Wednesday, December 5, 2012
புனிதப் புரட்டு - பால.கௌதமன்
முதல் இந்தியர் புனிதர் ஆகிறார் !
மண்ணின் மைந்தர் புனிதராகிறார் !
கன்னியாகுமரி மாவட்டத்தில் அமர்க்களப் பிரச்சாரம்!
தேவசகாயம் பிள்ளை என்பவரை “புனிதர்” ஆக்குவதற்கான முதல் படியாக, அவரை “உயிர்த்தியாகி”” என்று போப்பாண்டவர் 2012-ம் வருடம் ஜூன் 28 அன்று அறிவித்தார். முன்னணிப் பத்திரிகைகள் இந்தச் செய்தியை தலைப்புச் செய்தியாக வெளியிட்டதுடன் ஏதோ இந்த அறிவிப்பால் இந்திய பூமியே புனிதப்பட்டு விட்டதாக எழுதத் தொடங்கிவிட்டன.
இந்தப் புனிதப் பட்டமளிப்பு விழாவின் நோக்கம் என்ன? இந்த வரலாறு உண்மைதானா?
யார் “உயிர்த்தியாகி”” ஆகிறார்?
பல ஆயிரம் கிலோமீட்டர்களுக்கு அப்பால் ஐரோப்பாவில் சாம்ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருக்கும் போப்பாண்டவருக்காக, மதமாற்றத்தில் ஈடுபட்டு நாட்டைப் பிடிக்கும் படையில் சேர்ந்து பின்னர் மரணமடைந்த ஓர் போர் வீரன் தான் இந்த உயிர்த்தியாகி என்கிறார் கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாதிரி டெர்டுலியன். "உயிர்த்தியாகத்தை மனமுவந்து புரியும் தியாகிகளின் தியாகமே, மற்ற மதத்தவர் கிறிஸ்துவராக மதம் மாறத் தூண்டுதலாக அமைகிறது." என்று சொல்லும் அவர், “உயிர்த்தியாகம் புரிந்தவர்களின் ரத்தம்தான், சர்ச்சின் விதையாகும் என்கிறார் [Source: http://en.wikipedia.org/wiki/Christian_martyrs )
இந்தப் பட்டமளிப்பின் நோக்கம் மதமாற்றமே! இதை மீண்டும் உறுதிப் படுத்துகிறார் போப் இரண்டாம் ஜான் பால். உறுதிப் படுத்துவதுடன் நின்று விடவில்லை, இந்த உயிர்த்தியாகிகளே வாட்டிகனின் நாடு பிடிக்கும் போர் வீரர்கள் என்று பெருமைப் படுத்தவும் செய்கிறார்.
முதல் ஆயிரம் ஆண்டுகளின் சர்ச்சானது, உயிர்த்தியாகம் புரிந்த தியாகிகளின் உதிரத்தால் உருவானது” என்றும், உயிர்த்தியாகம் புரிந்தவர்களின் பாரம்பரியத்தை மறந்து விடக் கூடாது என்றும் சொல்லும் போப் ஜான் பால் II, இந்தப் பெயர் அறியாத, யாரெனத் தெரியாத படை வீரர்களுக்கான அங்கீகாரத்தை, இறைப் பணியாகவே ஏற்று நடத்த ஊக்குவிக்கிறார்.
(source: http://www.martyrdevasahayam.org/RELEVANCE-OF-MARTYRDOM.php retrieved on 30.11.2012 )
இதில் கவனிக்க வேண்டிய வாசகம் என்னவென்றால் "முகம் தெரியாத படைவீரர்கள்" ("unknown soldiers" ) என்பதுதான்.
இந்த ”வீரர்கள்” இருப்பது எந்தப் படை? இது யாருக்காகப் போரிடும் படை? எந்த நாட்டைப் பிடிக்கிறது? எந்தப் பண்பாட்டை இது அழிக்கிறது? இதன் நோக்கம்தான் என்ன? மிருக நிலையிலிருந்து மனித நிலைக்கும் மனித நிலையிலிருந்து தெய்வ நிலைக்கும் ஒருவனை உயர்த்துவது சமயம். இந்த ஆன்ம நெறித் தத்துவத்தை ஏற்றால் அது சமயம். ஆனால், சமயம் என்ற போர்வையில் நாடு பிடிக்கும் இந்தக் கூட்டத்தை சமயத்துடன் ஒப்பிடுவது எந்த வகையில் நியாயம்?
மேலும், முன்பின் அறியாத நாடுகளுக்குச் சென்று, அந்த மண்ணின் மைந்தர்களை ஏமாற்றி, மிரட்டி, கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற முயலும்போது இந்தப் “படை வீரர்கள்”” தன்மானமுள்ள மண்ணின் மைந்தர்களால் கொல்லப்படுவதுண்டு. அவ்வாறு கொல்லப்பட்ட ஆக்கிரமிப்பாளர்களைத்தான் கிறிஸ்தவ நிறுவனங்கள் “உயிர்த்தியாகிகள்”” என்று முன் நிறுத்துகின்றன.
இதே போப் ஜான் பால் II, முதலாம் ஆயிரம் ஆண்டில் ஐரோப்பாவை மாற்றிவிட்டோம். இரண்டாவது ஆயிரமாண்டில் அமெரிக்காவை மாற்றினோம். நடக்கும் ஆயிரமாண்டில் ஆசியாவை மதம் மாற்றுவோம் என்று கொக்கரித்தது நினைவுகூரத் தக்கது. இந்த ஆன்ம அறுவடைக்காக கத்தோலிக்க சர்ச்சுக்கு டெர்டுலியன் பாதிரியார் சொன்னதுபோல், உயிர்த்தியாகிகள் தேவைப்படுகின்றனர். அதற்காக, கேரளா, தமிழகம், வட இலங்கை போன்ற பகுதிகளில் உயிர்த்தியாகிகள் உள்ளனரா என்று தோண்டியெடுக்கும் பணியில் சர்ச் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இதனை கோட்டார் மறைமாவட்டத்தினால் நிர்வகிக்கப்படும் வலைதளத்தில் கிறிஸ்துவர்களே ஒப்புக் கொண்டுள்ளனர்.
