிறுவனாக வாழ்ந்திருக்கிறார். அவரை அற்புதமாக நடிக்க வைத்திருக்கும் இயக்குநரை அதற்காகவே மீண்டும் ஒரு முறை பாராட்டலாம். படம் அவ்வப்போது தொய்வடையும்போது தூக்கி நிறுத்த வேண்டிய பரோட்டா சூரியின் நகைச்சுவை அந்த அளவுக்கு வலுவாக இல்லை. யூகி சேதுவும், ராஜ் கபூரும் வரும் சில காட்சிகள் படத்திற்கு அர்த்தம் தருகின்றன. ரத்னவேலுவின் ஒளிப்பதிவு படத்தைக் கவிதையாக உணரச் செய்கிறது. விஜய் ஆண்டனியின் பாடல்களை விடவும் பின்னணி இசை நன்றாக உள்ளது. 'அன்னையின் கருவில்' என்ற பாடல் மனதில் நிற்கிறது. வலுவான கதையும் காட்சியமைபுகளும் இருந்தாலும் ஆங்காங்கே ஆவணப்படம் பார்க்கும் உணர்வு ஏற்படுவதைத் தவிர்த்திருக்கலாம். ஆட்டிஸம் பாதித்த சிறுவனைப் பைத்தியம் என்று ஒதுக்கும் சமூகத்தின் பொதுப் போக்கைக் காட்டும் காட்சிகள் தேவைதான். ஆனால் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் அது வருகிறது. இதுபோன்ற சிறுவர்களைப் பார்த்துக்கொள்ள்வதில் உள்ள சிரமங்களைச் சொல்வதற்கும் ஒரே மாதிரியான காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றைத் தவிர்த்திருக்கலாம். இதுபோன்ற சில நெருடல்கள் இருந்தாலும் வலுவான கதை, பொருத்தமான திரைக்கதை, அற்புதமான காட்சிப் படிமங்கள் ஆகியவை கொண்ட அர்த்தமுள்ள திரைப்படங்கள் தமிழில் வருவது அரிது. அத்தகைய அரிய படங்களில் ஒன்று ஹரிதாஸ்.

No comments:

Post a Comment