"இந்த உயிர்த்தியாகம் புரிந்தவர்களின் நினைவுகளை மறவாதிருக்க, அவர்களின் சாகஸத்துக்கான சான்றுகளையும், தியாகம் குறித்த தரவுகளையும் பதிவுகளாக்குவதே உகந்த வழி என்று அவர் (போப் ஜான் பால் II ) கருதுகிறார். ”
(source: http://www.martyrdevasahayam.org/RELEVANCE-OF-MARTYRDOM.php retreived on 30.11.2012)
இந்தத் தோண்டுதலில் சிக்கியவர் தான் வேதசாட்சி தேவசகாயம் பிள்ளை. கிறிஸ்துவத் திருச்சபைகளுக்குச் சொந்தமான வலைதளத்தில் தேவசகாயம் பிள்ளையின் “வரலாறு”” பின்வருமாறு சொல்லப்படுகிறது:
தேவசகாயம் பிள்ளை 1712-ம் ஆண்டு உயர் ஜாதியான நாயர் சமுதாயத்தில் நீலகண்டப் பிள்ளை என்ற பெயரில் பிறந்தார். பின்னர் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் பத்மநாபபுரம் அரண்மனையில் பணியாற்றினார். அப்போது மார்த்தாண்டவர்ம ராஜாவின் தளபதியான டச்சுக்காரர் டிலனாயுடன் தொடர்பு ஏற்பட்டது. அதன் விளைவாக அவர் கிறிஸ்தவத்தின் பால் ஈர்க்கப்பட்டார். 1745ம் ஆண்டு வடக்கன்குளம் சர்ச்சில் பௌட்டாரி என்ற பாதிரியாரால் கிறிஸ்துவராக மதம் மாற்றப்பட்டார். கிறிஸ்துவராக மதம் மாறியதும் தேவசகாயம் பிள்ளை என்ற பெயரை ஏற்றுக் கொண்டார். பின்னர் அவர், ஜாதி வேறுபாடுகளைக் கடந்து, அனைத்து தாழ்த்தப்பட்ட ஜாதியினருடனும் நெருங்கிப் பழகி, அந்த மக்களை கிறிஸ்துவ மதத்துக்கு மாற்றினார். இதனைப் பொறுத்துக் கொள்ளாத பிராமணர், நாயர் போன்ற ஆதிக்க சாதியினர் மன்னரைத் தூண்டி விட்டு, தேவசகாயம் பிள்ளை மீது அடுக்கடுக்காகப் பல புகார்களைச் சுமத்தினர். இதன் விளைவாக தேவசகாயம் பிள்ளை 1749, பிப்ரவரி 23ம் தேதி கைது செய்யப்பட்டார். 1749 முதல் 1752 வரை மூன்றாண்டு காலம் தேவசகாயம் பிள்ளை பலவிதமான சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டார். பிறகு, நாகர்கோவில் திருநெல்வேலி சாலையில் உள்ள ஆரல்வாய்மொழிக்கு அருகே காத்தாடி மலையில் மார்த்தாண்டவர்ம ராஜாவின் காவலர்களால் 1752ம் வருடம் ஜனவரி 14ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். (http://www.martyrdevasahayam.org & http://cbci.in/FullNews.aspx?ID=648 ) (Retrieved on 30.11.2012)
இந்த வரலற்றை வெளிக்கொணர்வதின் பயன் என்ன? கோட்டார் மறைமாவட்ட வலைதளம் அதை பின் வருமாறு தெளிவு படுத்துகிறது.
“கடந்த 259 ஆண்டு காலத்தில், இந்த இறை சேவகர் (தேவசகாயம் பிள்ளை) தமிழ்நாடு, தெற்கு கேரளம், வடக்கு இலங்கை ஆகிய பகுதி மக்களின் நினைவுகளில், வழிபாட்டில், ஆன்மீகத்தில், பிரார்த்தனையில் நீக்கமற நிறைந்திருப்பதன் காரணமாக, அவரை அந்தப் பகுதிகளின் ‘பெயரறியாத, முகம் தெரியாத படைவீரர்களோடு’ சேர்க்க முடியாது. ஆனால், சர்ச்சால் அங்கீகரிக்கப்படாத நிலையிலும், சர்ச்சின் அதிகாரப்பூர்வமான ஏற்பு நிலை இல்லாத சூழலிலும், இத்தகைய பொருள்பொதிந்த நிகழ்வை, சர்ச்சுக்கோ, சமுதாயத்துக்கோ பலனளிக்கும் வகையில் செயல்படுத்த முடியாது.”
(source: http://www.martyrdevasahayam.org/RELEVANCE-OF-MARTYRDOM.php retreived on 30.11.2012)
"இத்தகைய பொருள்பொதிந்த நிகழ்வை சர்ச்சுக்கோ சமுதாயத்துக்கோ பயனளிக்க” - அப்படி என்றால், தேவசகாயம் சர்ச்சுக்கான ஒரு வியாபாரப் பொருள். இதில் எந்த ஆன்மிக நோக்கமும் இல்லை என்பதை சர்ச்சே தெளிவு படுத்திவிட்டது.
எந்தப் பகுதிகளில் இவர் பயன்படுத்தப்படப் போகிறார்?
"தமிழ்நாடு,தெற்கு கேரளம்,வடக்கு இலங்கை ஆகிய பகுதி மக்களின் நினைவுகளில்,வழிபாட்டில்,ஆன்மீகத்தில்,பிரார்த்தனையில் நீக்கமற நிறைந்திருப்பதன் காரணமாக" என்கிறபகுதி விளங்கி விட்டது,ஆனால் எப்படி என்று தெரியுமா?இதன் மூலம் எந்த பண்பாட்டு அடையாளத்தை அழிக்கப்போகிறார்கள் என்று தெரியுமா? இதற்கான பதிலை நாகர்கோவிலில் டிசம்பர் 2 , 2012அன்று தேவசகாயம் பிளையை ஆசிர்வதிக்கப்பட்டவர் என்று அறிவித்த விழாவில் கிறிஸ்தவர்களே வெளிப்படுத்தியுள்ளனர்.
தேவசகாயம் பிள்ளை வேதசாட்சி நிலை அடைந்த ஜனவரி14ஆம் நாளை,தேவசகாயம் பிள்ளை திருவிழாவாகக் கோண்டாட,கார்டினல் அமடொ அனுமதி அளித்துள்ளார்.இதில் கவனிக்க வேண்டிய நாள்,ஜனவரி14.பெரும்பாலும் அன்றுதான்,தமிழகம்,வட இலங்கை மற்றும் தெற்கு கேரளத்தில் பொங்கல் பண்டிகை ஆண்டு தோரும் சிறப்பாகக் கொண்டாடப்படும்.சபரிமலை மகர ஜோதியும் அன்று தான் தோன்றுகிறது.
கத்தோலிக்க கிறிஸ்தவ பிஷப்புகளின் கூட்டமைப்பின் (CBCI) வலைதளம்,தேவசகாயம் பிள்ளை ஜனவரி14அல்லது15ல் கொல்லப்பட்டார் என்கிறது(http://cbci.in/FullNews.aspx?ID=648) (Retrieved on 30.11.2012).காரணம்,தை மாதப் பிறப்பு அவ்வப்போது ஜனவரி15ஆம் நாளும் வரும்.இதன் மூலம்,பொங்கல் பண்டிகைக்குள் ஊடுறுவி மதமாற்றம் செய்யும் திட்டம் தெளிவாகிறது.
பல கிறிஸ்தவப் பண்டிகைகள்,இவ்வாறு பல நாட்டு உள்ளூர் திருவிழாக்களை பின்பற்றி ஏற்பட்டவை. ஆனால் அந்தத் திருவிழாக்களின் காரணிகளும்,பண்பாட்டு அடையாளங்களும் இந்த கிறிஸ்தவர்களால் அழிக்கப்பட்டது என்பதற்கு வரலாறே ஒரு சாட்சி.இந்த வரலாற்று நிகழ்வுகளின் அடிப்படையில் பார்த்தால்,இந்த தேவசகாயம் பிள்ளை திருவிழா,பொங்கலின் பாரம்பரியத்தை அழிக்க வந்த சூழ்ச்சி என தெளிவாகிறது.
மதமாற்றம் மட்டுமல்லாமல் இதில் புதைந்திருக்கும் அரசியல் நோக்கத்தையும் ஒளிவு மரைவில்லாமல் வெளிப்படையாக்குகிறது கோட்டார் மறை மாவட்ட இணையதளம். அதில் பின்வருமாறு கூறப்பட்டிருக்கிறது:
லூர்தில் ஜான் பால் II நிகழ்த்திய உரையின் போது, அவர் உலகெங்கும் பரவி வரும் புதிய வகை சமய ரீதியான கொடுமை குறித்துப் பேசினார். இது இந்தியாவில் இன்று உண்மையாக இருக்கிறது. ஹிந்து அடிப்படைவாதிகளால் இன்று, கிறிஸ்தவர்களுக்கு எதிரான சூழல் நிலவுகிறது, இவர்களை சில அரசியல் அமைப்புகள் தங்கள் அரசியல் லாபங்களுக்காக முழுமையாக ஆதரிக்கிறார்கள். இந்திய சர்ச் ஏற்கெனவே “கொடுமையை எதிர்நோக்கும் காலத்தை” சந்திப்பதைப் போல இருக்கிறது.”
(Source: http://www.martyrdevasahayam.org/RELEVANCE-OF-MARTYRDOM.php retreived on 30.11.2012)
அரசியலுடன் நின்றுவிடாமல், கிறிஸ்துவம் புகும் நாடுகளின் மண்ணின் வாசனைக்கேற்ப பல அவதாரங்களை எடுத்து, உள்நாட்டு மக்களை மதம் மாற்றி, அவர்கள் பண்பாட்டில் இருந்து அவர்களைப் பிரித்து, சர்ச்சின் ஆதிக்கத்தின் கீழ் அவர்களை கொண்டு வரும் சூழ்ச்சியானது இந்த தேவசகாயம் பிள்ளை உயிர்த்தியாக பட்டமளிப்பின் மூலம் நிறைவேற்றப்படும் என்று கோட்டார் மறை மாவட்ட வலைதளம் தன் இயல்பை பின்வருமாறு வெளிக்காட்டுகிறது:
இந்த உயிர்த்தியாகத்தை இன்று பொருள் உள்ளதாக ஆக்கும் வேறு ஒரு விஷயம் என்னவென்றால், Ad Gentes சர்ச்சின் நோக்கத்தில் பாமர மக்கள் ஆற்ற வேண்டிய பங்குதான்! பாமர மக்கள் சர்ச்சை சார்ந்தவர்கள்” மட்டுமல்லர், உண்மையிலேயே, அவர்கள்தான் சர்ச்சும்கூட”. எனவேதான் பாமர மக்களின் கலாசாரங்களை உள்வாங்கிக் கொள்வது பற்றிப் பேசுவது, இயல்பான ஒன்றாக இருக்கிறது. ஏனென்றால், உலகில், சர்ச்சின் இயல்பே மதத்தைப் பரப்புவது ! அதே போல சர்ச்சின் மத விரிவாக்கம் என்பது, சர்ச்சின் இயல்பான ஒன்றாகவே வெளிப்படுகிறது”.
(source: http://www.martyrdevasahayam.org/RELEVANCE-OF-MARTYRDOM.php retreived on 30.11.2012)
இப்படி மதமாற்ற நோக்கத்துக்காகவே ஏற்படுத்தப்பட்ட இந்தப் பட்டமளிப்புகள் எல்லாம் ஏதோ ஒரு உண்மையான வரலாற்றின் அடிப்படையில்தான் உருவானது என்று பெருவாரியான அறிஞர்கள் நினைக்கக் கூடும். அதிலும் மண்ணின் மைந்தர், பாமரன், பாட்டாளி என்ற சொற்களையும் சேர்த்துவிட்டால், அந்தந்த ஊர்காரர்கள் பரவசமடைந்து விடுவார்கள்; உண்மையை அறிய நாட்டம் கொள்ள மாட்டார்கள் என்பது சர்ச்சுக்கு நன்றாகவே தெரிந்த விஷயம். ஆனால், ஆராய்ந்து பார்க்கும்போது இந்த மண்ணின் மைந்தரின் கதை உண்மைக்குப் புறம்பானது என்பது நமக்குத் தெரியவருகிறது.
புகழ்பெற்ற கேரள வரலாற்று ஆசிரியரான திரு. ஏ.ஸ்ரீதர மேனன் 20.1.2004 அன்று பயனிர் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், "மரண தண்டனையை விட்டுவிடுங்கள், திருவிதாங்கூர் வரலாற்றில் மதமாற்றத்தின் பெயரால் ஒரு சிறு தண்டனை வழங்கப்பட்டதாகக்கூட பதிவு செய்யப்படவில்லை. இது இட்டுக்கட்டப்பட்ட ஒரு கற்பனைக் கதையே." என்று ஆதார பூர்வமாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்தின் (ICHR) தலைவராக இருந்த திரு.எம்.ஜி.எஸ்.நாராயணன் அவர்கள், நீலகண்டம்பிள்ளை என்ற பெயரிலோ தேவசகாயம்பிள்ளை என்ற பெயரிலோ மார்த்தாண்டவர்ம மகாராஜா காலத்தில் ஒரு ராணுவத் தளபதி இருந்ததில்லை என்று வாதிடுகிறார்.
திருவிதாங்கூர் வரலாற்றை எழுதிய திரு.நாகம் ஐயா, இந்தக் கதை நம்பும்படியாக இல்லை என்றும், மதம் மாறியவர்கள் அவர்கள் முன்னோர்களை குருமார்களாக சித்திரிக்கும் பழக்கம் நம் நாட்டில் வழக்கம்; அதனடிப்படையில்தான் இந்தக் கதை புனையப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார். (Travancore Manual Vol II page 129-130, M.Nagam Aiya)
இந்தக் கதையில் கிறிஸ்துவர்கள் திருவிதாங்கூர் மன்னரால் கொடுமைப்படுத்தப் பட்டார்கள் என்பதை நிலை நிறுத்த கற்பனையாளர்கள் பெருமுயற்சி எடுத்துள்ளனர். ஆனால், வரலாற்றுப் பதிவுகள் என்ன சொல்கிறது?
மதம் மாறியதற்காக தேவசகாயம்பிள்ளை மார்த்தாண்ட வர்ம ராஜாவால் கொல்லப்பட்டார் என்று குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்படும் மார்த்தாண்டவர்ம ராஜா, வரப்புழா சர்ச்சுக்கு வரியில்லா நிலம் கொடுத்து உதவினார். (Travancore Manual, Vol-I page 16, T.K.Veluppillai)
டச்சுக்காரர் திலனாயால் கிறிஸ்துவத்தின்பால் தேவசகாயம்பிள்ளை ஈர்க்கப்பட்டார் என்று கிறிஸ்துவர்கள் கதை சொல்லுகின்றனர் . அந்த டச்சுக்காரர் திலனாய்க்காக கார்த்திகைத் திருநாள் மகராஜா உதயகிரிக் கோட்டை சர்ச்சைக் கட்டினார் என்றும் அந்த சர்ச் பாதிரிக்கு 100 பணம் மாதச் சம்பளமாகக் கொடுத்தார் என்றும் திரு. டி.கே.வேலுப்பிள்ளை திருவிதாங்கூர் வரலாற்றில் குறிப்பிடுகிறார். (Travancore Manual, Vol-I page 16, T.K.Veluppillai)
இந்த மன்னர்கள் மதத் துவேஷம் கொண்டவர்களாக இருந்திருந்தால் இந்து ஆலயங்களை நிர்வகிக்கும் தேவஸ்வம் போர்டை நிர்வகிக்கும் பொறுப்பை ஐரோப்பிய கிறிஸ்துவர்களான மன்றோ அவர்களுக்குக் கொடுத்திருப்பார்களா?
நீலகண்டப் பிள்ளை மதமாறியதாகச் சொல்லப்பட்ட காலகட்டத்தில் கத்தோலிக்கர்களும்,பிரட்ஸ்டண்ட்களும் ஐரோப்பாவிலும்,பிற பகுதிகளிலும் எப்படி மோதிக்கொண்டனர் என்பது வரலாறு படித்தவர்களுக்குத் தெரியும்.
இந்த டச்சுக்காரர்கள் கொச்சி கோட்டையை கைப்பற்றியவுடன், வாஸ்கோடகாமாவை அடக்கம் செய்திருந்த “புனித அண்டோனியோ கத்தோலிக்க சர்ச்சை” “புனித ஃபிரான்ஸிஸ் பிராடஸ்டண்ட் சர்ச்” என்று மாற்றினர்.இன்றும் அந்த சர்ச் பிராட்ஸ்டண்ட் பிரிவான தென் இந்தியத் திருச்சபையின்(CSI)கீழ் உள்ளது.டச்சுக்காரரான டிலனாய் ஒரு பிராடஸ்டண்ட் கிறிஸ்தவர்.இவரது உதயகிரி சர்ச்,பிராடஸ்டண்ட் சர்ச்சாகத் தான் நிர்வகிக்கப்பட்டு வந்தது.மேலும்,டச்சுக்காரக்கள் அனைவரும் மதமாற்றத்தை அங்கீகரிக்கும் உரிமையையும் பெற்றிருந்தனர்.இப்படியிருக்க,நீலகண்டப் பிள்ளையை டிலனாய் ஏன் ஞானஸ்நானத்திற்காக கத்தோலிக்க சபைக்கு அனுப்ப வேண்டும்?அதுவும் அரசரின் தளபதி!தளபதியால் மதமாற்றப்பட்டால் லாபம் உண்டு.அதிகாரமில்லாத சர்ச்சால் மாற்றப்பட்டால் உயர் ஜாதி நீலகண்டப் பிள்ளைக்கு என்ன லாபம்?
எனவே இந்த “தேவசகாயம் பிள்ளை” கதையைக் கட்டியவர்களுக்குதிருவிதாங்கூர் அரசியல்-சமூக சூழலும் தெரியாது,ஐரோப்பிய சூழலும் தெரியாது என்பது தெளிவாகிறது.
திருவிதாங்கூர் படையில் மார்த்தாண்ட வர்ம ராஜா காலத்தில் ஈழவர்கள், கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள் இருந்தனர் என்று கர்னல் வில்க்ஸ் தெரிவித்ததை திரு. வேலுப்பிள்ளை மேற்கோள் காட்டுகிறார். (Travancore Manual, Vol-IV page 122, T.K.Veluppillai)
இந்திய வரலாற்று ஆசிரியர்கள் இந்துக்களுக்குச் சாதகமாகத்தான் எழுதுவார்கள், அதனால் இதை ஏற்க முடியாது, என்று கிறிஸ்துவர்கள் சொல்கிறார்கள். ஆனால் கிறிஸ்துவ சர்ச் பாதிரிகள் சொல்வதை மட்டும் வரலாறாக நாம் ஏற்க வேண்டுமாம்! இதுதானே கிறிஸ்துவர்களின் நியாயம்.
சரி... அவர்கள் நியாயத்துக்கே வருவோம். ஜூலை 2 , 1774ல் போப் கிளமண்ட் XIV திருவிதாங்கூர் ராஜாவுக்கு எழுதிய கடிதத்தில், "திருவிதாங்கூரில் இருக்கும் கத்தோலிக்க திருச்சபையின் அங்கத்தினர் மீது மன்னர் செலுத்திவரும் பரிவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். (Travancore Manual vol-I page 387, M.Nagam Aiya),
போப் கிளமண்ட் XIV பொய் சொல்கிறாரா? போப் ஜான்பால் II பொய் சொல்கிறாரா? கோட்டார் மறைமாவட்டம் பொய் சொல்கிறதா? அல்லது தற்போதைய போப் பெனடிக்ட் பொய் சொல்கிறாரா?
தேவசகாயம் பிள்ளையை கிறிஸ்துவத்தின் பால் ஈர்த்த டிலனாய்க்காக, அஞ்சங்கோ தளபதியை எதிர்த்து மார்த்தாண்ட வர்மா மகாராஜா போர் தொடுத்தார்... என்ன காரணம் தெரியுமா? அஞ்சங்கோ தளபதியின் மகள் மீது டிலனாய் ஆசைப்பட்டு விட்டாராம். (Travancore Manual Vol II page 130, M.Nagam Aiya)
இப்படி உற்ற நண்பனாக இருந்த டிலனாயின் நண்பரை மதமாற்றக் குற்றத்துக்காக மார்த்தாண்ட வர்ம ராஜா கைது செய்து கொடுமைப் படுத்தி சுட்டுக் கொன்றாராம்.. இதை நாம் நம்ப வேண்டுமாம்!
இன்னும் சொல்லப்போனால் அந்த கிறிஸ்துவக் கதையில் டிலனாயுடன் தேவசகாயம் பிள்ளை நெருங்கிப் பழகுவதை மகாராஜாவின் அமைச்சரான ராமய்யன் தளவாய் விரும்பவில்லை என்றும், தேவசகாயம் பிள்ளை மீது ராமய்யன் தளவாயின் கோபத்துக்கு இது ஒரு காரணம் என்றும், அதனால் தான் ராமய்யன் தளவாயின் பழிவாங்கும் வெறி அதிகமானது என்றும் கிறிஸ்துவர்கள் தெருக்கூத்து நாடகத்தில் பாடி வருகிறார்கள்.
திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் மரண தண்டனை பொதுவாக ராஜதுரோகக் குற்றம், கொலை, வழிப்பறி போன்ற குற்றங்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. (Travancore Manual, Vol-IV page 77, T.K.Veluppillai).
இந்த அடிப்படையில் திரு.நாகம் ஐயா அவர்களின் திருவிதாங்கூர் சரித்திரத்தை நாம் கவனிக்க வேண்டும்.
நீலகண்டப் பிள்ளையின் மீது அரசு ஆவணங்களை திருடிய குற்றச்சாட்டின் அடிப்படையில், தண்டனை வழங்கப்பட்டிருக்கலாம். இது, அவர் மதம் மாறிய சில ஆண்டுகளுக்குப் பின்னர்தான் நடந்திருக்க வேண்டும். இந்த தண்டனைக்கும் மதம் மாற்றத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. (Travancore Manual Vol-II page 130, M.Nagam Aiya)
இந்தக் குற்றச்சாட்டு மதமாற்றத்துடன் நின்றுவிட்டால் இத்துடன் நாமும் நின்றுவிடலாம். “கீழ் ஜாதியினருடன் அவர் பழகியதன் காரணமாகத்தான் மேல் ஜாதியினர் அவர் மீது வெறுப்புற்றனர், அதனால் இவர் கொல்லப்பட்டார்”” என்று ஒரு ஜாதி அரசியலும் இந்தக் கதையில் இடம்பெற்றுள்ளது.
ஜாதி பேசி ஹிந்து சமுதாயத்தைப் பிரித்து மதம் மாற்றும் தொடர் சூழ்ச்சியை இந்தக் கதையிலும் சர்ச்சு லாகவமாகப் புகுத்தியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுக்கு ஏற்றார்போல் ஒரு போலியான ஆதாரம்கூட சர்ச்சால் காட்டப்படவில்லை. தீண்டாமை ஒழிப்பில் கத்தோலிக்க சர்ச்சின் சேவையை புரிந்துகொள்ள வேண்டும் என்றால் போப் கிரிகோரிXV யின் புல்லா ரொமனே செடிஸ் அன்டிஸ்டிடிஸ் (Bulla Romanae Sedis Antistitis) என்ற ஜனவரி 31, 1623 தேதியிட்ட ஆணையில் இந்திய சர்ச்சுகளில் ஜாதீய சம்பிரதாயங்களுக்கு அனுமதி வழங்கினார் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
(ref: http://indiainteracts.wordpress.com/tag/christian-caste-system/ )
இது நீலகண்டப் பிள்ளை மதம் மாறுவதற்கு சுமார் 120 ஆண்டுகள் முன்புதான். இதுவரை இந்த ஆணை திரும்பப் பெறவோ மாற்றப்படவோ இல்லை. இதனால் இந்திய சர்சுகளில் இன்றும் தீண்டாமை தலைவிரித்து ஆடுகிறது. ஆட்டுக்காக ஓநாய் அழும் கதையைப் பார்த்தீர்களா? ஏன், இந்த தேவசகாயம் பிள்ளை மதம் மாறியதாக சொல்லப்பட்ட வடக்கன் குளத்திலேயே, வெள்ளாள கிறிஸ்துவர்களும் ஒடுக்கப்பட்ட கிறிஸ்துவர்களும் ஒரே சர்ச்சுக்குச் செல்லமாட்டோம் என்று சொல்லி தனித்தனியாக அமரவில்லையா? ஜாதீய வேறுபாடுகளை ஒழித்துவிட்டோம் என்று மார்தட்டும் கிறிஸ்தவம், தேவசகாயம் பிள்ளையின் சொந்த சர்ச்சிலேயே இந்த நிலைமையை எப்படி அனுமதித்தது?
தியாகங்கள் மதிக்கப்படவேண்டும்! ஆவணமாக்கப்பட வேண்டும் போற்றப்பட வேண்டும், முன்னுதாரணமாக வேண்டும்! எப்போது? அது தியாகமாக இருந்தால்! அது உண்மையாக இருந்தால்!
இங்கோ நடக்காத சம்பவம் ஒன்று, நடந்ததாகக் கதை கட்டப்பட்டு, அதற்கு சமுதாயச் சீர்திருத்தம் போன்ற சாயம் பூசப்பட்டு, அப்பாவிகளை நம்பவைத்து ஏமாற்ற ஒரு அக்மார்க் முத்திரையை வாடிகன் வழங்கியுள்ளது. (போப் வழங்கியுள்ளார்). ஒரு பொறுப்பான, பல மதங்கள் சுமூகமாக வாழுகின்ற நாட்டில் உள்நோக்கத்துடன் கட்டுக் கதைகளுக்கு வரலாற்று அங்கீகாரம் கொடுப்பது போப்புக்கு அழகா?
இந்தப் படைவீரர்களை “தியாகிகள்”” என்று கௌரவித்து ஒரு சமுதாயத்தின் பண்பாட்டையும் ஒரு நாட்டின் பாரம்பரியத்தையும் அழிப்பது சமயமா? சாகசமா?
இந்தக் கேள்விகள் எல்லாம் போப்பிடம் கேட்பதில் எந்த அர்த்தமும் இல்லை. கிறிஸ்துவப் படை வீரர் போப்பின் ஆட்சியை நிலைநாட்ட இறந்து போனால் அவர் உயிர்த்தியாகி. அதே படைவீரர் ஆக்கிரமிக்கும் நாடுகளில் உள்ளவர்களின் உயிரை எடுத்தால் அவர் புனிதர். இது தானே கிறிஸ்தவம்?
பாரதத்தில் உயிருடன் தீயிட்டுக் கொளுத்தி பலவிதமான சித்ரவதைகளை மதம் மாற மறுப்பவர்களுக்கு அளிக்கும் நிறுவனமான ஹவுஸ் ஆஃப் இன்க்விஸிஷன் (House of inquisition) நிறுவப்படவேண்டும் என்று கடிதம் எழுதியவர் ’புனித’ ஃபிரான்ஸிஸ் சேவியர், அதன் மூலம் பல்லாயிரக் கணக்கான அப்பாவிகளின் உயிரை பலிவாங்கிய கோவா ஹவுஸ் ஆஃப் இன்க்விஸிஷனை (Goa house of Inquisition) நிறுவ மன்னர் ஜான்-III க்கு 1545ல் கடிதம் எழுதியவர் ஃபிரான்ஸிஸ் சேவியர். (http://en.wikipedia.org/wiki/Goa_Inquisition ) இன்று ஃபிரான்ஸிஸ் சேவியர் புனிதர்! இவர் பெயரில் கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாரில் ஒரு தேவாலயம்! தமிழகத்தின் பிற பகுதியிலும் வட இலங்கையிலும் பல தேவாலயங்கள் !
இன்று இந்த தேவசகாயத்தைப் புனிதராக அறிவிக்க வேண்டும் என்று துடிப்பதும் இந்தக் கோட்டார் மறை மாவட்டமே. ஆச்சரியப் படுவதற்கு ஒன்றுமில்லை! இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் கணிசமான அளவு இந்துக்கள், கிறிஸ்துவர்களாக மதம் மாறியுள்ளனர்.
இன்று தென் தமிழகத்தில், ஐரோப்பிய அமெரிக்க நாடுகளுக்கு ஆதரவாக வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் பல பிரசாரங்களும், நம் நாட்டிற்கு எதிராக சூழ்ச்சியும் நடைபெறுகின்றன. போப்புக்காக கொலை செய்தவர் கணிசமான இந்துக்களை தென் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் மாற்றிவிட்டார். மீதமுள்ள இந்துக்களை மாற்ற போப்புக்காக கொலையுண்ட (?) கிறிஸ்துவ வீரரை தயாராக்குகிறது கிறிஸ்துவ சர்ச்.
இந்த கிறிஸ்துவ நோக்கத்துக்காக நம் நாட்டு மன்னர் மத வெறியனாக்கப்பட்டுள்ளார். நம் சமுதாயம் பிற்போக்குச் சமுதாயமாக ஜோடிக்கப்பட்டுள்ளது. இந்துக்கள் ஈவு இரக்கமற்ற இரத்தக் காட்டேறிகளாக சித்திரிக்கப்பட்டுள்ளனர். வரலாற்று மோசடி நடத்தப்பட்டுள்ளது. விளைவு- மண்ணின்மைந்தர் தியாகி, புனிதர் என்ற ஜால வார்த்தைகளால் மண்ணின் மைந்தன் ஏமாற்றப்படுகிறான்.
இந்த மாதிரியாகக் கட்டுக்கதைகளைப் புனைந்து வரலாற்று மோசடிகளில் ஈடுபடுவது சர்ச்சுக்கு கைவந்த கலை. தமிழ்நாட்டிலேயே இதற்கு சான்று உண்டு. மயிலைக் கடற்கரையில் வந்திறங்கிய புனித தாமஸ் கதைதான் அது. வரலாற்றில் இல்லாத “தாமஸ்”” என்கிற மனிதனை உருவாக்கி அவனை சென்னையில் தங்கவைத்து அவன் ஒரு பிராம்மணப் புரோகிதரால் கொல்லப்பட்டான் என்று கட்டுக்கதை புனைந்து, அவனுடைய எலும்புக்கூட்டின் ஒரு பகுதி இன்றைய சாந்தோம் தேவாலயத்தில் இருக்கிறது என்கிற புளுகுமூட்டைகளையும் அதில் சேர்த்து வைத்த கத்தோலிக்க சர்ச்சுக்கு தென் தமிழகத்தில் மற்றொரு கதை புனையவா தெரியாது?
”புனித தாமஸ்”” போன்ற புனைவுதான் “தேவசகாயம்”” வரலாறும். உண்மையில் சொல்லப்போனால் ஏசு என்று ஒருவர் இருந்ததற்கே இவர்களிடம் ஆதாரம் கிடையாது. அதனால் தான் தற்போதய போப் திரு பெனெடிக்ட், “ஏசுநாதர், நாம் நினைத்ததை விட சுமார் 200 முதல் 500 ஆண்டுகளுக்கு முன் பிறந்திருக்கலாம்” என்கிறார். அப்படியென்றால், ஏசு பிறப்பை சுமார் 2050 ஆண்டு என்ற அடிப்படையில் சர்ச்சால் நிரூபிக்கப்பட்ட சாகசங்கள் புளுகுமூட்டைகள்! ஆக, இவர்களுடைய மொத்த சரித்திரமே புனைவுதான்.
மூவேந்தரும் கடையேழு வள்ளல்களும் போற்றிப் பின்பற்றி வந்த மரபை அழித்தொழிக்கும் வாடிகன் படைவீரர்களுக்கு, நாடுபிடிக்கும் நோக்கத்துடன் நடத்தப்படும் பாராட்டும் விருதும் நம் தமிழகத்தில் நடைபெறுவது முறைதானா? இனவுணர்வைப் பற்றி வாய்கிழியப் பேசும் அறிவுஜீவிகளும் அரசியல்வாதிகளும் இந்த இழி செயலுக்கு துணைபோவது சரிதானா?
தமிழ் மீதும் பண்பாடு மீதும் பற்றுள்ளவர்கள் இந்தப் புனிதப் புரட்டை முறியடிக்க அணிதிரள வேண்டும்!
Sunday, November 25, 2012
மிருக வதைப் பூங்கா
Saturday, November 24, 2012
தாக்கரே மறைவு ஏற்படுத்திய சலனம்
சிவசேனை கட்சித் தலைவர் பால் தாக்கரே கடந்த 17ஆம் தேதி மாலை காலமானார். 86 வயதான தாக்கரே, கடந்த சில மாதங்களாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். வருடந்தோறும் தசரா திருவிழாவின் போது தொண்டர்களிடையே உரையாற்றுவது அவரது வழக்கம். கடந்த மாதம் அவரால் நேரில் வரமுடியாததால் ஒளிப்படத்தில் தோன்றி பேட்டியளித்தார். அப்போது தனக்கு பின்னால் தனது மகனும் சிவசேனையின் தலைவருமான உத்தவ் தாக்கரேவுக்கும், பேரன் ஆதித்ய தாக்கரேவுக்கும் தொடர்ந்து ஆதரவு தருமாறு தொண்டர்களிடம் உருக்கமான வேண்டுகோள் விடுத்தார்.
அரசியல் கார்டூனிஸ்டாக வாழ்க்கையைத் துவக்கிய பால் தாக்கரே, 1966இல் சிவசேனைக் கட்சியை நிறுவினார். மேலும் ‘சாம்னா’ என்ற பத்திரிக்கையைத் துவக்கி அதன் மூலம் அரசியல் கருத்துக்களை தெரிவித்து வந்தார். கட்சி ஆரம்பித்த சில மாதங்களில் நடந்த மாநாட்டிலேயே 5 லட்சம் மக்கள் திரண்டார்கள். 1980களில் இருந்து சிவசேனைக் கட்சி தேர்தல் களத்தில் குதித்தது. 1990களில் பா.ஜ.க.வுடன் இணைந்து சிவசேனை ஆட்சியமைத்தது. சிவசேனையின் மனோகர் ஜோஷி முதல்வராகப் பதவியேற்றாலும் பால் தாக்கரே தான் நிஜ முதல்வர் என்ற பேச்சு கிளம்பியது.
தீவிரமான மகாராஷ்ட்ர வெறியராகவும், அதே நேரத்தில் சிறந்த நாட்டுப்பற்றுமிக்கவராகவும் தாக்கரே விளங்கினார். தீவிர இந்துத்துவவாதியாகவும் அவர் திகழ்ந்தார். எந்த சமயத்திலும் தனது கொள்கையில் அவர் சமரசம் செய்துகொள்ளவில்லை. ‘மும்பை மாநகரம் மராட்டியருக்கே’ என்ற கோஷத்துடன் மும்பையில் கலவரம் ஏற்பட்டது. இதனால் ஏராளமான மக்கள் மும்பையை விட்டு வெளியேறும் சூழ்நிலை உருவானது. மேலும் 1993இல் மும்பையில் நடந்த இந்து-முஸ்லிம் கலவரத்துக்கு பால் தாக்கரேவின் உணர்ச்சியைத் தூண்டும் பேச்சுதான் காரணம் என்று ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் குற்றம்சாட்டியது. அருண் சால்வா போன்ற பல தாதாக்கள் சிவசேனையில் இணைந்ததால் அது தாதாக்களின் கட்சி என்று வர்ணிக்கப்பட்டது. ஒரு நேரத்தில் ‘மும்பை அனைவருக்கும் சொந்தம்’ என்று பேட்டியளித்தபோது சிவசேனையின் எதிர்ப்பை அவர் சந்திக்க நேரிட்டது. காஷ்மீர் பிரச்சினை தீரும்வரை பாகிஸ்தானுடன் கிரிக்கெட் உறவு கூடாது என்று வலியுறுத்தினார். காதலர் தினம் போன்ற அயல்நாட்டு கொண்டாட்டங்களை இந்தியாவில் கொண்டாட கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
25 வருடங்களுக்கு மேலாக பா.ஜ.க.வின் கூட்டணியில் சிவசேனை நீடித்து வருகிறது. மத்தியில் பா.ஜ.க. ஆட்சியில் இருந்த சமயத்தில் அவர்களுக்கு பால் தாக்கரே தொடர்ந்து சங்கடங்களை ஏற்படுத்தி வந்தார். 2007ஆம் ஆண்டு நடந்த இந்திய ஜனாதிபதி தேர்தலில் பைரோன்சிங் ஷெகாவத்தை ஆதரிப்பது என்ற தே.ஜ.கூட்டணியின் முடிவை மீறி மராட்டியர் என்பதால் காங்கிரஸ் வேட்பாளரான பிரதீபா பாட்டிலை சிவசேனை ஆதரித்தது.
பால் தாக்கரே தனது அரசியல் வாரிசாக தனது மகன் உத்தவ் தாக்கரேவை தலைவராக அறிவித்தவுடன் கட்சியில் பிளவு ஏற்பட்டது. 2006இல் பால் தாக்கரேவின் தம்பி மகன் ராஜ் தாக்கரே கட்சியை உடைத்து மாகாராஷ்ட்ர நவநிர்மாண் சேனா என்ற கட்சியை நிறுவினார். அவரது கட்சியும் மும்பையில் வசிக்கும் பிற மாநிலத்தவர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்து வருகிறது.
பால் தாக்கரேவின் மரணத்திற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங், அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்தார்கள்.
பால் தாக்கரே இறந்தபோது மும்பை மாநகரம் மயான அமைதியாக காட்சியளித்தது. அவர் இறக்கும் சில நாட்களுக்கு முன்னதாகவே பாதுகாப்பு ஏற்பாடுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டது. இந்த நிலையில் பால் தாக்கரேவின் மரணம் காரணமாக மும்பை நகரம் ஸ்தம்பித்து நின்றதை கண்டித்து சமூக வலைத்தளத்தில் கருத்து வெளியிட்ட ரேணு சிங், ஷகீன் தாஹா என்ற இரண்டு பெண்கள் மத உணர்வைப் புண்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு மும்பை போலிசாரால் கைது செய்யப்பட்டார்கள். இந்த கைது சம்பவம் பல்வேறு தரப்பினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ராகுலை மக்கள் ஏற்பார்களா?
வரும் 2014ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலை சந்திக்க காங்கிரஸ் கட்சி தயாராகி வருகிறது. அதற்கு ஆயுத்தமாவதற்காக காங்கிரஸ் தேர்தல் பணிக்குழுவை நியமித்துள்ளது. அதன் தலைவராக காங்கிரஸ் பொது செயலாளர் ராகுல் காந்தி பொறுப்பேற்றுள்ளார். இந்த நியமனம் வரும் தேர்தலில் காங்கிரசை கரையேற்றுமா அல்லது வீழ்த்தி விடுமா என்பது தேர்தல் முடிவில் தெரிந்துவரும்.
கடந்த 2004ஆம் தேர்தல் முடிந்தவுடன் காங்கிரஸ் ஆட்சியமைத்தது. பிரதமர் பதவிக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி பிரதமராக முயற்சி செய்தார். ஆனால் கடைசி நேரத்தில் பின்வாங்கிய சோனியா காந்தி மன்மோகன் சிங்கை பிரதமராக முமொழிந்தார். அப்போது எம்.பி.யாக இருந்த ராகுல் காந்தி மத்திய அமைச்சரவையில் சேர மறுத்தார். ஆனால் காங்கிரசை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் அவரை விடுவதாக இல்லை. தொடர்ந்து பிரதமர் பதவியேற்க வலியுறுத்தி வருகிறார்கள்.
2009இல் இரண்டாவது முறையாக காங்கிரஸ் ஆட்சி பொறுப்பேற்றபோது ராகுல் காந்தியை பிரதமராக பதவியேற்குமாறு கேட்டுக் கொண்டார்கள். ஆனால் ராகுல் மறுத்துவிட்டார். கடந்த 3 வருடங்களாக ஆட்சியில் நடந்துள்ள ஏராளமான ஊழல்கள் வெளிவந்து காங்கிரஸ் தலைமைக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளன. அண்ணா ஹசாரே உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் மத்திய அரசின் ஊழலுக்கு எதிராக போராடி வருவதால் நாடு முழுவதும் காங்கிரசுக்கு எதிரான நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த சில வருடங்களாக ஆளும் காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுவந்த திருணமூல் காங்கிரஸ் கட்சி சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்த்து தனது ஆதரவை விலக்கிக் கொண்டுள்ளது. மேலும் தொடங்கவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் காங்கிரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவர முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் காங்கிரசின் தேர்தல் குழு மேலாளராக ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2004ஆம் ஆண்டு முதல் நடந்து வரும் பெரும்பாலான தேர்தல்களில் காங்கிரசை ராகுல் காந்தி வழிநடத்தினார். அவர் தேர்தல் பொறுப்பேற்ற மாநிலங்களில் காங்கிரஸ் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்துவிடவில்லை. குறிப்பாக அவர் கடும் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோதும் உத்தர பிரதேசம், பீகார் ஆகிய சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது.
ராகுல் காந்தியை தேர்தல் பிரிவு மேலாளராக அறிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, அவரை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதற்கு தயக்கம் காட்டுவதை ஊடகங்கள் சுட்டிக் காட்டுகின்றன. அதற்கு முக்கிய காரணம் ஒன்று இருக்கிறது.
தற்போது நிலவும் சூழ்நிலையில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வருமா என்ற சந்தேகம் நிலவுகிறது. ஒரு வேளை காங்கிரஸ் ஆட்சியை இழந்துவிடுமானால் ராகுல் காந்தியை பிரதமராக ஏற்க மக்கள் மறுத்துவிட்டார்கள் என்ற எண்ணம் வலுப்படும். இப்போதைய சூழலில் காங்கிரசுக்கு நேரு குடும்பத்தை விட்டால் வழியில்லை. அதனால் காங்கிரஸ் இம்முறை கவனமாக களமிறங்குகிறது. பிரதமர் பதவியில் ராகுல் அமருவாரா மாட்டாரா என்பதற்கு மக்களிடம் தான் பதில் இருக்கிறது.
Friday, November 23, 2012
நுகர்வோர் பாதுகாப்பில் அலட்சியம்
நுகர்வோர் மத்தியில் விழிப்புணர்வை அதிகரிக்கும் முயற்சியில் அரசு ஒருபுறம் ஈடுபட்டாலும் இன்னொரு பக்கத்தில் அரசின் முயற்சிகளை நசுக்கும் விதத்தில் அரசு நிறுவனங்களே நுகர்வோரைக் காயப்படுத்துகின்றன. அதிலும் ஆசியாவில் மிகப் பெரிய நிர்வாகங்களில் ஒன்றாகத் திகழும் ரயில்வேயில் ஏராளமான அலட்சியங்கள் நடக்கின்றன.
விஷயம் இதுதான். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வசந்தகுமார் என்பவர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணச் சீட்டு முன்பதிவுக்காகச் சென்றிருந்தார். தன் பயணம் தொடர்பாக அவர் விசாரித்துக்கொண்டிருந்தபோது டிக்கெட் கொடுப்பவருக்கும் அவருக்கும் இடையே ஏதோ வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. பேச்சு முற்றிப் போய் வார்த்தை தடித்திருக்கிறது. ஒரு கட்டத்தில் பணியாளர்கள் வசந்தகுமாரை அடிக்கக் கை ஓங்கியிருக்கிறார்கள்.
வசந்தகுமார் ரயில்வே துறையில் பணியாற்றும் மேலதிகாரிகளிடம் புகார் செய்திருக்கிறார். பலன் இல்லை. குமார் விடவில்லை. தெற்கு ரயில்வேயின் பொது மேலாளர் வரையில் புகார் தெரிவித்தார். அப்போதும் எந்த நடவடிக்கையும் இல்லை.
வசந்தகுமார் வழக்கறிஞர். உயர் தீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பால் வசந்தகுமார், இந்த புகாரின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த நவம்பர் மாதம் ரயில்வே துறையைக் கடுமையாக எச்சரித்துள்ளார்.
நுகர்வோர் பற்றிய விழிப்புணர்வு அரசுப் பணியாளர்களுக்குக் குறைவாக இருப்பதே இதற்குக் காரணம். வாடிக்கையாளர்களிடம் நேரடியாகத் தொடர்புகொள்ள வேண்டிய பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு இந்த விழிப்புணர்வும் பொறுப்புணர்வும் கட்டாயம் இருக்க வேண்டும். 'நுகர்வோரே முக்கியமானவர்' என்று கூறினார் மகாத்மா காந்தி. ஆனால் சுதந்திரம் கிடைத்து 65 ஆண்டுகள் கழித்தும் நுகர்வோர் நலன் பற்றிய பொறுப்புணர்வு வளர்த்தெடுக்கப்படாதது கவலைக்குரிய விஷயம்.
சேவைகளில் குறைவு ஏற்பட்டால் நுகர்வோருக்குக் கோபம் வருகிறது. ஆனால் மக்களில் பலர் அவமானம் ஏற்பட்டாலும் கூச்சத்தால் மௌனமாக இருக்கிறார்கள். நுகர்வோர் உரிமைக்காக யாராவது குரல் கொடுத்தால் அவர்களுக்குப் பெரிய அளவில் ஆதரவு கிடைப்பதில்லை அமைப்பின் மீது இருக்கும் அவநம்பிக்கையும் செயல்படுவதில் உள்ள சுணக்கமுமே இதற்குக் காரணம். ஆனால் முனைப்புடன் செயலாற்றி மாற்றங்களைக் கொண்டுவந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். எனவே நமது அடிப்படை உரிமைகளில் சுணக்கம் ஏற்பட்டால் தைரியமாகக் குரல் எழுப்பும் சூழல் உருவாக வேண்டும்.
(சென்னை சலனங்கள் - 1)
குழந்தைகளை பிச்சை எடுக்க விடலாமா?
கடந்த 17ஆம் தேதி சனிக்கிழமையன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள புறநகர் பேருந்து நிலையத்தில் இளம் பெண் ஒருவர் கையில் குழந்தையுடன் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். அங்கிருந்த காவலர்களுக்கு அந்தப் பெண்ணின் மீது சந்தேகம் வந்தது. அந்த பெண்ணைக் கூப்பிட்டு விசாரித்தார்கள். அவர் கூறிய தகவலைக் கேட்டுக் காவல்துறையினர் அதிர்ந்து போனார்கள்.
அந்த குழந்தை அக்டோபர் 29ஆம் தேதி ஸ்டான்லி மருத்துவமனையில் பிறந்தது. அந்த குழந்தையின் தாய் ஒரு விதவை. இந்தக் குழந்தை முறை தவறிப் பிறந்தது என்பதாலும், அந்தத் தாய் ஏழை என்பதாலும் அதை விற்றுவிட முயற்சித்திருக்கிறார் என்பதும் தெரிய வந்தது. அப்போது முனியம்மா என்பவரிடம் 1000 ரூபாய்க்கு விற்க முயற்சி செய்திருக்கிறார். முனியம்மா பேரம் பேசி நூறு ரூபாய்க்கு வாங்கியிருக்கிறார்.
கடந்த மாதம் நாளிதழ்களில் வெளிவந்த மற்றொரு செய்தியும் இதன் தொடர்பில் கவனிக்கத் தக்கது. ராயபுரம் அரசு பொது மருத்துவமனையில் ஒரு குழந்தை தொலைந்து போனது. விசாரணையில் குழந்தை பிறக்காத ஏக்கத்தால் ஒரு பெண் திருடியதாகத் தெரியவந்தது. இந்த குழந்தையின் தாய் குழந்தையைக் காணாமல் தவித்தப்போது மருத்துவமனையின் டாக்டரும், நர்சுகளும் அவரைக் கடுமையாக மிரட்டியுள்ளார்கள்.
குழந்தையை விற்பது, திருடுவது இரண்டும் அரசு மருத்துவமனைகளில் நடந்திருக்கின்றன. வசதி அற்ற பிரிவினரில் பெரும்பாலான குழந்தைகள் அரசு மருத்துவமனைகளில்தான் பிறக்கின்றன. இந்த மருத்துவமனைகளில் இதுபோல நடப்பது அதிர்ச்சி தருகிறது. அலட்சியம், கண்காணிப்பின்மை, எந்தப் பாதுகாப்பும் அற்ற சூழல் ஆகியவையே இதுபோன்ற சம்பவங்களுக்குக் காரணம் என்பதில் சந்தேகமில்லை.
இதுபோன்ற சம்பவங்களைத் தொடர விடாமல் சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவமனைகளில் பாதுகாப்பைக் கூட்ட வேண்டும். அங்குள்ள பணியாகளின் பொறுப்புணர்வைக் கூட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குழந்தைகளை வைத்து பிச்சையெடுப்பதைத் தடை செய்வது இதுபோன்ற குற்றங்களைக் களைய உதவும். குழந்தை தொழிலாளர் போன்று இதுவும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைதான்.
இந்த விஷயத்தில் பொதுமக்களுக்கும் பொறுப்பு உள்ளது. குழந்தையை வைத்து பிச்சையெடுப்பவர்கள் மீது சந்தாகம் எழுந்தால் அமைதியாகக் கடந்து செல்லாமல் குழந்தைகளுகு உதவுவதற்கான இலவச அழைப்பு எண் 1098ஐ அழைத்துத் தகவல் அளியுங்கள். ஒரு குழந்தையின் வருங்காலத்தைக் காப்பாற்றும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கும்.
(சென்னை சலனங்கள் - 2)
சவீதா விவகாரம் நடந்தது என்ன?
உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் இந்திய வம்சாவளிகள் வசித்து வருகிறார்கள். சில நாடுகளின் சட்டதிட்டங்கள் அங்குள்ள மக்களின் வாழ்வாதாரங்களை அழிப்பதாக இருக்கிறது. இந்த விஷயத்தில் அந்த நாடுகளில் வசிக்கும் இந்தியர்களும் தப்ப முடிவதில்லை. சமீபத்திய உதாரணம் சவீதா.
இப்போது சவீதாவின் கதையைப் படிப்போம். அயர்லாந்தில் வசித்த பெண் மருத்துவர் சவீதா ஹலப்பனாவர். அவர் சில மாதங்களுக்கு முன்னால் கர்ப்பமடைந்துள்ளார். ஆனால் வயிற்றில் இருந்த குழந்தை இறந்துவிட்டது. அதனால் சவீதா முழுமையாக கருக்கலைப்பு செய்துகொள்வதற்காக மருத்துவர்களை அணுகினார். சவீதாவும் ஒரு மருத்துவரே என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அந்த நாட்டில் கருக்கலைப்புத் தடைச் சட்டம் அமலில் உள்ளதால் கருக்கலைப்பு செய்ய ஐரிஷ் நாட்டு மருத்துவர்கள் மறுத்துவிட்டார்கள். கருவின் மூலமாக விஷம் பரவியதால் சவீதா செப்டிசீமியா என்ற மோசமான பாதிப்புக்கு உள்ளாகி மரணமடைந்தார்.
இந்த சம்பவம் உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களிடம் அதிர்ச்சியலையை ஏற்படுத்தியுள்ளது. அந்த நாட்டிலும் கருக்கலைப்பு எதிரான போராட்டங்கள் தலைதூக்கியுள்ளன. கருக்கலைப்பு விதிகளை தளர்த்தக்கோரி அந்நாட்டு தலைநகரம் டப்ளினில் 2 ஆயிரம் பேர் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டம் நடந்தது. அதேபோல், லண்டனில் உள்ள அயர்லாந்து தூதரகத்திலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களிடம் இந்த மரணம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய வெளியுறவுத் துறை அயர்லாந்து அரசை தொடர்புக் கொண்டது. அதன் காரணமாக சவீதாவின் மரணம் குறித்து 7 பேர் கொண்ட விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.
ஆனால் அந்த விசாரணை குழுவில் சவீதாவுக்கு சிகிச்சையளித்த கால்வே மருத்துவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 3 பேர் இருப்பதால் நியாயமான விசாரணை நடக்காது என்று சவீதாவின் கணவர் பிரவீண் ஹலப்பனாவர் கூறினார். இதையடுத்து அந்த மூன்று பேரையும் குழுவில் இருந்து நீக்குமாறு அயர்லாந்து பிரதமர் எண்ட கென்னி உத்தரவிட்டுள்ளார். மேலும், பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள கருக்கலைப்பு மறுப்புச் சட்டத்தை உடனடியாக திருத்த முடியாது என்றாலும் திருத்தம் கொண்டுவர பரிசீலிப்பதாக அவர் உறுதியளித்தார்.
இந்த விவகாரத்தில் ஒரு செய்தியை நாம் கவனிக்க வேண்டும். கருக்கலைப்பு செய்வது பாவம் என்று கத்தோலிக்கர்கள் நினைக்கிறார்கள். இந்த எண்ணம் அவர்களின் ஆதிக்கத்தில் உள்ள நாடுகளின் சட்டங்களில் எதிரொலிக்கிறது. இதனை அமல்படுத்துவதால் ஏற்படும் தீமைகளை அவர்கள் கணக்கில் கொள்வதில்லை.
யதார்த்த உணர்வற்ற இந்த சட்டங்களால் அந்த நாடுகளில் வசிக்கும் இந்தியர்களும் பாதிக்கப்படுகிறார்கள்.
ஆனால் நமது நாட்டிலோ, வெளிநாட்டவர்களுக்கு கருணை காட்டப்படுகிறது. மேலும் வெளிநாட்டு மதங்களைச் சேர்ந்தவர்களையும் பரந்த மனப்பான்மையோடு அணுகுகிறோம். இந்த சூழ்நிலை நமது சட்டங்களில் எதிரொலிக்கிறது. எனவே பாரதம், உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்பதில் பெருமிதம் கொள்வோம்
Subscribe to:
Posts (Atom)